மாரி வாயில் மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி
சோமசுந்தர பாரதியார்
1. மாரி வாயில் மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. பதிப்புரை
4. நுழைவாயில்
5. முன்னுரை
6. மதிப்புரை
7. முதற்பதிப்பு முகவுரை
8. முதற் பதிப்பு - முன்னுரை
9. கதைச் சுருக்கம்
10. சிறப்புப் பாயிரம்
11. மாரி வாயில்
12. மாரிவாயில் - குறிப்புரை
13. மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி
14. கணியம் அறக்கட்டளை
மாரி வாயில் மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி
சோமசுந்தர பாரதியார்
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : மாரி வாயில் மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி
தொகுப்பு : நாவலர் பாரதியார் - நற்றமிழ் ஆய்வுகள் - 3
தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி
பதிப்பாளர் : ஆ. ஆதவன்
பதிப்பு : 2009
தாள் : 16 கி வெள்ளைத்தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 184
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 115/-
படிகள் : 1000
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்சு, இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : ஆதி பதிப்பகம்4/2, 2 வது மாடி சீனிவாசா தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004.
பதிப்புரை
20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும் பங்களிப்பைச் செய்த குடும்பம். வணங்குவோம்.
பெருமை பெற்ற பிறப்பினர் முதல் , முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முதுமுனைவர் வரை 15 பெருந் தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை, தமிழின்பாலும், தமிழினத்தின்பாலும், இந்தியப் பெருநிலத்தின் விடுதலையின்பாலும் அவர் கொண்டிருந்த பற்றினை ஆசிரியர் ச.சாம்பசிவனார் எழுதிய சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் காண்க.
எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஈ.வெ.ராமசாமி வணக்கம். என்று தொடங்கி தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்- . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள்.
குகை விட்டுக் கிளம்பிய புலியெனப் போர்க்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்லவேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்! - இது பேரறிஞர் அண்ணா கூறியது.
அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சான்றோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நண்பர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர்.
தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேறவில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும்.
தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டியவரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்தவருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதிகளாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி.
இந்நூலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், நூல் கட்டமைப்பாளர் (Binder), வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி.
இந்நூல்களை வாங்கிப் பயனடைவீர்.
- பதிப்பாளர்
நுழைவாயில்
இந்நூலில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் எழுதிய மாரிவாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி ஆகிய இரு படைப்பிலக்கியங்கள் உள்ளன. இரு நூல்களின் நூல்நயம் குறித்து இப்பகுதி ஆராய்கிறது.
மாரி வாயில்
மாரி - மேகம்; வாயில் - தூது. இது, பாண்டியனின் மகள் சித்திராங்கதை, தன் காதற் கணவன் அருச்சுனனுக்கு, மேகத்தைத் தூது அனுப்புவதாகப் பாடப்பெற்ற சிற்றிலக்கியம். நூலின் தொடக்கத்தில் தமிழ் வணக்கம் 3; தமிழ்ப் பல்லாண்டு 10; தமிழ்த்தாய் வாழ்த்து 1; அவையடக்கம் 1 ஆகப் பதினைந்துப் பாடல்களும், நூலின் இறுதியில் வாழ்த்துப்பா 1ம் தவிர 223 விருத்தப் பாக்களைக் கொண்டது. தென்னாடும் தென்குமரியும் முதல் பார்த்தன் பதிலுரை விழுமமும் விழையும் விள்ளாய் ஈறாக 32 உட்தலைப்புகளைக் கொண்டது.
நூல் எழுந்த காரணம்
நாவலர் பாரதியார் 1906ஆம்ஆண்டு, தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய காலமுதற்கொண்டு, ஆண்டுதோறும் கோடை வெயில் கொடுமைக்கு அஞ்சி குளிர்ப்பகுதிகளுக்குத் தம் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். அவ்வகையில் 1909இல் தம் கோடை விடுமுறையைக் கழிக்கக் கன்னியாகுமரி சென்றார். அப்போது இவர், ஒரு தமிழக் கிறித்தவரையும், ஆங்கில வடமொழிவல்ல அவர்தம் மராத்திய மனைவியையும், அவ்வம்மையாரின் உடன்பிறந்தாரையும் சந்திக்க நேர்ந்தது. அவர்களொடு கலந்துரையாடும் காலத்து, மராத்திய நங்கை, மராட்டியர்கள் தங்கள் மொழியில் புத்தம் புதிய காவியங்களையும், நாவல்களையும் உருவாக்கி வருகின்றனர்; ஆனால் தமிழர்களோ தங்கள் பழம்பெருமை மட்டுமே பேசி வருகின்றனர்; புத்தம் புதிய இலக்கியங்களை உருவாக்கவில்லை என்று கூறி நகைப்பாராயினர். அன்னவரொரு வீண் பெருமை பேசுவது பயனற்றது என்று கண்ட நாவலர் பாரதியார், ஒவ்வொருநாளும் புதிதாகப் பாட்டும் பனுவலும், உரைக் கதையும் புனைந்து, மாலைதோறும் அவர்கட்குப் படித்துக் காட்டி இன்புறுத்துவாராயினர். அப்படிப் பாடிய பாடல் மாரி வாயில் என்ற நூல் வடிவமுற்றது. தூதுக்குரிய மூலக் கூறுபாடு தமிழில் மேகவிடு தூது நூல்கள் இரண்டு உண்டு என்று தெரிகின்றது. ஒன்று திருநறையூர் நம்பி மேகவிடு தூது; மற்றொன்று மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது. இவ்விரண்டும் முறையே திருநறையூர், மணவாபுரி ஊர்களில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருமாலிடத்து மையல் கொண்ட தலைவி ஒருத்தி, அவரிடத்தே தன் ஆற்றாமையைத் தெரிவித்து அவர் அணிந்த திருத்துழாய் மாலையை வாங்கி வருமாறு மேகத்தைத் தூது அனுப்பியதாகப் பாடப்பட்டதே மாரி வாயில் ஆகும்.
தூது இலக்கணம்
தூது இலக்கியங்களைக் கலிவெண்பாவிற் பாட வேண்டும் என்ற விதிக்கிணங்கவே தூது இலக்கியங்கள் பாடப்பெற்றுள்ளன. ஆனால் நாவலர் பாரதியாரே, மாரி வாயிலைக் கலிவெண்பாவிற் பாடாமல், விருத்தப் பாவிற் பாடியுள்ளார்.
கதை மூலம்
இக்கதைக்குளீய மூலம் பாரதத்தில் உள்ளது. புண்ணிய நன்னீராட்டுப் பயணத்தை மேற்கொண்ட பார்த்தன், மதுரைக்கு வந்தபோது, பாண்டியனைக் கண்டு, அவனின் விருந்தினரனாகச் சிலநாள் தங்கினான். அப்போது மன்னனின் மகள் சித்திராங்கதையைக் கண்டு, காமுற்றான். காதல் இருவரும் கந்தருவ முறையால் காமம் துய்த்தனர். பாண்டியனும், தன் மகளைப் பார்த்தனுக்கு மணமுடித்துக்கொடுத்தான். சித்திராங்கதை, பப்ருவாகனன் என்னும் ஆண்மகவைப் பெற்றாள். பார்த்தன், தன் துணைவியையும், மகனையும் மதுரையில் விட்டுவிட்டுக் குமரித் துறைக்கு நீராடச் சென்றவன், திரும்ப மதுரை வராமல் வடக்கே இந்திரப்பிரத்தபுரிக்குச் சென்றுவிட்டான் என வில்லிபாரதம் கூறும். இக் கதையை அடிப்படையாகக் கொண்டு புனையப் பட்டது இம் மாரி வாயில்.
கதைச் சுருக்கம்
அருச்சுனன், இந்திரப்பிரத்தம் சென்றபின், சித்திராங்கதை யின் நிலை என்னாயிற்று என்பதைத் தம் கற்பனைக்கண் கொண்டு நோக்குகின்றார் நாவலர் பாரதியார். பார்த்தனின் பிரிவாற்றாது கலங்கிய சித்திராங்கதை, அவன் சென்ற கன்னியாகுமரித் துறைக்குச் சென்றாள். ஆங்குக் குமரித் தெய்வத்தை வணங்கித் தன் கணவன் மீண்டுவந்து தன்னொடு வாழவேண்டும் என்று வேண்டித் தவம் கிடக்கின்றாள். அப்போது கார்காலத் தொடக்கம். காலையில் நீராடுபவள், கீழ்வானத்து அடிவாரத்தில் தேர்போல் ஊர்ந்து வரும் ஒரு மேகத்தைக் காண்கின்றாள். அஃது உண்மையான தேர் என்றும், தன் கணவன் அதிலேறி அவன் தந்தையான இந்திரனின் ஊருக்குச் சென்று திரும்புகின்றனன் போலும் என்றும் நினைத்து மகிழ்கின்றாள். அது, தேரதன்று, கார்கால மேகம் என்று தோழி கூற, உண்மை உணர்கின்றாள். தான்படும் பிரிவு நோயினையும், ஆராக் காதலன்பையும் பார்த்தனுக்குச் சொல்லி அவனைத் தன்பாற் கூட்டி வைக்க வேண்டுமென்று மேகத்திடம் மொழிகின்றாள். அவ்வாறே மாரியும், அவள் கூற்றை அன்புடன் செவிமடுத்து, விண்வழி விரைந்தேகிப் பாண்டவர்தம் பதியணுகிப் பார்த்தனைக் கண்டு செய்தி பகர்கின்றது. அவனும் விருப்புடன் கேட்டுத் தன் தமிழ்ப் பெரு மனையாளாம் சித்திராங்கதையின் பெருமை பாராட்டித் தன் காதன் மிகுதியையும் எடுத்துரைக்கின்றான். தன் தமையன் தருமனின் ஆட்சி சிறக்க, அவன் கட்டளைக்கேற்பப் பகைவரைப் பொருது அடக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும், அப் பொறுப்பினை நிறைவேற்றியபின் பாண்டிய நாடு மீண்டு தன் தமிழ் மனைவியுடன் பிரியாது வாழவிருப்பதாகவும், அதுகாறும் அவள் ஆற்றியிருக்கவேண்டும் என்பதாகவும் மறுமொழி கூறி, அம் மாரியை அனுப்பி வைக்கின்றான். மாரியும், பார்த்தன் பகர்ந்தன வெல்லாம் மீண்டுவந்து சித்திராங்கதைக்குச் செப்புகிறது. இதுவே மாரி வாயில் கதைச் சுருக்கமாகும்.
மேக சந்தேசமும் மாரி வாயிலும்
இராமாயணத்தில் இராமனால் அனுப்பப்பட்ட அனுமன், சீதையைக் கண்டு திரும்பிவந்த நிகழ்ச்சியை மனத்திற் கொண்டு காளிதாசர் மேகசந்தேசம் பாடினார் என்பர் அறிஞர். அந்த மேக சந்தேசத்தைப் பின்பற்றி இம் மாரி வாயிலை யாத்துள்ளார் நாவலர் பாரதியார்.
இவ்வகைப் பிரபந்தங்களுள், வடமொழியில் காளிதாச கவி யியற்றிய மேக சந்தேசம் பலமானது. அது குபேரனது கோபத்தால் ஓராண்டு ஊரைவிட்டு விலகியிருக்க நேர்ந்த ஒரு கந்தருவன், தன் காதல் மனைவிக்கு மேகத்தைத் தூது அனுப்பியதாகப் புனைந் துரைக்கும் செய்யுள். இம் மாரி வாயிலும் பாண்டவருள் நடுப் பிறந்த பார்த்தனுக்கு, அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள், மாரியைத் தூதனுப்பியதாகக் கற்பித்துக் கூறுகிறது என்று இவரே குறிக்கின்றார்.
மாரி வாயிலின் சிறப்புக் கூறுகள்
1. இயற்கை வருணனை, 2. புராணக் கதை, காப்பியச் செய்தி, 3. உவமை, உருவகம், 4. கற்பனை, 5. காதற் சிறப்பு, 6. பன்னூல் தாக்கம், 7. தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகள், 8. தமிழின் சீர்மை, 9. தமிழர் ஏற்றம் ஆகியன இம் மாரி வாயிலின் சிறப்புக் கூறுகளாகக் கருதத்தக்கன.
1. இயற்கை வருணனை: மலை, ஆறு, கடல், மேகம், காற்று, நானில வளம், நாடு - ஆகியன இப்பகுதியில் அடங்கும். விந்திய மலை என்ற அரசன், மேற்குமலைத் தொடர்ச்சி, கிழக்குமலைத் தொடர்ச்சி எனும் இருகரங்களால் தென்னிலமகள் என்னும் காதலியை அரவணைக்கிறான் (80). மலயம் எனும் ஒரு பசுவுக்குக் காவிரி, வெள்ளாறு, பாலாறு, பெண்ணை எனும் நான்கு முலைக் காம்புகள்; அது தரும் பாலே தமிழ் (49).
கோங்கம், அகில், குங்குமம், தக்கோலம், கறி என்ற குறிஞ்சி நிலப் பொருள்கள்: நெல், இக்கு, கரும்பு, இளநீர் என்ற மருதநிலப் பொருள்கள்; வளை, வித்துருமம் என்ற நெய்தல்நிலப் பொருள்கள்; காவி, தேன் என்ற முல்லைநிலப் பொருள்கள் - இவ்வாறு நானிலப் பொருள்களும் மயங்கும் தமிழ்நாடு (44).
வடக்கே வேங்கடம், தெற்கே குமரி, இவற்றிடையே உயர்போதம்வளர் தமிழ்நாடு, சங்கம் வளர் தென்னாடு (1, 2), கங்கை மண்ணை நணுகுமுன் பழையர்நாட்டை மன்னராய் ஆண்டுமாண்ட வழுதியர் பாண்டிநாடு (113), கள்ளாரு நறுஞ்சோலைத் தண் படப்பை கழனிபல களமர் சாறு தள்ளாத வளமனைத்தும் தரும் புனல்நாடு (48) - என இயற்கை வருணனை பலவிடத்தும் காணப்படுகின்றது.
(2) புராணக் கதை, காப்பியச் செய்தி : மாரி வாயிலில், புராணக் கதைகளும், பாரதம் இராமாயணச் செய்திகளும் சுட்டப்படுகின்றன. திருவிளையாடற்புராணத்தில் வரும், கடல்சுவற வேல்விட்டது, மீனாட்சி திருமணம், வன்னியும் கிணறும் சாட்சி கூறியது முதலாயினவும்; பாரதத்தில் வரும் காண்டவ தகனச் சருக்கம், அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம், திரௌபதி திருமணம் ஆகியனவும்; இராமாயணத்தில் வரும் மாரீசன் வதை, சிறையிருந்த சீதை, இராமன் பெருமை ஆகியனவும் (4, 7, 11, 15, 28, 92, 94, 112, 147, 160, 164, 165, 187, 199) இடம்பெற்றுள்ளன.
(3) உவமை, உருவகம் : தென்னவர் புகழும் செந்தமிழ்ப் பரப்பும் அன்னதென்கடல், அருச்சுனன் மார்பு, பல மகளிர் நலன்களைத் தோய்ந்து பொதுவாயது போலப், பலவற்றையும் வாரிக் கொண்டுவரும் இரண்டு பெண்ணையாறுகள்; காவியம் உருக் கொண்டது போன்ற கவின்பெறுங் கோயில்; கோப்பெருந் தேவி போலச் சாதலாள் உய்வள் என்பன உவமைகளிற் சிலவாம் (5, 6, 100, 188). காதல் இருங்கடல் படிந்து, கவலையெனும் கரு முதிர்ந்து; அன்பு - அரும்பு; நட்பு - போது; காதல் - மலர் என்பன உருவகத்தில் சில (18,212).
(4) கற்பனை : வைகை, கடலொடு கலக்காமைக்குரிய காரணமாக வருவது; முன்னொரு காலத்தில் தென்பாண்டி நாட்டின் பெரும் பகுதியைக் கடல் விழுங்கியதால், அக் கடலொடு சினங்கொண்டதாலேயே அதனொடு கலக்கவில்லை (39). கோதாவிரி கடலொடு கலப்பது கடலரசன் தன் காதலியான தென்னில மக்களின் மார்பைத் தழுவும் பொருட்டுத் தன் தடக்கை நீட்டுவது போன்றது; மலையாகிய அரசன் தன் மகளாகிய தென்னில மகளை அலையரசன் விரும்பி மணக்க மகிழ்ந்து வார்க்கும் நீரின் ஒழுக்குப் போன்றது (74); கடலிலா நாட்டிற் பிறந்த அருச்சுனன், இப்போது பெண்டிர் கண்களாகிய கடல்களைத் தூர்க்கும் எழில்மேனி கொண்டவன் (185) - என வருவன கற்பனைக்குச் சான்றுகள்.
5. காதற் சிறப்பு : பார்த்தனைப் பிரிந்தமையால் துயருறும் சித்திராங்கதை வாயிலாகக் காதற்சிறப்பு விரிவாகப் பேசப்படுகின்றது. கண்களி யூட்டக் காதல் நீத்தம் நான் நிலையேன்; நிறையுடன் நாணம் நெகிழ்ந்தது; உடல் வேர்த்தது; கைபிசைந்து விம்மி அழுதேன்; காமக் களிறு தடிந்து, உள்ளம் தளிர்க்க என்னை மணக்கச் செய்யத் தோழிபால் வேண்டினேன்; அவனோ கண்ணியும் மாலையும் மணிக் கணையாழியும் தந்தான். கடிமணமும் நிகழ்ந்தது. மங்கை! உனை மழைமறக்கும் பயிரெனினும் மறந்து நான் உயிர் வாழமாட்டேன் என்றான் அவன். உனது இரண்டு காந்தள்மலர்க் கையால் எனைத் தழுவுக என்றபோது நானும் பரவசத்தால் தழுவினேன். என்னை நோக்கி, மகளிர் எழில் விளக்கு நீ என்றான். பிற மகளிரையும் அவர்தம் எழிலையும் வியந்தானே என எண்ணி ஊடினேன்; அவனோ, தன் மலர்க்கரம் கூப்பி எனைத் தொழுதான். நான் முறுவல் பூத்தேன். மீட்டும் எனைத் தழுவி மகிழ்ச்சிக் கடலில் மிதக்கச் செய்தான். அவன் பிரிந்து போனதால், கடல் முத்தும், தன் தென்சந்தனக் குழம்பும், நன்கலை மதியும் கண்டபோதெல்லாம் வெறுக்கிறேன் என்று அவள் பேசுவதைச் (118 - 178) சான்றாகக் காட்டலாம்.
(6) பன்னூல் தாக்கம் : நற்றிணை, பரிபாடல், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், பெருங்கதை, கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் வெண்பாமாலை, பிள்ளைத் தமிழ், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருவருட்பா, மனோன்மணீயம் முதலான பன்னூல்களின் தாக்கத்தை இம் மாரி வாயிலில் காணலாம்.
(7) தமிழ் இலக்கண இலக்கிய மரபுகள் : இந்நூலில் பின்வரும் தமிழ் இலக்கண - இலக்கிய மரபுகள் காணப்படுகின்றன.
(அ) தமிழ் அகப்பொருள் இலக்கணத்தில் பேசப்படும் களவு - கற்பு என்னும் இருவகைக் கைகோளும் இதன்கண் இயம்பப் படுகின்றன. பூத்த புன்முறுவல் உள்ளப் புணர்வொடு புளகம் கூர; செம்மை ஈதெல்லாம் தெய்வத் திருவுளக் குறிப்பாம் என்பன களவுக்குரியன. கணிகன் இசைந்த நாளில் மன்றல்தர என்பது களவுவழி வந்த வரைவாகும் (118, 127, 146).
(ஆ) கண்களியூட்டக் காதல்; உள்ளப் புணர்வொடு என்று வருவன (118) களவுக்குரிய காட்சியும் உள்ளப் புணர்ச்சியுமாம்.
(இ) களவு நிகழ்ச்சியில் வரும் அறத்தொடு நிலையானது, அறத்தொடு நின்று அவள் மொழி கேட்டு என்ற பாடலில் (140) சுட்டப்படுகின்றது.
(ஈ) வேர்த்துடல் விதிர்த்து நின்று, வெறுங்கைகள் பிசைந்து விம்மி (121) என வருவது பொறிநுதல் வியர்த்தல் என்ற மெய்ப்பாடாகும்.
(உ) ஊர் நகையை நாணும் (120) என்பது அலர் ஆகும்.
(ஊ) சூழ் எனத் தோழி சொல்வாள் (124) என்பது, களவின்கண் தோழி கூற்று.
(எ) தனதுரிய தாய் (136) என்பது, தோழி தானே செவிலி மகளே என்பதனை உட்கொண்டது.
(ஏ) ‘பாஞ்சாலன் பெண்ணொருத்தி ஐவர் மணம் பெறுமாருண்டோ? (159) என வருவது இயற்பழித்தல் ஆகும்.
(ஐ) பஞ்சவரைப் புகழ்மடந்தை பொதுமணத்தல் பண்பலவோ பகர்வாய் (161) என்பது இயற்பட மொழிதல் ஆகும்.
(ஒ) தன்கை கூப்பி மிக வணங்க (152) என்பது புலவிக் காலத்துத் தன் தலைவியின்முன் தலைவன் பணியலாம் என்ற விதிக்கு உட்பட்டது.
(ஓ) நூலின் தொடக்கத்தில் வரும் தமிழினைப் போற்றுதும் என்ற வணக்கமும், நூலியற்ற அஞ்சாமைஎன்பா லறம் என்ற அவையடக்கமும், வாழ்க ஏர்தொழில் என்ற இறுதி வாழ்த்தும் காவியமரபையொட்டியன.
(ஓள) தந்தையைக் காட்டக் கேட்கும் (206) என்பது பிள்ளைத்தமிழில் வரும் அம்புலிப் பருவத்தைப் பின்பற்றியது.
(8) தமிழின் சீர்மை : நூலின் இயற்கை எழிலும், காதற் சிறப்பும், பின்னிப் பிணைந்து கிடந்தாலும், நூல் முழுதும் தமிழின் சீர்மை விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றது.
தாய்த்தமிழ், தென்மொழி, தீந்தமிழ், தொன்மொழி, சொற்றமிழ், தமிழணங்கு, தமிழ்நங்கை, தமிழ்இறைவி, செந்தமிழ், வளர் தமிழ், நல்ல தமிழ், இனிய தெய்வதம், மொழிகள் குலத் தனிவிளக்கு, காதல்வளர் கன்னி, முறையார் தமிழ், வண்டமிழ், தமிழ் மங்கை, வளருந்தரு தண்டமிழ், எங்கள் தமிழ், நற்றமிழ், தென்றமிழ், தெய்வப் பழந்தமிழ், பாண்டியர் தமிழ், நின்ற தமிழ், மெய்கண்ட தமிழ், வளர்பெரிய தமிழ், அமிழ்துஎழு தமிழ், தெய்வச் செழுந்தமிழ், தமிழ்த்திரு, முத்தமிழ், தமிழ்க்கடவுள் (22, 27, 31, 36, 39, 65, 75, 94, 107, 114, 146, 154, 155, 174, 194, 204 வாழ்த்து) என்பன தமிழைச் சிறப்பிக்கவரும் அடைமொழிகள்.
நமக்குத் தாய் - தமிழே; தாயைச் சேய் பேணல் தலையறம்; தாய்மார், தாம்பெற்ற மகட்குக் குழவிப் பருவத்துமட்டுமே முலைப்பால் ஊட்டுவர். ஆனால் தமிழன்னையோ, தமிழ் மக்கட்கு வாழ்நாள் முழுதும் முலைப்பால் ஊட்டுபவள். தேவாமிர்தத்தை விட இனியது தமிழ்மொழி. தாரகம், போசகம், போக்யம் என மூன்று நிலையிலும் உறுபொருளாய் அமைவது.
தமிழன்னை, நாவலந் தீவில் நடுநாயகமாய் உள்ளவள் - நாகரிக உலகிற்கே முதல் தந்தவள்; கடவுளரையே ஏவல் கொண்டவள்; கவின் கருவுயிர்த்தாள், எனினும் கன்னியே, முதல் இலள்; மூப்பும் இலள். மொழிகள்குல முதல்வி. உயிர்கட்கு உள இருள் அகலப் புன்முறுவல் ஒளி உதவுபவள். மக்கள் உயர்திணை என்று சொல்லப் படுதற்கு மொழியே காரணம்; அத்தகைய நிலையை அளித்தவள் இவள். முன்பு உலகினை ஆண்டவள்; தன்னை நாடிவந்த வடசொற்குத் தன் உலகின் வடபகுதியை உரிய நாடாக ஈந்து மகிழ்ந்தவள்; பின், பிற திசைமொழிகள் கருவழியுமாறு ஏப்பமிடத் தின்று ஒழித்த அச்செயற்கை மொழியாய வடசொல்லின் வன்பசி குறையுமாறு செய்து உயர்ந்தவள். உலகில் தோன்றிய மொழிகள் பல இறந்தொழிய, என்றும் நின்று நிலவுபவள் இவள். காலமும் இடமும் தன்னை எனைத்தானும் தொடராமல் எல்லையறியாத் தன் இளமை நலத்தால், கற்புயர் காதலை மெய்யான புலவர்க்கு அருளுபவள். வள்ளுவர், நக்கீரர் ஆகியோரின் மெய்ம்மொழிகளால் வளர்ந்த புகழ்மடந்தையின் மடியில் வளர்ந்தவள்; இத் தமிழ்மகளைத் தம் முதல் மகளாகக் கொண்டாள் பூமடந்தை. புலவர் உள்ளத்தில் புகுந்து அவர்தம் நல்நாவில் வளர்பவள்; கபிலர், கம்பர், இளங்கோ முதலானோரைத் தந்தவள்; கன்னி அழியாமல் கருவில் முதிர் கலைகளையும், கற்ப காலத்தும் அழியாத கவிகளையும் தருபவள். இத்தகைய நல்ல தமிழ் நங்கை வளத்தை நாடுவோம்; நானிலத்து மேன்மொழிகள் நல்கு பல நலனும் எல்லையறும் எழில் இளையாட்கு அணிந்து மகிழ்ந்து ஏத்திப் பல்லாண்டு பாடி, இசை வளர்ப்போம்.
தமிழ் - இனிய தெய்வதம்; மொழிகள் குலத் தனிவிளக்கு சொல்லாகிய அமிழ்தம் பெற விழைந்த தமிழ்ப் புலவர்கள் அசையாகிய கடலைக் கடைந்தபோது அத் துளியில் எழுந்த செல்வி; அறிவெனும் அலவன் துணைவி; அருள் முதல்வி; கவிஞர் உள்ளம் களிக்கும் காதல்வளர் கன்னி; என்றும் இளமையுடைய எழிலார் தமிழணங்கு.
அகம் புறம் எனும் பொருள்களின் துறைகள் நிறைந்த தமிழ்; வாடாத புகழ்வீசு தமிழ்மங்கை (22, 31).
- இங்ஙனம் தமிழின் சீர்மை நூல் முழுதும் பேசப்படுகின்றது.
(9) தமிழர் ஏற்றம் : மேகத்தில் ஊர்ந்துவரும் இந்திரனோடு ஒத்த இருக்கையுடைய பழங்குலப் பாண்டியர்; தறுகண் மறத்தமிழர்; தமிழர் படைகளை மலைவார் எவருமிலர்; அறத்தொழில் செய்வார்; தொழில், உறவு என இருதுறையும் வழிவழியாகக் கொண்ட தமிழ்வாணர்; கடல் ஏறிக் கழிநிதியம் கருதாதவர் எனினும் கப்பக் கிழிகொணர்ந்து தருவர்; அதனால் அறம் வளர்ப்பர். ஏவாமைத் தொழில் புரிவார்; ஏற்பது அறியார்; பண்புடையார்; பழையர்; உரன் உளம் கொண்டோர்; தென்னர்; செந்தமிழர்; தேயாச் சீர்த்தியர்; இல்லியல் மெய்யாம் காதல் மிதவையால் வீடு தேரும் நல்லியல் தமிழர் - எனத் தமிழர் ஏற்றம் உரைக்கும் (4, 41, 42, 46, 47, 87, 113, 214) நாவலர் பாரதியார், தெய்வங்களைப் பேசவந்தவிடத்தும், தடாதகை - தெய்வப் பழந்தமிழ் அரசி, தமிழர் போற்றும் சிவன், எழுதிணையில் இரு பொருளை ஈந்த தமிழ் இறைவி என்று போற்றுகின்றார். பார்த்தனைச் சொல்லும்போதும், தமிழும் ஆய்ந்து வேண்டள வறிந்துளானாம் என்பர் (94, 95, 154).
தமிழர் ஏற்றம் உரைத்ததோடு நில்லாமல், தமிழர்க்கும் வட நாட்டார்க்கும் இடையே காணலாகும் கொள்கை வேறுபாட்டை யும் குறித்துச் செல்கின்றார் நாவலர் பாரதியார். நல்லவை எல்லாம் ஆற்றல் நம்கடன் என்பர் தென்னர். வடவரோ, கடன்கள் எல்லாம் நல்லவை; மெலியார்தம்மை நலிவது ஆண்அறம் என்பார் என வடநாட்டுப் பார்த்தன் கூற்றாகக் (215) கூறுகின்றார் இவர்.
தமிழர்க்கும் வடவர்க்கும் நாகரிகம், நிலத்தியல், மொழிவழக்கு, நெறி, கலையுணர்வு, குலத்தியல், தொழில், அறம், கொள்கை - ஆகியவற்றில் வேறுபாடு உண்டு. இவை ஒன்றுக்கொன்று கலவாத படி காத்தது விந்தியமலை (79) என்பது இவர் கூற்று.
‘பாஞ்சாலிப் பெண்ணொருத்தி ஐவர் மணம் பெறு மாறுண்டோ? என்று கேட்பதோடு அமையாது, தந்தை, தன்னையர், தனயர், தம்மையாள நாடொறும் தம் உரிமையின்றி அடிமை கொண்டு வாழும் பெண்டிர் வாழ்வு தமிழகத்தில் வழங்கப் பெற்றதன்று; பெண்பாலார் ஆண்பாலார் அகப்புறவொழுக்கங் களில் முறையே தலையாய ஆட்சி புரிவர் (159, 213) என்று தமிழர் கொள்கையை வலியுறுத்துகின்றார் இவர்.
சமயக் கொள்கையிலும் இவ்விருவர்க்கும் வேறுபாடு உண்டு என்கின்றார் நாவலர் பாரதியார். மெய்கண்டார் சிவஞான போதத்தை மெய்கண்ட தமிழ் எனப் போற்றுபவர், சித்திராங்கதை வாயிலாக, வடநாட்டார் கொண்ட கேவலாத்துவிதப் பொருண்மை யினை மறுத்துத் தென்னாடுடைய சிவனையே போற்றும் சித்தாந்த சைவ அத்துவித உண்மையை வலியுறுத்துகின்றார் இவர் (173, 174).
மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி
தமிழின் தனி மாண்பு
193 பாக்களைக் கொண்ட இந்நூலைத் தமிழ் வாழ்த்துடன் தொடங்குகின்றார் ஆசிரியர்.
“பேசும் மனிதருடன் உலகில்” (1) என்ற பாடல் தமிழின் தனி மாண்பினை மொழிகின்றது. மனிதர்கள் என்று பேசத் தொடங்கி னார்களோ, அன்றே அவர்களுடன் தோன்றி, அவர்களுடனேயே தவழ்ந்து விளையாடிப், பொதியில் தென்றலில் ஊர்ந்து, இயல் இசை வளரத் திகழ்பவள் தமிழணங்கு! அறிவு தலைவன் என்றால், மொழிகள் அனைத்தும் அவனின் கிழத்தியர்கள்; ஆனால் அவன் முதன்முதல் மணந்த காதலறத் தலைவி - தமிழ்மகளே! அத்தகு அணங்கைத் தொழுவோம் என்ற பொருள்பட அமைந்தது இப்பாடல்! தமிழின் தனி மாண்பினை இவ்வகையில் எடுத்து மொழிந்தவர் வேறு யாருமில்லை எனலாம்!
இயற்கையின் எழில்நலம்
‘நிலமும் பொழுதும்’ என்ற தலைப்பில், இயற்கையின் எழில்நலத்தைப் பாடுகின்றார் பாவலர்.
"வானம் வறப்பினுங் குன்றாத
வளங்கெழு தென்பொதியை வாரம்
கானம் கனிகளொடு தேனும்
கரும்பொடு நெல்வயலும் ஈனும்" (1)
"ஏலம் கிராம்பு கருவாயும் … …
ஓயா தொழுகி அகழ் ஓம்பும்" (2)
வெள்ளி முளைத்துவிடி யாமுன் (5); கான்யாற்று வெள்ளத்தை (9); நீரில் கயல் உறங்கும் நெடிய நிலத்துக் கழுதுறங்கும் (166); சேவல் சிறகடித்துக் கூவ (181); வெள்ளை மலரினங்கள் குவிய (182) முதலான பல பாக்களில் இயற்கைக் காட்சி இயம்பப்படுகின்றது.
காதலோ காதல்
காதல் இன்பத்தைக் காட்டுதற் பொருட்டே இந்நூல் எழுதப் பட்டது. பண்டைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடிய தைந்நீராடலில் கதை தொடங்குகின்றது. வெள்ளிமுளைத்து விடியாமுன் விழவுத் தைந்நீராட விரைந்து சென்றாள் தலைவி; இருட்சோலை ஆற்றில் இறங்கினாள்; வழுக்கி வெள்ளத்தில் வீழ்ந்தாள். அதனைக் கண்ணுற்ற தலைவன், அச்சுழி வெள்ளத்தில் குதித்தான்; அவளைத் தாங்கினான்; கரை ஏறினான்; குராமரத் தடியில் படுக்கவைத்தான். இருவர் கண்களும் கவ்விக் கொண்டன. கலக்கம் கொள்ளல் எனக் கூறி மறைந்தான் (4 - 7). இது, தொல்காப்பியர் கூறும் களவின் முதல் நிகழ்ச்சியாகிய காட்சி என்பதை நினைப்பூட்டுகின்றது.
பொங்கல் விழாப் போட்டியின்போது பங்குபெற்று வாகைபல சூடிய தலைவன், விரைமுல்லைக் கொத்தொன்றை வில்லால் தொடுத்துத் தலைவியின் குழலில் இறுகச் செறித்தான் (16). பரிமீது ஊர்ந்து உலாவந்தபோது அவன் செருகிய அதே மலர்க் கொத்தைத் தன் கைகளால் எடுத்து, அவன்மீது வீசினாள் தலைவி. தலைவன் குத்துண்ட நிலையறிந்து துடிதுடித்த தலைவி அவனை உயிர்ப்பிக்க உறுதுணை புரிந்தாள்.
"காலை எனதுயிரைக் காத்த
காளைஎன் தீயவுடல் தீட்டால்
மாலை உயிர்துடித்து வருந்த
வாளா அமைந்திருக்க மாட்டேன்!
வேலை வளைந்தபுவி மீது
வெல்லும் அறம்எனுஞ்சொல் மெய்யேல்
பாலை என்பாற்படுத்தி ஏந்தல்
பல்லாண்டு வாழவரம் பெறுவேன்!" (72)
எனப் புகல்கிறாள். அவ்வாறே, அவன் அருகில் அமர்ந்து இன்னுரை சாற்றி, அசையவிடாமல் இருக்கச் செய்து உயிர்ப்பித்தாள். உணர்வு தெளிந்த அவன், தானாள என் உளத்தை வென்றாள் தரணி தனில்ஒருத்தி இவளே! (89) என்று பாராட்டினான். உடலும் உயிரும் உமதுடைமை, ஒருவாது எனக்கொளல்நும் கடமை! (95) என்கிறாள் தலைவி. அவனோ, அவள் கண்ணைத் துடைத்து நுதல் நீவிக் கதுப்பை இழுத்து முத்தம் இட்டு (102)
"அன்பே! எனதுயிர்ப்பெண் அழகே!
அருளின் உருஒளிரும் அறிவே!
இன்பே! எனக்குதவ மலர்விட்
டிறங்கி எழுந்தருளும் திருவே!" (105)
என்று பாராட்டினான். பின்னர் இருவர்க்கும் மணவினை நிகழ்ந்தது!
உவமை முத்துக்கள்
இந் நூற் கடலிடையே பல்வேறு உவமை முத்துக்கள் பளிச்சென ஒளிவிடுகின்றன. சிலமட்டும் இவண் காட்டலாம்:
கையில் மகவெடுக்கும் தாய்போல், காளை ஒருவனெனைத் தாங்கி (6); புத்தப் புதுப் புலியை அடர்க்கப் புகுந்த இளஞ்சிங்கம் போல்வான் (14); இல்லாத செல்வம்எய்தியிழந்த ஏழை எனஏங்கி (17); வள்ளி தனைமுருகன் விரும்ப வானத் தரசன்மகள் வெதும்பிக் கள்ளி எனப்பழித்த கதைபோல் (28); வானத் துரமாறும் முகில்போல் மாறிக் குழல்வேய்ந்து களிப்பாள் (39); நந்தி விலக்குபவர் இன்றி நாயை அடிப்பதுபோல் (55); வெருளு மதலைஎன அழுது (69); வானத் துளிவிரும்பும் புள்போல் (79); பண்கள் மிசைவிசும்பில் அறுகாற் பறவை திரிவதென மிதந்து (82); சொலும் தொடங்கி இடைமுறிவும் தொடுத்த தொடர் மொழியும் ஆக (83); செய்ய வேளும் வள்ளியும்போல் இனிது வாழ்வீர் (128); கன்று பிரிந்தபசுப் போல (162); மத்தால் உடைதயிரும் வானில் மதிமுன் இரிஇருளும் போல (174); பின்னைநீ கண்ணன்அவன் என்றும் பேராத காதலுடன் வாழ்வீர்! (178) ஆகிய உவமைகள் வந்துள்ளன.
அறநெறிகள்
பெண்ணுக்கு உரிமை வேண்டும் என்பதை ஆசிரியர், வானாட்டு மாட்சி சொலி மண்ணில், வாழ்வுரிமை பெண்களுக்கு மறுக்கும் தாநாட்டு நூல்கள் என்ற அடிகளில் சுட்டுகின்றார் (38). பழியொடு படரும் சூழ்ச்சி நெடிது நிற்காது என்பதை, இடிந்து விழுந்த துங்கள் சூழ்ச்சி, இன்றே தொடங்கிற்றுங்கள் வீழ்ச்சி (50) என்ற அடியால் காட்டுவர். நல்லவர்க்கு அறமே துணை என்பதை, நல்லார்க்கு அறம்துணைய தாமேல், … … பொல்லாச் சுரம் குறைந்து போதம் பொலியப் புண்நோ வொழியக் காண்போம் 64, வெல்லும் அறம்எனுஞ் சொல் மெய்யேல் (72) என்ற தொடர்களாலும், எல்லாம் இறைவன் செயல் என்பதை எல்லாம் இறைவனருள் நம்மால் இயல்வதைச் செய்வது நம் கடமை (64) என்ற தொடராலும் அறியலாம். அவரவர்க்கு ஏற்ற படியை அளப்பான் ஆண்டவன் என்ற கருத்தை,
"நித்தம் தொழுங்கடவுள் மக்கள்
நினைத்த தனைத்துந்தர வில்லை;
நத்தும் பொருள்களுள்அவ் அவர்க்கு
நன்மை பயப்பவற்றை நல்கும் (91)
என்ற அடிகள் விளக்குகின்றன. ஊழ், அறம் இவற்றின் உயர்வை பாலை என்பாற்படுத்தி ஏந்தல், பல்லாண்டு வாழ வரம் பெறுவேன் (72) என்பதனாலும்,
"முன்னை அறம்முடிந்த முடிச்சு;
மூர்க்கர் இதைஅவிழ்க்க முயன்றால்
பின்னை அறம்அழிக்கும் அவரை" (128)
என்பதனாலும் ஆசிரியர் வற்புறுத்துகின்றார். இத்தகு அறநெறிகள் பலப்பல புகலப்படுகின்றன.
தெரிந்தமொழி
தொல்காப்பியர் கூறும் புலன் வனப்புக்கேற்ப இக்கதை நூலில் சேரிமொழி அல்லது தெரிந்த மொழி மிக்குக் காணப்படுகின்றது. தீட்டைத் தொலைக்க (8), கள்ளி (28, 31), காது கசக்கும் அவள் வசவு (40), குமைத்தாய் (45), குமைக்க (55), மடியில் கனம் இல்லை (49), ஏமாறித் தங்கை (52), கோலாகலச் சதுர அறை (60), அக்காள் (63), தழுதழுத்து (65), விரதா (98), புடைவை (102), ஆட்டைத் திதி (121), அறுதலிகள் (131), சித்தி (135), உல்லாசப் பேர்வழி (151), வேசை (156), மதினி (185) முதலான சொற்கள் இதற்குச் சான்று!
ஓசைநயம்
பாடல்கள் அனைத்துமே எதுகைத் தொடை அமைந்து எழிலூட்டுகின்றன. சிற்சில பாக்கள் ஓசைநயம் பெற்றுத் துள்ளியாடுகின்றன. சான்றுக்கு ஒன்று கூறலாம்:
"பெருமை நுமதுரிமை; நாணம்
பேதைஎன் பெண்மைடத் தியல்பு;
அருமை நுமதுரிமை ஆதல்
அஞ்சிய அயரும்என துள்ளம்;
ஒருமை எனதுமன தல்லால்
ஒத்த உரிமைபிறி தில்லேன்;
இருமை நிலையிலும்என் உயிர்நும்
எளிய உடைமைஎன எண்ணீர் (96)
என்று தலைவி பேசுவதாக வரும் இப்பாடலில் ஓசைநயம் மட்டு மின்றித் தலைமக்களின் பண்பு நலன்களும் பாடப்பட்டுள்ளன. பெருமையும் உரனும் ஆடூஉ மேன, அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல், நிச்சமும் பெண்பாற் குரிய என்ப (தொல். களவியல் 7, 8) என்ற தொல்காப்பியர் கூற்றினையொட்டி ஈண்டும் தலை மக்களின் பண்புகள் மொழியப்பட்டன எனலாம்!
முன்னோர் மொழி பொருள்கள்
முன்னோர் மொழிந்த பொருளைக் பொன்னேபோற் போற்றுதல் தமிழ்ப் புலவர் கடன். நம் நாவலரும் இந்நூலில், வள்ளுவர், இளங்கோ, கம்பர் போன்றோர் கருத்துக்களைத் தக்கவாறு எடுத்தாண்டுள்ளார் எனலாம்! தொடலைக் குறுந்தொடி (33); கொடிறுடைக்க (46); விழியில் உறை பாவாய் (124); காலையில் காட்சியினில் அரும்பிக் கழியும் பகற்பொழுதில் போதாய்; மாலை மலர்ந்தஉளக் காதல், மாடுழக்க வாடுமலர் நிமிர்ந்து (167) முதலான பகுதிகள் திருவள்ளுவர் கூறும், தொடலைக் குறுந்தொடி தந்தாள், கொடிறுடைக்கும் கூன்கையர், காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, கருமணியிற்பாவாய் மோலை மலரும் (குறள். 1135, 1077, 1227) முதலான குறட்பாக்களை நினைவுபடுத்தும்.
"தலைவன், தன் தலைவிநலம் பாராட்டுவதாக வரும்,
வானே! வறுமையுற எனக்கு
மகிழ்வு மழைக்கும்விழி மடவாய்
தானே தனைஎனக்குத் தந்து
சாகும் உயிர்தழைக்கச் செய்தீந்
தேனே! என்உள்ளமலர் உறையும்
திருவே! மனவனத்தில் உகளும்
மானே! உயிர்குளிர ஒளிரும்
மதியே! எனதுபுது வாழ்வே!" (123)
என்ற பாடல், இளங்கோவடிகளின் மாசறு பொன்னே! வலம்புரிமுத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! (சிலம்பு. 2:73-74) என்ற பகுதியை நினைவூட்டுகின்றது.
"நீரில் கயல்உறங்கும் நெடிய
நிலத்துக் கழுதுறங்கும்… …" (166)
என்ற அடி, கம்பனின் நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி (கம்ப. 1:2:44) என்ற பாடலைப் பின்பற்றியது! இங்ஙனம் பல காட்டலாம்.
மெய்ப்பாட்டுறுப்பு
தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்கனுள் மெய்ப்பாடு என்பதும் ஒன்று உண்டன்றோ? இந் நூலிலும் மெய்ப்பாட்டுறுப்பு அமைந்து கற்பார்க்குக் கழி பேருவகை நல்குகின்றது.
அகத்திற்கு உரிய மெய்ப்பாடுகளில் நகுநய மறைத்தல், கூழை விரித்தல் என்பனவும் உண்டு (தொல். மெய்ப். 13, 14). தலைவன் தன் கணையால் தலைவிக்குக் கண்ணி சூட்டினான். ஆண்டு நின்ற பெண்டிர் அலர் தூற்றுவரே என்றஞ்சிய தலைவி, புன்முறுவலை வெளிக்காட்டாது மறைத்தாள்; காதலால், கருமை நிறைந்த கூந்தல் அவிழ்ந்தது என்ற பொருள்படப் பின்வரும் பாடல் அமைகிறது:
"நல்லார் முகத்தில்அலர் நகைக்கு
நாணி முகிழ்க்கும்மகிழ் மறைத்தேன்;
அல்லார் அளகநெகிழ் மடவார்
அங்கென்னைத் தங்கண்ணாற் பழித்து… … "(17)
இவ்வடிகளில் நாவலர் பாரதியார், மேற்காட்டிய இரண்டு மெய்ப்பாடுகளைக் காட்டி யுள்ளார்.
"காலை எனதுயிரைக் காத்த
காளைஎன் தியவுடல் தீட்டால்
மாலை உயிர்துடித்து வருந்த,
வாளா அமைந்திருக்க மாட்டேன்!" (72)
எனத் தலைவி கூறும் கூற்றில் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றுகின்றதல்லவா? இப்படிப் பல காணலாம்!
ஆசிரியர் கனவு
இந்நூல் வழியாக நாவலர் காணும் நற்கனவு யாது? இதோ அவரே கூறுகிறார்:
“வாழ்க உலகு அறமும் ஓங்க,
வறுமை பசிபிணிகள் நீங்க,
ஆழ்க அழிவு தரு தீமை
அச்சம் கொடுமை வஞ்சம் அழிக!
வீழ்க பருவமழை என்றும்
விளைக உணவு பொருள் இன்பம்
சூழ்க தமிழினொளி எங்கும்
துன்பம் தொலைக தொழில் உயர்க!” (வாழ்த்: 2)
ஆசிரியர் கண்ட கனவு நனவாகட்டும் என வாழ்த்துவோமாக!
முடிவுரை
இவ்வாறு நாவலர் பாரதியார் படைத்த படைப்பிலக்கியங் களுள் மாரி வாயிலில் அவரது ஆழ்ந்த தமிழ்ப்புலமை சுடர் விடுவதைக் காண முடிகின்றது. மேலும் உரைநடை உலகிலும் காவியங்கள் தோன்ற முடியும் என்பதற்கு ஒரு சான்றாகவும் இம் மாரி வாயில் திகழ்கிறது. இந்நூல் தமிழ் மாரியாகவே தமிழ் நிலத்தைக் குளிர்விப்பது எனத் திரு.வி.க. கூறுவதும் சாலப் பொருத்தமாகும். அதேபோன்று மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி, நான்கு தலைமுறையோடு பின்னிப் பிணைந்த கதை தழுவிய பாடலாகும். இந்நூலும் தமிழுக்குக் கிடைத்த ஆய்ந்தாய்ந்து சொற்பெய்தமைத்த விருந்து என்று மு. அருணாசலம் பிள்ளை இந்நூலினைக் கூறல் சாலும்.
வாழ்க நாவலர் பாரதியார்!
அன்பன்
முனைவர் ச. சாம்பசிவனார்
முன்னுரை
ரிவாயில் என்பதற்கு, மேகத்தைத் தூதனுப்பல் என்பது பொருள். மாரிமேகம், மாரி, மழை, வானம், விண், முகில், மஞ்சு, கொண்மூ, கொண்டல், எழிலி என்ற பலவும் மேகத்தின் பெயர்கள். வாயில் - தூது வாயி லுசாவே தம்முளு முரிய என்ற தொல் காப்பியச் சூத்திரமும் வாயில் தூது குறிக்கும் என்பதைத் தெளிக்கும். மேகத்தைக் காதற் றூதனுப்புவதாகச் செய்யுள் செய்வது பண்டைப் புலனெறி வழக்கு. காதலர் தம்முள் தூதுரைக்கக் கொள்ளற் பாலவற்றுள் மேகமும் ஒன்றாகும்.
“இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்தகுயில்
பேதைநெஞ்சம் தென்றல் பிரமரமீ ரைந்துமே
தூதுரைத்து வாங்குத் தொடை”
என்ற புகழேந்திப் புலவரின் இரத்தினச் சுருக்க வெண்பாவால் இஃது இனிது விளங்கும்.
இவ்வகைப் பிரபந்தங்களுள், வடமொழியில் காளிதாச கவியியற்றிய மேகசந்தேசம் பிரபலமானது. அது குபேரனது கோபத்தால் ஓராண்டு ஊரைவிட்டு விலகி யிருக்க நேர்ந்த ஒரு கந்தருவன் தன் காதல் மனைவிக்கு மேகத்தைத் தூதனுப்பியதாகப் புனைந்துரைக்குஞ் செய்யுள். இம்மாரி வாயிலும் பாண்டவருள் நடுப்பிறந்த பார்த்தனுக்கு. அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள் மாரியைத் தூதனுப்பியதாகக் கற்பித்துக் கூறுகிறது.
பார்த்தன் தீர்த்த யாத்திரையில் சித்திராங்கதை யென்ற பாண்டியன் மகளைப் பார்க்கின்றான். கண்டாங்கே ஒருவரை யொருவர் காதலித்து அரசனனுமதியோடு மணந்து, மதுரையிற் சிறுபோது கூடிவாழ்கின்றனர். அவர்கள் காதல் மணத்தின் பயனாகப் பப்புருவாகனன் என்றொரு மகன் பிறக்கின்றான். பிறகு அருச்சுனன் மனைவியையும் மகனையும் மதுரையில் விட்டு, குமரியில் நீராடி வருவதாகப் பாண்டியனிடம் விடை பெற்றுப் போனவன் மீளாமல் வாளா வடக்கே தன் இந்திரப் பிரத்தபுரிக்குச் செல்கின்றான் என்றொரு வரலாறு பாரதக் கதையில் வருகிறது. அதை யடிப் படையாகக் கொண்டு இம்மாரிவாயில் ஒரு புதுக்கதை புனை கின்றது. அது வருமாறு:-
மணந்த கணவன் தன்னைத் தணந்து போனபின், பிரிவாற்றாத அவன் தமிழ்மனைவி கூடலில் (மதுரையில்) தன் தனி வாழ்க்கையை வெறுத்து, பார்த்தன்போனகுமரிப்பாக்கத்திற்குச் சென்று, அங்கே கன்னிக் கடவுளை வழிபட்டு, தன் காதலன் தீதிலனாய்த் திரும்பித் தன்னொடு வாழும் பேறு வேண்டி வரங் கிடக்கின்றாள். கார்காலத் துவக்கத்தில் கடலில் காலையில் நீராடுபவள், கீழ்வானத் தடிவாரத்தில் தேர்போல ஊர்கின்ற ஒரு காரைக் காணுகின்றாள். முதலில் அதை, தன்கொழுநன் அவன் தந்தையான இந்திரனூருக்குச் சென்று மீளுந் தேரெனக் கருதிக் களிக்கின்றாள். பிறகு தான் கிழக்கே காணுவது தேரன்று. காரே யெனத் தன் தோழி தெரிக்கத் தியங்கிக் கவன்று மயங்குகின்றாள். தோழி தேற்றச் சிறிது தெளிந்து, அம்மழையை அழைத்துத் தன்காதற் கணவனுக்குத் தூதனுப்பத் துணிகின்றாள். காரி என்ற இந்திரனுக்கு மாரிவாகனமாகவே, அச்சுரபதி மகனான நரபதி பார்த்தனுக்கும், மேகத்துக்கும் ஒருவகையிலுறவுண்மையை எண்ணுபவளானாள். அஃதன்றியும், மேகத்துக்குத் தன்பாலன்பு வளரநேர்ந்த முன்னிகழ்ச்சி யொன்றனையும் நினைப்பாளாயினள். தென்னர் குடியில் முன்னோனான வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் மாரி மதுரையில் தளையிடப்பட்டதைத் திருவிளையாடல் தெரிவிக்கின்றது. பின்மேகம் சிறைவீடு பெற்ற செய்திக்குக் காரணம் யாரும் யாண்டும் கூறிற்றிலர். பாண்டியன் மகள் பார்த்தனை மணந்த பெருமங்கல விழாவில் அவள் அளியால் மாரி தன் தளைகளைந்து விடுதலை பெற்றது. அவ்வுதவிக்கு நன்றி மறவாமல் அப்பாண்டியன் மகள்பால் அன்புடைய மாரியை அவளழைத்து அதன் வேந்தன் மகன்பால் தூதனுப்பினால் அது விரும்பிச் சென்று விரைந்து மீளுமென்று சூழ்ந்து துணிகின்றாள். உடனே அவள் அம்மாரியை யழைத்து அருச்சுனனுக்குத் தன் தனிப்படர் மெலிவும் தணியாக் காதலுங்கூறி அவனைத் தன்னொடு மீட்டுங் கூட்டி வைக்குமாறு வேண்டுகின்றாள். மாரியும் தனக்கு அவள் முன்செய்த உதவியை வியந்து அன்றவள் சொன்ன வனைத்தையும் நயந்து கேட்டு, விண்வழி விரைந்து சென்று பாண்டவர் பதியணுகி, அற்ற நோக்கி அருச்சுனனுக் கறிவிக்கின்றது. அவனும் உவந்து கேட்டுத் தன் தமிழ்ப் பெருமனையாள் தகவு பாராட்டி, தன்னுளத்தவள்பால் தழையும் காதலை வற்புத்துகின்றான். தான் தன் தமையனான தருமன் அரசியல் பெருக அவன் ஆணையால் அவன் பகைவரைப் பொருதடக்கும் கடன் முறைகளாற்றி வருவதையும், அது முற்றுப் பெறும்வரை தான் தென்னர் நாட்டுக்குத் திரும்பக் கூடாமையையும் எடுத்துரைத்து. தன் அறக்கடனைத் தாழாது முடித்துப் பின்னர்த்தான் அவளொடு பிரியா துறைய வருவதாயும் செப்பி அவளைத் தேற்றி ஆற்றுவிக்குமாறு மாரியைத் திரும்ப விடுகின்றான். மாரியும் மீண்டு வந்து அவளுக்கு அவனுரைத்த மாற்றம் உணர்த்துகின்றது. இதுவே இப்பிரபந்தம் கூறும் பொருளாம்.
இனி, கலிவெண்பாட்டாலன்றி விருத்தப் பாவால் தூதுரைப் பது தவறெனவும், பிரிந்த காதலருக்கு இருந்து வருந்துவோர் தூதரைத் தம் காதல் சென்றுரைக்க ஓதுவதோடமைவதன்றி, தூதுசெல்பவர் கூற்றும், வாயில் பெறுபவர் வழங்கு மாற்றமும் தூதுபாடுவோர் சொல்லுதல் மரபன்றெனவும் புலவர் சிலர் புகல்வதுண்டு. அது தொல்லையிலக்கண மிறந்து நல்லமரபுகள் மறந்த பிற்கால வழக்குடை யார் வாதமாகும். தூதுச் செய்தி கலிவெண்பாவிலமைதல் வேண்டு மென்ற விதி இலக்கண விளக்கத்திலன்றி வேறு நூல்களில் வற்புறுத் தப்படாதது சிந்திக்கத்தக்கது. இலக்கண விளக்க ஆசிரியர் காலத்தில் சில தூதுப் பிரபந்தங்கள் கலிவெண்பாவில் அமைந்திருந்த காரணத் தால் அந்நூலிலவ்வாறு கூறப் பெற்றிருக்கலாம். மற்றப்படி வேறிலக் கண நூல்களில் அவ்வாறு வரையறுக்கப் படாததோடு, பெரும் பாவலர் புலவர்க்கு விருந்தெனத்தரும் அருந்தமிழ்த் தூதுகள் விருத்தப் பாவினால் விளங்குவதைக் கருத்திலிருத்தியாராய்வார் உண்மைய றிவார். நளன் தமயந்திக்கு அன்னத்தையனுப்பிச் சொன்ன தூது, விருத்தம் - வெண்பா என்றிருபாவிலும் பொன்றாது நிலவல்கண்டு புகழ்கின்றோம். அப்பாக்களில் தூதுபாடிய அதிவீரராம பாண்டியரும் புகழேந்திப் புலவரும் மரபறியாரென்றுரைக்கும் வழக்காறுண்டோ? சீதைக்கு அநுமனைத் தூதனுப்பிய செய்தியைக் கம்பரும், குணமாலைக்குக் கிளியைத் தூதனுப்பிய வரலாற்றைத் திருத்தக்கதேவரும் விருத்தப் பாவால் விளக்கி விரித்தது பொருத் தமன்றெனப் புகல்வாருளரோ? புலமைக் கிலக்காமித் தலைமைப் பாவலர் தத்தம் தூதுரைப்பாட்டில் மாதர் செப்பிய காதற் செய்தியைத் தூதர் சென்றுரைத்ததும், அதைக் கேட்டவர்கிளர்ந்த மாற்றங் கொண்டு மீட்டுவந்துரைத்த செவ்வியு மெல்லாம் பாடித் தமிழைப் பீடுபெறச் செய்துள்ளார். ஆதலால் இம்மாரிவாயிற் பாட்டும் செய்தியும் மரபு பிறழா வழக்காறுடைத் தெனத் தமிழர் தள்ளாது கொள்ளத்தகும்.
இந்தப் பிரபந்தம் எழுத நேர்ந்த வரலாற்றை இங்கு நான் கூறுவதும் இயைபுடைத்தாகும். 1906 சூலையில் நீதிமன்றவாதியாய் நான் தொழில் தொடங்கின காலந்தொட்டு, யாண்டுதொறும் கோடை வெயிற் கொடுமைக் கஞ்சி, அதைக் குறைத்தற்கான ஊர்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவதென் வழக்கம். 1909ஆம் ஆண்டில் கோடை விடுமுறைக் காலத்தை நான் கன்னியாகுமரியிற் கழித்து வந்தேன். அங்கே ஒரு தமிழக் கிறித்துவரும், ஆங்கிலம் வடமொழிகள் வல்ல அவருடைய மராட்டிய மனைவியாரும் அவ்வம்மையாரின் சோதரிமாரும் வந்திருந்தனர். அவர்களெல்லாருக்கும் பேச்சளவில் தமிழ்ப் பழக்கமுண்டு. குமரிப்பாக்கம் வலைஞர் வாழுஞ் சிற்றூராகையால், அங்குக் கலைஞர் பலரைக் காணுதலரிது. அதனால் அங்கு வதியவந்திருந்த புதியரும் நாங்களும் நெருங்கிப் பழகநேர்ந்தது. புலனுங்கலையும் பொலியப் பெற்ற அந்நல்லார் சல்லாபத்திடையிடையே தங்கள் மராட்டிய மொழியில் புதிய காவியங்களும், நவீனங்களும் இலகுவதாயும், தமிழர் தங்கள் பழைய பனுவல்களின் பெருமையையே பாராட்டுவதன்றிப் புதியன புனையாமை யொன்றே தமிழ் மொழிக்குப் புதிய புலத்துறைகளிற் புகலும் மிகலும் கூடாமையைச் சொல்லுமெனவுஞ் சுட்டி மெல்லச் சிரித்து எள்ளுவாரானார். அவரோடு வீணே சொற்போர் நிகழ்த்துவதன் பயனின்மை கண்டு, தமிழில் புதுமுறையில் காலையில் நான் புனைந்து வைத்து மாலைதொறும் அவர்களுக்கு ஓர் உரைக்கதையும் பாட்டுடைப் பனுவலொன்றும் படித்துக் காட்டுவதாக ஏற்றுக் கொண்டேன். அதற்காக நாள்தொறும் முற்பகலில் உரைநடையிலொரு கதையும் மாரிவாயில் எனப் பாட்டுப் பனுவலொன்றும் இயற்றலானேன். சுமார் இரண்டு வாரமிப்படிச் செய்ததன் பயனாகக் கதையில் பதினைந்து பகுதியும், பிரபந்தத்தில் அறுபத்தேழு பாக்களும் எழுதப்பெற்றன. இதற்குள் என் விடுமுறைக் காலமுடிந்து அப்பொழுது நான் வக்கீல் தொழில் நடத்திவந்த தூத்துக்குடிக்கு மீள நேர்ந்தது.
அதன்பிறகு தொழிற்றுறைப் பணியும் அரசியலியக்கப் பிணியும் என்பொழுதையும் புலனையும் முழுதும் முற்றுரிமை கொண்டதனாலும், குமரியிற்போல நூலியற்றத் தூண்டுவாராண் டின்மையினாலும், நான் எழுதிய கதையும் பாட்டும் விட்ட நிலையில் பெட்டி புகுந்தன. நாளடைவில் நானவற்றை அறவே மறந்தேன். சமீபத்தில் நான் (இங்கு) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு வந்தபிறகு பசுமலையில் என் வீட்டைக் காலிசெய்ய எண்ணி என் பெட்டிகளைத் தட்டிப் பார்த்த என் உறவினர், அவற்றுள்ளிருந்த பல காகிதக் கையெழுத்துக் குப்பைகளையும் எடுத்துவைத்திருந்து எனக்குக் காட்டினர். அவற்றிடையிருந்த முற்றுறாப் பாட்டுப் பனுவல்களைக் கழித்தொழிக்கக் கருதிப் பொறுக்கிய போது, இப்பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியிலென் துணையாசிரிய ருளொருவரான வித்துவான், திரு. தி.பொ. பழனி யப்பப் பிள்ளையவர்களை, ஈயக் குச்சியாலெழுதி மங்கியிருந்த என் கதைப் பகுதியை மைகொண்டு பெயர்த்தெழுதி யுதவ வேண்டினேன். மற்றப் பாட்டுக்களை நான் பரிகரிக்கப் போவதறிந்து தாமவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு இம்மாரி வாயிலொன்றை யாவது நான் முடிக்க வேண்டுமெனத் தூண்டினர். இருபத்தைந்து ஆண்டுகளாகப் பாட்டுப் புனைவதைப் பயிலாதொழிந்து நூலாராய்ச் சியே காலப்போக்காகக் கொண்ட நான் இனிப் பாட்டெழுத முயலுவது பலிதமாகாதெனப் பன்முறை சொல்லிப் பார்த்தேன். என் நண்பர் என்னைவிட்டாரிலர். பழைய அறுபத்தேழு பாட்டுக் களும் நானெழுதியதுண்மையானால் இன்னும் பாட்டெழுத லெனக்குக் கூடுமென்பது தம் துணிவென்று கூறி, இச்செய்யுளைப் பாடி முடிக்குமாறு வற்புறுத்தினார். அவரிடையறாத் தூண்டு தலால் சில பாக்களை யாக்கலானேன். இப்புலவரும், என் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர், திரு. நீ. கந்தசாமிப் பிள்ளையவர்களும் அப்பாட்டுக்களைக் கேட்குந்தொறும் தமது மகிழ்ச்சி காட்டி என்னை ஊக்கிவந்தனர். இதையறிந்த புலமையும் புலன் மாண்பு மொருங்கு நிறைந்த பண்டிதமணி திரு. கதிரேசச் செட்டியாரவர்கள் தாம் 25 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடிக்கு வந்த போது ஒருமுறை இப்பனுவலின் பழைய பாட்டுக்களை நான் படிக்கக் கேட்டுத் தாம் மகிழ்ந்ததுண்டென நினைவுறுத்திப் பிரபந்தத்தை எப்படியும் முடிக்குமாறு என்னை ஊக்கினார்கள். இந்நண்பரின் அன்புரைகள் நாளுந்தூண்ட ஒருவாறாகப் பாக்களைப் பாடி முடித்தேன்.
பிறகு இப்பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதியில், மகாவித்து வான், திரு. ரா. இராகவையங்காரவர்கள். பண்டிதமணி திரு.கதிரேசச் செட்டியாரவர்கள். பண்டித திரு. ந.மு. வேங்கட சாமி நாட்டாரவர்கள் முதலிய பலர் முன்பு இப்பிரபந்தம் நான்கு நாட்களாகத் தொடர்ந்து படிக்கப் பெற்றது. புலவ ரெல்லாரும் கேட்டு அதனை அன்புடன் பாராட்டினர். இராமநாதபுரம் சமதானத்தில் முதற் பாவலரும், தற்காலம் இவ்வாண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சி விரிவுரையாளருமாய் விற்றிருக்கும் மகாவித்துவான் திரு. ரா. இராகவையங்காரவர்கள், பாட்டுக் களைக் கேட்டுத் தம் மகிழ்வுணர்த்தியதோடு, இயல்பு வளத்துடன் பாடும் திறனிருந்தும் அதை நான் இதுவரை வளர்க்காமல் விட்டது தவறெனவும் கூறி, அன்புடன் இதற்குச் சிறப்புப் பாயிரச் செய்யு ளொன்றும் இயற்றித் தந்துதவினார்கள். அதன்பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழாராயும் வித்துவான் திரு. திருநாரா யணையங்காரவர்கள் முதலிய பல புலவரும், புலவர் பரம்பரை முகவூர் முரா. அருணாசலக் கவிராயரவர்களும், வெள்ளக்கால் பண்ணையாரும் புலவர் திலகருமான இராவ் சாஹிப், திரு வெ.ப. சுப்பிரமணிய முதலியார வர்களும், தனவணிகர் பெருங்குடித் தோன்றல் பாவலர் வயினா கரம் இராமநாதன் செட்டியாரவர்களும், பிற புலவர் சிலருமிருந்து சில நாள் தொடர்ந்து இப்பிரபந்தத்தைக் கேட்டு வந்தனர். வித்துவான், திரு. திருநாராயணையங்காரவர்களும், திரு வெ.ப. சுப்பிரமணிய முதலியாரவர்களும், திரு. அருணாசலக் கவிராயரவர்களும் சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப்பெற்ற தமிழ்ப் பிரபந்தங்களுள் இம் மாரிவாயில் பொருள் வளம் சொன்னயங் களில் சிறந்து விளங்குவதாகக் கூறி என்னை உவப்பித்தனர். ஈரிடத்தும் இதைக்கேட்ட புலவர் சிலர் சுட்டிய குறிப்புக்களால் சில விடங்களில் பாக்கள் திருத்தம் பெற்றன.
பிறகு இப்பிரபந்தப் பிரதி மகா மகோபாத்தியாய, டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டு, அவர்களாலும் பார்வையிடப் பெற்றது. ஐயரவர்கள் சிறப்புப் பாயிரச் செய்யுளுதவி ஊக்கினார்கள். அவர்களன்பை என்றும் பாராட்டுவேன்.
இதைப் பாடிமுடிக்க என்னைத் தூண்டிய வித்துவான், திரு. தி.பொ. பழனியப்பப் பிள்ளையவர்கள் அன்புடன் இப்பாட்டுக் களுக்குக் குறிப்புரையும் எழுதியுதவின பேரன்பு என்னை எழுமையும் கடப்படுத்தும். மதிப்புரையும் சிறப்புப் பாயிரச் செய்யுட்களு முதவி இப்பிரபந்தத்தைச் சிறப்பித்த புலவர் எல்லாருக்கும் என் நன்றி யுரித்தாகும்.
இப்பல்கலைக்கழகத் தாபகரும், கொடைமடம் பூண்ட தமிழ் வள்ளலும், வணிகர் பெருங்குடி மரபினருமான ராஜா சர். அண்ணா மலைச் செட்டியாரவர்கள் என்னை இக்கழகத் தொடக்க முதல் இங்கு வரும்படி வற்புறுத்திவந்து இறுதியிலிழுத்திங்குப் பணிகொண்ட பேரன்பையும், பல்காலும் பலபடியும் தலையளித்து என்னைப் பாராட்டிவரும் அவர்களின் பெருந்தகவையும் நினைத்து, இப் பிரபந்தத்தை அவர்களுக்குரிமையாக்க வெண்ணி அதை அவர் களுக் கறிவித்தேன். அப்பெரியோரும் தாழாதுடனே தம்மிணக்கம் காட்டியதோடு தம் செலவிலேயே இதை அச்சேற்றி வெளிப் படுத்தியு முதவினார்கள். இவ்வள்ளலார் எள்ளருந்தலையளியை என்றும் நினைந்து பாராட்டுவதன்றி யான் அவர்களுக்குக் கைம்மாறு பிறிது கருதுஞ் சிறுமையை வெறுப்பேன்.
இதை வெளியிடுவதில் எனக்கு எவ்வகைப் பொறுப்புமின்றி வழுவற வனப்புடன் அச்சேற்றி யுதவிய சென்னைச் சாது அச்சுக் கூடத் தலைவரவர்களுக்கும் நிர்வாகதர்களுக்கும் நான் என்றும் கடப்பாடுடையேன்.
அண்ணாமலைநகர்
9 -10 - 1936
ச.சோமசுந்தரபாரதி
மதிப்புரை
றக்குறைப் பத்தாண்டுகளுக்கு முன்னர், உலகத்தில் நாகரிக மிகுந்த பல நாட்டார்களும் ஒருங்கு கூடிச் சிலநாள்கள் தங்க நேர்ந்தகாலத்து, இலக்கியத் துறையில் வல்லுநராய பலரோடும் நான் உரையாட நேர்ந்தது. ஒவ்வொருவரும் அவரவர்கள் நாட்டு இலக்கிய உயர்வினை எனக்கு எடுத்துக் கூறி நம்நாட்டு இலக்கிய உயர்வினை யான் எடுத்துக்கூறக்கேட்டு மகிழ்ந்திருந்தனர். அயல் நாட்டார் பெரும்பாலாரும் நம் நாட்டுப் பண்டைய இலக்கிய உயர்வில் பெருமகிழ்வெய் தினரேனும் அவ்வுயர்வு நீடித்து நிற்றற் கேற்ற பண்பு, நம் நாட்டுள் மிக்குஇல்லை என்றும் கருதுவாரா னார்கள். ஒரு சிலர் உயரிய இலக்கியத்தைத் தோற்றுவிக்கும் ஓர் அரிய உள்ளக்கிடை நம் புலவர்கள் பால் அறவே மாய்ந்து விட்டதோ என்றும் ஐயுற்றனர். இத்தகைய எண்ணங்களுக் கிடங் கொடுத்தல் நம்முயர்வுக்குத் தகுதியன்றெண்ணி யான் அப்புலவர் களோடு மாறுபட்டு உரையாடிக் கொண்டிருந்தபோது ஐரோப் பாவினின்றும் வந்திருந்த ஓரறிஞர் உன் பண்டைய பெருமை பெரிதுஞ் சிறப்புடையதே என்பதை யான் ஒப்புக் கொள்கிறேன்; இந் நூற்றாண்டில் காற்பகுதிக்குமேல் கழிந்துவிட்டதே, உன் தமிழில் இந் நூற்றாண்டிலி யற்றப் பெற்ற இலக்கியப் பண்பு களமைந்த தொடர்நிலைச் செய்யுட்களோ வேறுவகைச் செய்யுட் களோ உளவாயின் அவற்றை எம்மிடை விளக்கிக் கூறுக எனக் கேட்டனர். இக்கேள்விக்கு எளிதில் விடையிறுக்க வொண்ணாது சிறிது தாழ்த்தேன். இந் நூற்றாண்டின் இப்பகுதியில் அயல்நாடுகளில் தோன்றியுள்ள பல இலக்கியங்களின் வரலாறுகளையும் பண்புகளையும் அறிந்திருந்தமையும் நம் நாட்டுள் மேற் குறித்த காலவரையில் எழுந்த இலக்கியங்களை ஒருவாறு அறிந்தமையுமே என்னை விடை யிறுக்கத் தடைப்படுத்தினவாகும்.
இக்குறை நம் இலக்கியத்துக்கு மாறவேண்டும் என்ற விருப்பத் துடன் யான் பல புதியபாட்டுக்களைப் பார்த்து வந்தபோது, எனக்குப் பேரன்பரும் தமிழ்ப் பேராசிரியருமாகிய திரு. பாரதியார வர்கள் இல்லத்தில், இப்போது வெளியிடப்பட்டுள்ள மாரி வாயிலின் முற்பகுதியை இன்னிசையோடு வித்துவான் பழனியப்பப் பிள்ளையவர்கள் பாடிக்கொண்டிருக்கக் கேட்டேன். இதன் ஆசிரியர் யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவாவினால் அப்பகுதி முழுவதும் படித்து அதன் சொல் நிலையையும் பொருள் நிலையையும் கொண்டு ஒன்றும் தெளியாதவனாக நின்றபோது, இதன் ஆசிரியர் முப்பதாண்டுகளுக்கு முந்திய பாரதியாரவர்களே என்பது கேட்க வியப்பெய்தியும், இறுமாந்தும், ஏமாந்தும் நின்றேன். திரு. பாரதியாரவர்களது அறிவின் மாட்சியைச் சுமார் இருபது ஆண்டுகளாக நன்கு தெரிந்திருந்தும், அவர்களோடு சில ஆண்டுகளாக இடைவிடாது நெருங்கிப் பழகியும், அவர்களுடைய பாவியற்றும் பண்பை யான் அறிந்து கொள்ளாத அறியாமைக்கு வருந்தினேன். அறிவை ஆராய்ச்சி யொன்றுக்கே உரித்தாக்கி எப்பொருளினும் மெய்ப்பொருளே காண முயலுபவர் என்ற பெரும் பெயர் வாய்ந் துள்ளவ ரானமையால், தம்முள்ளத்தை உயர்ந்தபாக்கள் தோன்றும் பண்பிற்குக் கொள்ளை கொடுக்க மாட்டாரென்று யான்செய்து வைத்த முடிவு தவறு என்பதையும் உணர்ந்தேன். காய்தலுவத்தல கற்றி எப்பொருளினும் எவ்வித ஈடுபாடு மின்றி மெய்ப்பொருளே காணவிழையும் ஆராய்ச்சித் தறுகண்மையும், அழுவாரொடழுது மெலிவாரோடு மெலிந்து எப்பொருள் எந்நிலையிலுள்ளதோ அந்நிலையே தன்னிலையாகக் கலந்து தவழும் கவியுள்ளமும் ஓரிடத்தே காணுதலும் ஒண்ணும் என்பதற்கிலக்காக, உலகத்திலே காணப்படும் பெரியார்களுடைய உயரிய பண்புகள் பாரதியாரவர் களிடம் காணப்படுவது கொண்டு இறுமாப்பெய்தினேன். அவர்கள் பாலுள்ள பாவியற்றும் பண்பு வறிதாகா வண்ணம் மேலும் சிலவியற்றி அதனை முடிக்குமாறு யானும் சில அன்பர்களும் வேண்ட, முதலில் அவர்கள் ஒருவாறு மறுத்தனரேனும் பிறகு சில பாக்களையியற்றித் தந்தார்கள். இப்போது ஒரு நூலாக வெளிவந்துள்ள இப்பாட்டு, ஒரு புலவருடைய உள்ளம் முப்பதாண்டுகளுக்கு முன்னிருந்த நிலையையும் முப்ப தாண்டுகளுக்குப் பின்னிருந்த நிலையையும் நன்கு தெரிவிப்பதாகும். பாட்டின் பயனைப் பல்வகை யாராய்ச்சிகளால் துய்க்க முன்வரும் இக் காலத்து, முப்பதாண்டுகள் இடையிட்டெழுதிய ஒரு நூலின் இரு பகுதிகளும் பலவழியிலும் உதவுவனவாகும். முப்பதாண்டுகளாக வளர்கின்ற உள்ள நிலையைத் தெரிக்கும் நூல்களிலும், முன்னுக்கும் பின்னுக்கும் முப்பதாண்டு களிடையிடப்பட்டு எழும் நூல் வேறு வகையானது என்பதும் கருதற்பாலது. ஆசிரியரவர்கள் முகவுரையிற் குறித்திருப்பது கொண்டு இந்நூலெழுந்த காலமும் இடமும் சூழலும் இதுபோன்ற பாடல்கள் எழுதற்குப் பெரிதும் துணைபுரிவன என்பது நன்கு தெரிகின்றது. அவ்வாறே, இப்பாடல்கள் முற்றுப் பெற்ற காலத்தும் ஆசிரியரது முதிர்ந்த அறிவும், உலகியற் பல துறைகளிலும் சென்ற பயிற்சியும், பலவாறு பகிர்ந்து கொடுத்த பரந்த அன்பும், இந்நூல் முற்றுப் பெறுங்கால் அழகு செய்வன என்பது இவ்வாசிரியரை நன்குணர்ந்த அன்பர்களுக்கு யான் கூற வேண்டுவதில்லை.
பலவகையாக விரிந்த இலக்கியத்துள், இஃது ஒரு கருத்தை யோ ஒருவகை உள்ள நிலையையோ பலவாக விரித்து, கற்ப வருள்ளம் பொற்புறுமாறு இயற்றப்பெறும் பகுதியைச் சேர்ந்த தாகும். தனித்துறையும் ஓவியவுருவின் ஒப்பிலாமகள், தன் அருமை நாயகனை எதிர்பார்த்த வண்ணமாயிருப்பவள், எதிர்பார்த்தது காணாது ஏமாறலும், பின்னத் தேரெனமயங்கிய முகிலிடம் தன் குறை மொழிதலும். அக்குறையாம் நிறையைக் கொண்டு பார்த்தனிடந் தெரிவித்து அவனுரை கேட்டு மீளலும் இப்பாட்டுக்களிற் கூறப் படும் செய்தியாகும்.பாண்டியன் மகள் பார்த்தனைக் கண்டபோது.
“…………………ஒண்கண்
அளித்தெனைப் பருக அன்னான் அழகமு தருந்தலானேன்”
என்று கூறும் சொற்கள் கற்போருள்ளத்துள் பெரிதும் இன்பம் பயப்பனவாகும். மதங்கொண்ட வேழங்கண் டஞ்சியமகள், தன் நடுக்கந்தீர அம்மதமாவை வென்று தன்னைக் காப்பாற்றிய ஒருவர்க்குத் தன் நன்றியறிவைத் தெரிவித்துக் பேரழகில் ஈடுபட்டு நின்று, எவ்வகையானும் அவளருள்பெற எண்ணி அதற்கேற்றதோர் வாய்ப்பை யெதிர் பார்த்து, அது வாய்த்த வழி, அது கொண்டு தன்னுள்ளத்தை யெல்லாம் கண்ணால் வெளிப்படுத்தி நின்ற ஒரு பேரழகானது கண்ணோடு ஒத்துநோக்கலும், ஒருவருள்ளத் தடர்ந்திருந்த பெருங் காதல் அது சிறிதானு மறியாத கண்களிற் சென்று தாக்கி, பேரச்சம், அவ்வச்சத்தினின் றுய்ந்த பெருமகிழ்ச்சி, தான் உய்தற்குதவி செய்தான்பால் செலுத்திய நன்றி எனுமிவற்றை யெல்லாம் ஒருங்கே தெருட்டி, பேரழகும் தண்ணளியுமாகத் தலைசிறந்து நின்றது என்பதை யிவ்வடிகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. ஒண்கண் என்னைப் பருகிற்று என்பதும் யான் அருந்தலானேன் என்பதும் உற்றுநோக்கிற் கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்களென்ன பயனுமில என்பதற் கெழுந்த தெளிவுரையோ வெனவும் கூறலாம். என்னை அவன் கண்கள் பருகின என்ற அளவில் நின்றிருப்பாளாயின, பருகியதால் விளையும் பயனு மின்பமும் பருகிய பார்த்தனே பெற்றான் என்பது திண்ணமாக, இவள் நிலை இன்னதாயிற்று என்பது நன்கு தெரியாது ஐயுறக் கிடக்குமாகலின், யானும் அவன் அழகை யருந்தலானேன் எனக் கூறி அவள்பெற்ற இன்பத்தையும் நன்கு தெரிவித்தது மகிழற்பாலது.
“ஒருவரை யொருவர்த முள்ள மீர்த்தலால்
இருவரு மாறிப்புக் கிதய மெய்தினர்”
என்ற கம்பராமாயண அடிகளோடு இஃதொப்புநோக்கற் பாலது.
உள்ளத்தின் நிலையை வெளிப்படுத்தும் பலவகையாய செய்யுண் மரபினில், உள்ளநிலைக் கேற்பப் புறத்தே தோன்றும் மெய்ப்பாடுகளையும், செயல்களையும் விரித்துக் கூறி, அம்மெய்ப் பாடுகள் செயல்கள் முதலியவற்றைப் பயிலுமுகத் தானே பயில்வோ ருள்ளத்து எந்த உள்ள நிலையை ஆசிரியர் தோற்றுவிக்க விரும்பு கின்றனரோ அந்த உள்ளநிலை தோன்றுமாறு செய்வதும் ஒன்றாகும். இந்நெறியில், இங்குள்ள
“வேர்த்துடல் விதிர்த்து நின்று வெறுங்கைகள் பிசைந்து விம்மி
ஆர்த்தழு தயலா ராயத் தன்பறி வழகு மிக்காள்
பார்த்தன ளிறைஞ்சி யண்மிப் பாண்டியர் மகள்கா ணென்ன
ஒர்த்தன னுவந்த யானும் பார்த்திவ னுணர்தி ரென்றான்” 121
என்ற பாட்டு மிகச் சிறந்ததாகும். வேர்ப்பதும் விதிர்த்து நிற்றலும் உள்ளம் மாறுபட்ட நிலையில் அறிவின் செயலொன்று மின்றித் தாமே புறத்தே தோன்றுவனவாக, வெறுங் கைகளைப் பிசைதல் உள்ளத்தோடு அறிவு ஒரு சிறிது ஒன்றுபட்ட வழிநிகழ்தலும், விம்மல் அதற்கடுத்த நிலையில் நிகழ்தலும், ஆர்த்தல், உணர்வு அறிவாலடக்கப் பெறாது மொழிவழி வெளிப்படலும் இயற்கை நெறி ஒரு சிறிதும் பிறழாது ஆசிரியர் முறையாக வைத்துள்ளமை ஆராய்தற் பாலதாகும்.
எந்நாளும், எம் தென்றமிழ் மக்கள், வாழ்தலும் தாழ்தலும், சாதலும் நோதலும், மகிழ்தலுங் கலுழ்தலும் ஆண்டவனமைத்த வாறே ஆகும் என்னுந் தேற்றமுடையவர்க ளென்பதும்; கணவனு மனைவியுமாக் கூடும் வாழ்க்கை ஆண்டவ னருளா லிவர்க்கிவ ரென்ன அமைத்தபடியே ஆகுமென்பதும், இக்கூட்டம் தெய்வத் தாலே நிகழ்வதொன் றென்னும் தெருட்சி நேர்ந்த மக்கட் பகுதியுள் இல்லற வாழ்க்கை எத்தகைய இடையூறுகளிலும் ஒரு சிறிதும் நடுங்குறாது நடைபெறுவது உண்மை யென்பதும், ஆய உயரிய கொள்கைகளை யெல்லாம் தன்னகத்தே யடக்கிக் கூறுவதே போன்று, தோழி சித்திராங்கதைக் குரைக்கும் பகுதியில் செம்மை யிதெல்லாந் தெய்வத் திருவுளக் குறிப்பாமென்றாள் என்னும் அடி தெரிவிக்கின்றது. சோழபாண்டியர் என்னும் இருவரையும் புகழும் பாவலர்கள் பண்டைக் காலத்தும், மத்திய காலத்தும் ஓர் அரசனைப் புகழ்ந்து கூறும்போது குறிப்பாலோ, வெளிப்படை யாலோ, உணர்ந்தோ, உணராமலோ மற்றொருவரையிகழ்த லுண்டென்பது அக்கால அவ்விலக்கியங்களை நுணுகிப் பயின்றோர் பலரும் நன்கு தெரிந்ததாகும். இத்தகைய முறை நன்றோ, அன்றோ என்பது எம் ஆராய்ச்சி யன்று. இது எவ்விதமாகவோ நூலுட் புகுந்து விடுகின்றது என்பதுமட்டில் இங்கு விழுஞாயிறும் எழுதிங்களும் விரவும் பொழுதுற்றேன் என்னும் அடியைப் படிக்கும்போது நினைவிற்கு வருகின்றது.
மாலைக் காலத்து மதுரைமா நகரில் காணப்பெறும் பல காட்சிகளும் இந்நூலில் நன்கு விளக்கப் பெற்றிருப்பது, இக்காலக் காட்சியைத் தானே நேரிற் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் உள்ளத்தில் பண்டைய காட்சியை முதுநூல்களால் கண்ட மகிழ்ச்சி யினையும் பிணித்து ஒரு வகையான இயங்கோவியம் இயற்றிக் காண்பிப்பதுபோல் தோன்றுகின்றது. (130 முதல் 133 வரையுள்ள பாடல்களைப் பார்க்க) செவிலித் தாயர் பலரும் மிகுந்த பரபரப் புடன் கேட்பதாகக் கூறும்.
“எங்குற்றனை யெங்கண்மணி என்னுற்றது சொல்லென்
றகுற்றழு மென்தாயர்சொல் அறியாதுட னழுவேற்
கிங்குற்றர சிபம்நிற்பதை எய்தாரெவர் வதுவன
பங்குற்றதென் என்றேபடர் பரிகின்றனர் பலரும்”
என்ற பாடல் இயற்கைக்குப் பெரிதும் ஒத்திருப்பதோடு, பல ஐயங்களா லிடர்ப்படும் உள்ளத்தவர் ஒரு செய்தியைத் தெரிந்து கொள்வதற்கு முயன்று விரைந்து கேட்கும் முறையினையும் நன்கு விளக்குகிறது. காதலனைப் பிரிந்து அவன் வரவை நெடுநாளாக எதிர்பார்த்து நிற்கும் ஒரு கற்பரசியின் உள்ளத்தின்கண், பண்டு தாம் உடனுறைந்து வாழ்ந்த காலத்தே நிகழ்ந்த பல செய்திகளையும் ஒன்றன்பினொன்றாக எண்ணி அவ்வெண்ணத்தினாலே வருந்தி, அவ்வாறு தன்னை வருத்தும் துன்பத்தையே இன்பமாகக் கருதும் எழில்மாண்பு நம் நாட்டிற்கு என்று முரியதாகும். இந்நூலுள்ளும் சித்திராங்கதையின் உள்ளம் தன் பழவுறவில் பதிந்து வெளியிடு மொழிகளே மிகச் சிறந்தனவாகும். அப்பகுதியில் சில செய்யுட்கள் அன்புநிலை பெற்ற மக்களுள்ளத்தை அலசியலசி அலக்கணுறச் செய்யுமென்பதில் ஐயமே யில்லை.
“நல்லார்பொல் லாரெனினு மோம்புவதா
ணறமெனத்தா னவின்றா னென்பால்
வில்லாள்வா னவனானோர் பொல்லாளு
மல்லளவன் விரும்பி வேட்டோள்
அல்லாக்கச் செய்வர்பிற ரல்லரெனை
யளியாம லவன்வில் லாண்மை
ஒல்லாத பொல்லார்போற் கொடுமைசெய
லொப்புரவோ உரனோ என்பாய்”
இப்பாட்டில் நானோர் பொல்லாளுமல்லள் என்ற சொற்கள் சிந்திக்குந் தொறும் கண்ணீர்ததும்பச் செய்வனவாகும். அதனோடு ஒத்துக் கருதத்தக்கது.
“எதுவொன்று மவனோவ நானென்றும்
மனதார எண்ணிற்றிலேன்
மதுவொன்று மலர்வண்டு புதிதுண்ண
நலமீயும் வள்ளன்மைபோல்
விதுவொன்று குடிவீரன் நிறையோடென்
னெழிலார வேளாண்மைசெய்
ததுவொன்றும் நினையாம லாளாம
லளியாம லவனிற்பதே”
என்பதாகும். சாதலிற் பிழைப்புக் காணத்தகும் வழி என்ற அடி நம் உள்ளத்திற்கும் அறிவிற்கும் ஊட்டுகின்ற உணவு அளவாலும் சுவையாலும் பலபட நிற்கின்றது.
சித்திராங்கதை, தந்தை யெங்கென வினவும் தன் தனயனுக்கு விடைகூற முன் வருவதும். அவனுள்ளம் அவ்வினா வழிச் செல்லா வண்ணம் பலவகை விளையாடல்களில் அவனைச் செலுத்து வதாகவும் செப்புகின்ற பாடலாகிய,
“தந்தையைக் காட்டக் கேட்குந் தனயனைத் தழுவித் திங்கள்
விந்தையார் வேலை காட்ட விம்முவன்; விளையா டென்னப்
பந்தைப்பொற் பாண்டில் முத்தப் படகினையெறிவன்; பாலன்
நிந்தையாற் சிந்தை நைவாள் நிலையைநீ நினைவை யின்னே”
என்ற பாடல் எண்ண எண்ண இல்லற நிலை கொண்டொழுகும் மக்களுள் கல்லொத்த நெஞ்சினரையும் கனிந்துருகச் செய்யா திராது என்பது திண்ணம். நாட்டின் வளங்கூறுதல், வழியுரைத்தல் முதலிய பல பகுதிகளும் பாராட்டற்குரியனவே யாகும். இந்நூல், அளவால் சிறியதா யிருக்கின்றமையின் எவரும் எளிதாகவே முழுதும் படித்து விடக் கூடுமாகையால், இதன்கணுள்ள பல சிறப்புக்களையும் என்மனந் தோய்ந்தவாறு விரித்தெழுதாது தமிழன்பர்கள் ஒவ்வொருவரையும் தாங்கள் தாங்களே இந்நூலைக் கற்றின்புற வேண்டியிதனோடு நிறுத்துகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கியத்துள், இந்நூல் ஒரு நல்லிடம் பெற்று நிலைபெற வாழும் என்பது என் துணிவான எண்ணமாகும். பாவின்பதை நுகர விழைவார்க்கும், பாநலனைப் பற்றிய ஆராய்ச்சி செய்ய விரும்புவார்க்கும் இது பெரிதும் பயன் படுவதாகும். தான் மறந்த பெருநிதியை மீண்டும் பெற்றவரொப்ப, முப்பதாண்டுகளுக்கு முன்னர் தான் இயற்றி மறந்த ஒரு நூலை இதுபோது விழித்து முற்றுவித்த, ஆராய்ச்சித்திறனோடு கவித் திறனும் நன்குவாய்க்கப் பெற்ற எனது பேரன்பரும். தமிழ்த்தாயின் தனிமகனும் ஆகிய திருவாளர், ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள், இத்தகைய இன்பம் மலிந்த பாடல்கள் பலவாக வியற்றித் தமிழன்னைக்கு ஏற்ற தொண்டு செய்யுமாறு, பாட்டுக்குருகும் பனிமலைவல்லிதன் பங்கன் திருவடிகளை வாழ்த்தி வணங்கு கின்றேன்.
தஞ்சாவூர்
9.10.1936
நீ. கந்தசாமி.
கரந்தைத் தமிழ்ச்சங்க அமைச்சர்
சிறப்புப் பாயிரச் செய்யுட்கள்
மகாமகோபாத்தியாய பிரம்மஸ்ரீ டாக்டர்
உ.வே. சாமிநாதையரவர்கள்
இயற்றியது
"நாவலர்கள் புகழ்ந்தேத்த நானிலத்தோர் கொண்டாட
நவையில் கேள்விப்
பாவலர்கள் நவின்மாரி வாயிலெனு மொருநூலைப்
பாடி யீந்தான்
பூவலரண் ணாமலைப்பல் கலைக்கழகத் தமிழ்த்தலைமை
பூண்டோன் யாரும்
மேவலுறு மியற்சோம சுந்தரபா ரதிப்பேர்கொள்
விறலோன் மன்னோ
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழாசிரியர்
பண்டிதமணி - மு. கதிரேசச் செட்டியாரவர்கள்
இயற்றியன
1. நலந்தரு பொருளுண் மிக்க நலத்தது மாரியென்று
புலந்தர வதுநல் வாயில் போதரச் செழியர் நங்கை
பலந்தர வுய்த்த தாகப் படைத்தெழின் மிக்க வோர்நூல்
குலந்தரு தமிழ்ப்பா வின்பங் குலவுற வியற்றித் தந்தான்
2. அன்னவன் யாவ னென்னின் ஆங்கிலந் தமிழென் றின்ன
நன்மொழி யிரண்டுங் கண்போ னவையறப் போற்றிக் கற்றோன்
துன்னுநுண் பொருள்கள் பல்ல துரிசற வேதுக் காட்டி
முன்னுற வியைத்துக் கற்றோர் வியப்புற வெழுது மொய்ம்பன்
3. கண்டது மெய்யென் றுள்ளங் கருதுமேற் கலங்கா தியாண்டுங்
கொண்டுரை வழங்க வல்லான் குறைவிலா அன்பா லென்பால்
எண்டக நண்பு பூண்டோன் இயைந்தநற் செயன்மேற் கொண்டோன்
மண்டகு புகழான் சோம சுந்தரன் மதிவல் லோனே
4. இன்னநன் னூலை யன்பி னிலச்சினை யென்ன மாரி
யன்னவன் செட்டி நாட்டெம் அரசன் அண்ணாம லைப்பேர்
மன்னிய வள்ளற் கேற்ப மனமகிழ்ந் துரிமை கண்டான்
பொன்னியல் குன்றி னிட்ட விளக்கெனப் பொலிக வீதே
இராமநாதபுரம் சமதான வித்துவானும்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
தமிழாராய்ச்சி விரிவுரையாளரும் ஆகிய
மகாவித்துவான் திரு.ரா. இராகவையங்கார் அவர்கள்
இயற்றியது
காமசுந்தரி சித்திராங்கதை காண்டிபன்றரு காதலை
யேமவிண்ணெழி லிக்கிசைத்தினி தேயதூதுயர் நாவலர்
நாமகிழ்ந்துள மின்புறத்தமிழ் நங்கைமெய்க்கணி நல்கினன்
சோமசுந்தர பாரதிப்பெயர் சூடுநன்மதி வாணனே
மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலைத் தலைமையாசிரியரும்
செந்தமிழ்ப் பத்திரிகாசிரியரும் ஆகிய
வித்துவான் திரு. நாராயணையங்கார் அவர்கள்
இயற்றியது
நாமடந்தையின் னலனெலாம் ஒருவழி நணுகும்
பாமடந்தையின் படிமையீ தெனும்படி பகர்ந்தான்
சோமசுந்தர பாரதி முகில்விடு தூது
காமதந்திரங் கடுப்பதென் றுரைப்பதுங் கடையே
வெள்ளகால் பண்ணையாரும், வித்துவானும் ஆகிய
இராவ்சாஹிப் திரு.வெ.ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள்
இயற்றியது
பாரதி முன்னாள் காளிதா சப்பேர் படைத்தொரு மேகசந்தேசம்
வாரம தாகவழங்கினான். இந்நாள் மறுபெயர் மருவுத லின்றிச்
சீரிதா இசைத்த திது; பிறர் எவரும் செப்பரி தரிதரி தென்ன
மாரிவா யிலென்றோர் மேகசந்தேசம் வழங்கினான் பாரதி மாதோ
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதி விரிவுரையாளர்.
பண்டித திரு.ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
இயற்றியன
1. முக்கோடி புறப்பகையு மறுகோடி யகப்பகையு
முனிந்தொர் நாளிற்
றிக்கோடும் புகழ்படைத்த பற்குனனைச் செந்தமிழி
னியற்கை யாமுள்
நெக்கோடுங் காதன்மணத் துறுவழுதி மகளந்த
நிகரி லான்பாற்
புக்கோடி வாயில்பகர்ந் தருடருமா கொண்மூவைப்
போக்கு மாறே.
2. சொல்லாரும் வனப்புடனே பொருள்வனப்புஞ் சுவைபலவுந்
துதைந்து கற்றோர்
எல்லாரு முடிதுளக்கும் பவந்தமளித் தனன்றொல்காப்
பியமுன் னான
பல்லாரு மளப்பரிய நூற்கடல்கள் கடைந்தமுது
பாரோர்க் கீயும்
வல்லாளன் வெல்லுஞ்சொற் சோமசுந் தரனென்னு
மதிமிக் கோனே
கரந்தைத் தமிழ்ச்சங்க அமைச்சரும்,
ஆங்கிலம், தமிழ் மொழிகளிற் புலவருமான
திருவாளர் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கள்
இயற்றின
1. பார்த்தனார் பண்டு பாண்டி மன்னார் மகளார் செய்ய
கூர்த்தவே லீர்ப்பக் கோதி லில்லறக் கடமை பூண்டு
பேர்த்தவட் பிரியச் சின்னாள் பேதுறு முளத்த ளாகிக்
கார்த்தனைச் சென்று காண விடுப்பதிம் மாரி வாயில்.
2. தன்னிக ரில்லை யென்னத் தனித்தவி சிருந்த தெய்வக்
கன்னியெந் தமிழ்த்தாய்க் குற்ற கவலைதான் தீர்ப்ப தேபோல்
பன்னெறி யுணர்ந்த சோம சுந்தரப் பெரியான் அன்னை
பொன்னடிக் கணிந்த தேயோ புதுமல ரனைய விந்நூல்.
3. வெள்ளலை யுடைத்து வீழும் வியன்கரைக் கன்னிப் பாங்கர்
உள்ளலை யுடைப்ப வீழ்ந்த வுளத்தளா யொன்றாய் மன்னும்
வள்ளலைத் தோய்ந்த பண்டை வளனெலாம் எண்ணி யேங்கித்
தள்ளலை யென்பா ளோடும் தளர்வுறுங் கற்போ ருள்ளம்.
4. அன்றுதான் மொழிந்த மாற்றம் அருச்சுனன் செவியிற் பட்டும்
பொன்றிலா வுளத்த னாகிப் பொருந்திய தன்மை கண்டும்
துன்றுவார் குழலா ளுற்ற துயருளங் கொண்டும் இன்றும்
நின்றுதான் கண்ணீர் பெய்யும் நீணிலத் தெழிலி யம்மா
மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும்
சேற்றூர் சமதான வித்துவானுமான, முகவூர்
திரு.ரா.அருணாசலக் கவிராயரவர்கள்
இயற்றின
1. பார தியாகியெனப் பன்னுகொடைப் பால்கொண்ட
பாரதி யாகிய பாவலனே - ஈரமே
தோன்றிநினை கார்விடு தூதொன்று சொற்றனையால்
ஆன்றநினை யாவர்நிகர் வார்.
2. தென்னிந்தி யாவிற் றிகழ்தமிழ்த் தெய்வவான்
மன்னிந்தி யாம்புகழ்நின் வாய்நூலே - பின்னிந்தி
யாரெல்லாம் மற்றையநூ லார்பொருளைக் காண்பிக்கும்
சீரெல்லா மென்பரிதைத் தேர்ந்து
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பகுதிப் பண்டிதரும்
இந்நூற்குக் குறிப்புரை யாசிரியருமாகிய
வித்துவான் திரு.தி.பொ.பழனியப்பப்பிள்ளை அவர்கள்
இயற்றியன
1. தென்னவனார் திருமகளைத் திருவேட்டுப்
பார்த்தன்முனந் தீர்ந்தா னாக
மன்னவனார்க் கவள்தூது விடுத்ததெனப்
பகர்ந்தநன்னூல் மாரி வாயில்
துன்னவனார்க் குறுகாதல் நிலையதுவே
பலலாற்றாற் றோன்ற வீண்டுச்
சொன்னவனா ரெனிற்கூறு வேன்கேண்மின்
தமிழகத்துத் துலங்கு சான்றீர்!
2. பண்ணாடு மிசைக்கலையும் பயனாடு
பிறகலையும் பரவி ரண்டு
கண்ணாகுந் தமிழ்க்கலையும் வடகலையும்
வளர்பல்கலைக் கழக மாக
அண்ணாம லைப்பெரிய வள்ளல்நிறு
வுங்கழக மமர்பே ராசான்
எண்ணாரும் புகழ்சோம சுந்தரபா
ரதியென்ன விசைக்கும் பேரான்.
3. வாரிதியா ருலகினிலே யறமுறையின்
வழக்குரைக்கு மன்றி லுற்ற
பேரதிகா ரத்தரத்தி னீதிபதி
பலர்மெச்சப் பிறங்கு சொல்லான்
பாரதியா கத்துடனே நந்தேயத்
தொண்டாற்றும் பண்பி னல்லான்
பாரதியா ரெனப்பல்லோர் புகழுரைக்கத்
திகழ்கின்ற பாவல் லோனே.
4. செழுந்தமிழு மாங்கிலமுஞ் சட்டமுதற்
கலைப்புலமுஞ் சீர்த்த மேலோன்
எழுந்தமிழ்த மழையெனவே சொற்பொழியும்
பெருங்கொண்ட லெம்ம னோர்கள்
அழுந்திமகிழ் கொளநுட்ப வாராய்ச்சி
நூல்பல்ல வாக்கித் தந்தோன்
கொழுந்துமுகிழ் தவச்செல்வன் தமிழ்த்தாய்க்கென்
றியாங்கொள்ளும் குரிசில் தானே.
5. தென்மதுரைத் தமிழ்ச்சங்கத் திறையனார்
தம்முருப்பேர் தீர்த்திங் குற்றே
தன்மதுரை சோமசுந் தரபார
திப்பெயரைத் தரித்தற் கேற்பத்
தன்மதுரைச் சார்புளதாத் தண்டமிழிற்
புலவருளந் தழைய வென்றே
சொன்மதுர மாகவுரைத் தான்மாரி
வாயிலெனச் சொல்ல லாமே.
6. பண்டுரைத்த நூல்வகையிற் றூதெனும்பேர்ப்
பிரபந்தம் பகரின் முன்னோர்
கொண்டுரைத்த வொருமுறையிற் பல்லோரு
முரைத்தனரக் குறைக்குள் ளாகத்
தொண்டுரைத்த வில்லாதே துணிவுறுக்கப்
புதுமுறையிற் சொற்றா னீவிர்
உண்டுரைக்கப் புக்காலிவ் வொருநூலே
பெருநூலா வுலவு மென்பீர்
7. செந்திறத்த தமிழ்வளமும் தமிழகத்தோர்
தனித்தகவுஞ் சேர வீண்டு
வந்திறுத்த வடமொழியார் வகைமையும்யாம்
மதித்திடற்கு வாய்ப்புண் டாக
முந்துறுத்து நானிலத்தைந் திணைவளமு
மொழிந்திட்ட முறைமை யோர்வீர்
எந்திறத்த தன்றனைத்து மெடுத்தியம்பல்
நூற்கண்ணே யினிதி னாய்வீர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சிப் பகுதியில் முதற்பண்டிதர்
திரு.இ.எ. வரதராஜையரவர்கள், பி.ஏ.,
இயற்றியன
1. தண்டமிழ்த் தென்னர் பாவை தன்னலங் கவர்ந்த கன்ற
அண்டர்கோன் சேய்வி லாளி யருச்சுனன் பாற்றன் காதல்
கொண்லே வாயி லாகக் கொண்டுரை விடுத்த செய்தி
எண்டகு தமிழிற் சீர்த்த வினியநற் கவியின் யாத்தான்.
2. நலந்தரு மிந்நற் காதை நவின்றவன் யாவ னென்னின்
புலந்தரு பொருள்க ளெல்லாம் புகன்றொளி ராங்கி லத்தோ
டுலந்தெழில் கெடுத லில்லா வொண்டமிழ்ப் பனுவ லாய்ந்தோன்
வலந்திகழ் வாக்கா னீதி வழக்கறி நிபுண னானோன்.
3. பெருங்குடி மரபின் வந்த பெருந்தகை கலைகட் கெல்லா
மருங்களை கண்ணாம் அண்ணா மலையர சருள்க னிந்து
தருங்கலைக் கழகந் தன்னிற் றண்டமிழ்த் தலைமை பூண்டெம்
மருங்கினும் வழக்குஞ் சீரான் வளர்தமிழ்க் குழைக்கு மாண்பன்.
4. வாம மேகலை வண்டமிழ்ப் பைந்தொடி
தாம மார்சுடர் நன்னுதற் சூட்டெனச்
சோம சுந்தர பாரதி சூட்டினன்
ஏம மார்தரு மிம்முகிற் றூதையே
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பகுதிப் பண்டிதர்
திரு. அருணாசலம் பிள்ளையவர்கள்
இயற்றியன
1. உள்ளங் குளிர்ந்தேம் உடல்வளர்தேம் ஓங்குவகை
வெள்ளந் திளைத்தேம் விளம்பல்எவன் - வள்ளத்து
நாளா ரமிழ்தமென நன்மாரி வாயிலாற்
கேளா தனபலவுங் கேட்டு
2. பழமை புதுமை யெனவிரண்டு பண்பும்
கெழுமியநூ வாக்கியெமக் கீந்தோன் - விழுமியநற்
றூய தமிழ்த்தலைவன் சோமசுந்த ரப்பெரியோன்
ஆயு மதிவலவ னாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதியில்
விரிவுரையாளரும் இந்நூலாசிரியரின் மாணவருளொருவருமாகிய
திரு.அ.சிதம்பரநாதன் செட்டியாரவர்கள் (B.A. (Hons))
ஆக்கியது
பொன்னு மணியும் பூணு முத்தும்
இன்பமும் பொருளு முண்மையி லாகா;
இன்பமும் வீடும் இயையச் செப்பும்
நூலே பொருளென நுவன்ற மேலோர்
வாய்மையை யின்னுங் கண்டா மன்றே
வாரீர் சோதரீர் மாரி வாயிலைக்
கேளீர் கேட்டுக் களிப்பீர் நீவிரும்
பாண்டிய னிளங்கொடி பாண்டவ ரைவருட்
காண்டீ வனுக்கே செலுத்திய தூதினை.
அஞ்சா நெஞ்சுட னெஞ்சா துண்மையை
யுரைக்கும் வீரன், வாதி, வாக்கி,
உரைப்பருஞ் சங்கக் கவியிற் றிளைத்தே
உரைநயங் காணு முரவோன், பாரதி
சோம சுந்தரன் சொல்லினில் வல்லான்
ராகவன், முதலா யாவரும் போற்ற
அண்ணா மலையார் அமைத்த அவையினில்
அன்புட னளித்த அந்நூ லதனை
இழுமென் மொழியின் விழுமிய துரைத்தலின்,
தோலென மொழிகோ? பாலென மொழிகோ?
புதுவதிற் புனைந்த யாப்பிற் றாகலின்
விருந்தென மொழிகோ? மருந்தென மொழிகோ?
யாதெனப் பகர்கோ? ஆய்ந்துநீ ருரைமே
மதுரையில் இராமேச்சரம் பாடசாலைத் தமிழ்ப் பண்டிதர்
வித்துவான் திரு.டி.என். அப்பனையங்காரவர்கள் ஆக்கியது
செந்தமிழ்ப் பாண்டித் திருநாட் டிறைவி
சித்திராங் கதையிணை யொத்திலாக் கற்பினள்,
காரொடு கவினுமெய்ப் போரடு சிலைக்கைப்
பார்த்தன தன்பா லீர்த்தெழு மன்பாற்
செல்லினைத் தூது சொல்லென விடுத்துப்
பெய்யெனப் பெய்யும் பெருமழைக் கடவுளால்
உய்வழி கண்டாங் குவந்துயிர் தளிர்த்த
சொற்பொருட் செறிவொடு பற்பல வளமார்
கற்பனை மலிந்த விற்பனக் கவிதை
புலவோர்க் கொருபுது நலமா ரமுதென
அண்ணா மலைதரு பண்ணார் பல்கலைக்
கழகம தாங்கட் பழகுசெந் தமிழின்
பேரா சிரியப் பெரும்பதம் சூடும்
ஓரா சிரியன் உயர்குணத் தோன்றல்
சோம சுந்தர நாமன் பாரதி
சொற்றன னதன்றகை சொல்லக்
கற்றவர் கவிநயம் முற்றுணர் வோரே
இந்நூலாசிரியரின் மாணவருளொருவரும்
தமிழ் ஆராய்ச்சி மாணவருமாகிய
வித்துவான் க.வெள்ளைவாரணன் அவர்கள்
இயற்றியன
1. தென்னர்கோப் புதல்வி சித்திராங் கதையாம்
செய்யவள் குமரியை வழுத்திக்
கன்னிநற் றுறையில் உயர்தவம் நோற்பாள்
காலையி லெழுமுகில் தன்னைத்
தன்னருட் டுணைவன் தனஞ்சயன் தேரென்
றுவந்திடத் தோழியன் றென்னத்
தன்மண மதனிற் சிறைவிட மகிழ்ந்த
முகிலெனத் தனியிற்கண் டுரைப்பாள்.
2. எல்லையில் காலம் மன்னுயிர் புரக்கு
மெழிலிநீ என்னெழிற் றுணைவன்
சொல்லிய சூளை மறந்தவன் துவரைச்
சுபத்திரை தோள்நல நயந்தென்
நல்லியல் பழிய வருத்துமிந் நிலைமை
நன்றவற் குரைத்திடென் றவன்றேம்
செல்வழி நுவன்றாங் கனுப்புவாள் தெய்வக்
காதலை விளக்கிடத் தேர்ந்தே.
3. மருதமுன் றுறையு மெளமைக்கொல வந்த
மதஞ்செறி யானையின் முகத்தே
உருவியோ ரம்பு தைத்திட வுய்த்தென்
னுயிரினை யளித்தருள் பார்த்தன்
பருகியன் றென்னைப் பார்த்ததோர் நிலையும்,
பயந்தவர் மகிழ்ந்திட இருவேம்
மருவிய மணத்து மங்கல நிலையும்,
மன்னுயிர் போயினு மறவேன்.
4. என்றுரைத் தன்பார் கட்டுரை பலவு
மியம்பிமற் றவன்றனக் கெழிலார்
தன்றனிப் புதல்வன் தாதையெங் கென்ன
வினவுவோற் கிறையிறா தயர்வாள்
கன்றிய காதற் கவலையுங் கழறி
மீண்டுவந் துரையெனக் காரும்
சென்றுமீண் டுரைத்த செய்திசால் காதை
செந்தமிழ்த் தாயணி கலனே.
5. தாய்மொழி தமிழ்நாட் டரசியல் பண்டைத்
தகுதியும் தமிழர்மேம் பாடும்
சேய்மையா ரிருவர்ச் சேர்த்திடுந் தெய்வக்
காதலும் புலப்படுத் தியாத்த
வாய்மையேர் மாரி வாயிலாங் கவிதை
வளமிகப் பெற்றுநந் தமிழில்
தூய்மையார் வாயில் மீண்டுவந் துரைத்த
துறையில்முற் றோன்றிய தூதாம்.
6. சீர்திகழ் மாரி வாயிலா மிதனைச்
செந்தமிழ்த் தாய்நுதற் கணிந்தோன்
நேர்மைசே ருண்மை விழைவழக் கறிஞன்
நிறைதமிழ் ஆங்கில முணர்ந்தே
ஆர்வமோ டண்ணா மலைக்கழ கத்தில்
அருந்தமிழ்த் தலைமையேற் றுழைப்போன்
பாரதி புகழ்கொள் சோமசுந் தரன்,நற்
பண்பினன், எம்தமி ழாசான்
கி. வேங்கடசாமி ரெட்டியார்
இயற்றியன
1. பாண்டியன்தன் மெல்லியல்நற் பண்புடையாள்
பாண்டவரிற் பார்த்த னாகும்
ஆண்டகையை நினைந்துருகி யருங்குமரி
தனிற்றவமே யாற்றுங் காலை
காண்டகுமொர் முகில்கண்டு காண்டிவனார்
இரதமெனக் கருத ஆங்கே
மாண்டகுநற் றோழியினால் மாரியெனத்
தேர்ந்ததனை வாழ்த்தி யன்பாய்.
2. நின்றுயரை நீக்கினன்யான், நீளுலகின்
துயர்நீக்கும் நீர்மை யாய்நீ
என்றுயரை என்பதிபா லின்றேகி
யினிதுரைத்தே யிரியச் செய்வாய்
துன்றுபுகழ் முகிலரசே யென்றுரைக்க,
வம்முகிலுந் துனைவி னேகி
மன்றல்புகழ் மாலையினான் பாலணுகி
மீண்டுரைத்த வண்மைக் காதை.
3. கண்டவர்தாங் களிப்பூப்பக் கவியளித்த
கம்பரிற்பிற் காலத் தந்தோ
எண்டகைய இன்கவிசெய் தீவார்தா
மிக்காலத் தில்லை யென்று
மண்டலஞ்சொல் மாற்றத்தை மாறாக்கி
வண்புலவர் மகிழ்ச்சி கொள்ளத்
தண்டமிழுந் தவமணக்கத் தமிழர்வாழ்
வதுமணக்கத் தந்தான் மன்னோ.
4. தோன்றிடிலோ புகழோடு தோன்றுகெனுங்
குறட்கிலக்காய்த் தோன்றுந் தோன்றல்
ஆன்றமனத் தறிஞரெலாம் அகங்களிப்ப
ஆழ்பொருளை அறிந்து சொல்வோன்
தேன்றகையு மின்சொல்லா லெம்போல்வார்
சிந்தையிருள் தேய்க்கும் வெய்யோன்
வான்றருநன் னகைவதனன் மலர்மார்பன்
அருள்விழியன் வழங்கு கையான்.
5. யாரெனினு மிஃதுண்மை யெனக்காணி
லஞ்சாம லியம்பு நல்லோன்
ஆரமுதாந் தமிழ்ச்சுவையு மாங்கிலமும்
ஆய்ந்துணர்ந்தோன் ஆண்மை யுள்ளோன்
வாரியமு தெனக்கேட்டார் மனமாந்தும்
வண்மொழியான் மலராள் நீங்காச்
சீரியலும் புகழ்ச்சோம சுந்தரபா
ரதியாகுஞ் செம்மல் தானே.
தமிழ் வணக்கம்
1. தமிழினைப் போற்றுதும், தாய்த்தமிழ் போற்றுதும்,
தாயைச்சேய் பேணல் தலையறம், நம் மெல்லவர்க்குந்
தாய்தமிழே யாமாத லால்;
2. தென்மொழி போற்றுதும், தீந்தமிழ் போற்றுதும்,
தாயிற் சிறந்தம்மம் தானாம்வாழ் நாளெல்லாம்
ஆய்சுவை யோடளித்த லால்
3. தொன்மொழி போற்றுதும், சொற்றமிழ், போற்றுதும்,
போனகமாய்த் தாரகமாய்ப் போக்கியமாய் நாமார
வானமுதின் மேலினித்த லால்.
தமிழ்ப் பல்லாண்டு
1. பாடுதுநாம் தமிழணங்கின் பல்புகழும்; பாடிப்
பரவுதுமே லவளருளப் பட்டுயர்வோ மன்றே;
ஈடுயர்வில் மொழிக்குழவி என்றும்வள ரிளமை
எழிலினிமைக் கிழவியைநா மேத்தியிறைஞ் சிடுவாம்.
2. நாவலநற் நீவிலுயர் நாயகமா யொளிர்வாள்
நாகரிக முலகில்முதல் நல்கிமகிழ் நங்கை
காவல்பெறுங் கடவுளர்க்கிங் கேவல்தரு மிறைவி
கவினனைத்துங் கருவுயிர்த்த காரிகைநங் கன்னி.
3. முதலிலளோர் மூப்புமிலள், மொழிகள்குல முதல்வி,
முன்னமுயிர்க் கிருளிரிய முறுவல்முகிழ்த் தொளிர
உதவியுயர் திணையினருஞ் சுட்டுணர்வி னுரையை
உலகில் விலங் கிடைநரர்க்கு வீற்றுரிமை தந்தாள்.
4. வசையுறுபாழ் வயதிலள், முன் முழுதுலகை யாண்டாள்
வரும்வடசொற் கிடம்வடக்கே வழங்கிம ழளியாள்
திசைமொழிகள் கருவழியத் தேக்கெறியத் தின்ற
செய்மொழியின் பசிகுறையச் செய்துயர்செந் தமிழாள்
5. மண்ணுலகில் மொழிகள்பல மாண்டிடநாம் காண்போம்,
வளமலிநூல் பலபடைத்தும் வாழ்ந்திலவம் மொழிகள்.
எண்ணரிய வயதுமுதுக் குறைவறத்தால் முதியள்,
எழிலிளமை வளமிறவாக் கன்னிதமிழ்க் கடவுள்.
6. ஞாலமொழி பலவிறக்கத் தானிலவுஞ் செய்யா
நல்லியல்பை யுயிர்நிலையாக் கொண்டதமிழ் நங்கை,
காலவிடம் தொட்டறியாக் கட்டிளமை காட்டும்
கற்புயர்நற் காதலுயர் மெய்ப்புலவர்க் கருள்வாள்.
7. பொய்ம்மொழியாப் புலமைவளம் வள்ளுவர் போல்வாரும்
போற்றுமறி வறவுரிமை கீரனனை யாரும்
மெய்ம்மொழியா லுயர்த்தபுகழ் மடியில்வளர் தமிழை
மேதினியாள் முதல்மகளாய் மேவுதலோர் வியப்போ?
8. புலவருளம் புகுந்தவர்நன் னாவில்வளர் நல்லாள்
புதியபல வழகுமணம் பொலியுமலர்ப் பொழில்கள்,
பலவிதநற் கனியொடுதீம் பால்மலிபல் லுலகு
பைஞ்ஞிலமார் பண்ணையெனப் படைத்துநிதம் பரிப்பாள்.
9. தன்னிகரி லாதபழங் கபிலனுயர் கம்பன்
தமிழ்சொலிளங் கோவொடுமுன் வள்ளுவரைத் தந்தாள்
கன்னியழி யாமலருங் கருவில்முதிர் கலைகள்
கற்பமழி யாதகவி யுலகுபல தருவாள்.
10. நல்லதமிழ் நங்கைவளம் நாடுதுநாம் நாடி
நானிலத்து மேன்மொழிகள் நல்குபல நலமும்
எல்லையறு மெழிலிளையாட் கணிந்துமகிழ்ந் தேத்தி
என்றுமிசை வளர்குவம்பல் லாண்டுநிதம் பாடி.தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழத்து வேறு
தமிழினிய தெய்வதமே மொழிகள்குலத் தனிவிளக்கே
தகவெழில்மெய் சீர்த்த சொல்லின்
அமிழ்துவிழைந் தடுத்தபல புலவரெலாம் அசையலையைக்
கடைந்தபொழு தழகி னோங்கும்
துமியினிடை யெழுந்தொளிருஞ் செவ்விஅறி வெனுமலவன்
துணைவியருண் முதல்வி தூய்மை
கமழ்கவிதை உலகுபடை கவிஞருளங் களிவிக்குங்
காதல்வளர் கன்னி வாழி.
அவையடக்கம்
என்று மிளமை யெழிலார் தமிழணங்கு
நின்றுவளர் நாவலர்தம் நேர்மையினால் நன்றுணரா
நெஞ்சக் கயவர்தம் நீர்மையினா னூலியற்ற
அஞ்சாமை என்பா லறம்
முதற்பதிப்பு முகவுரை
தமிழறிஞர் திரு. நீ. கந்தசாமிப்பிள்ளையவர்கள்
ங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி என மங்கலச் சொல்லும் எதுகை நலமும் தொடர்பு பெற, இன்னிசையோடு கேட்பார் உள்ளத்தைப் பிணிக்கும் தலைப்பைக் கொண்ட இச்சிறுகாவியத்தின் ஆசிரியராகிய உயர்திருவாளர், நாவலர், சோம சுந்தரபாரதியார் அவர்களைத் தமிழ் நாட்டிலும், தமிழ்க்கலையும் உணர்ச்சியும் பரவிய பிற நாடுகளிலும் தெரியாதவர் எவருமிலர் என்றே கூறலாம். இவர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழ்த் தொண்டாற்றியும், ஆங்கில நூற் புலமையும் பல்கலைப் பயிற்சியும் நிரம்பி உள்ள புலவர் பெருமக்களில் முதலில் வைத்தெண்ணப் பெற்றும் புகழோங்கித் திகழ்ந்தும், இருபெருஞ் செல்வமும் ஒருங்கெய்திய பெரியார் ஆவர். இவர்கள் இளமைப் பருவம் தொட்டே வண்டல் பயில்வன எல்லாம் வளர்மதியம் சடைக்கணிந்த, அண்டர் பிரான் திருவார்த்தை என்னும் தெய்வப் புலவர் திருமொழியை ஒட்டி வண்டல் பயில்வன எல்லாம் செந்தமிழின் வளம் பேணல் எனக் கூறும் வண்ணம் தமிழ் நூல்களைப் பயில்தலும், ஆராய்ச்சி செய்தலும், நுணுகி உண்மைகளைத் துணிதலும், பழந்தமிழர் பண்புநலம் கண்டு வீறுகொண்டெழுந்து காண்போரும் கேட்போரும் வியந்து தன்னைப் பின்பற்றித் தமிழ்ப்பணி செய்யும் படி சொல்லாடலும், ஆகிய பொழுது போக்கையே மேற்கொண்டு வந்துள்ளார்கள். இதுபோது தேசியகவி, எனப் பல்லோரும் புகழும் உண்மைத் தமிழ்க்கவிஞர் காலம் சென்ற சுப்பிரமணிய பாரதியார் அவர்களும், நம் நாவலர் பாரதியார் அவர்களும் மதலைப் பருவமுதலே ஒன்றிவாழ்ந்து, இடைவிடாது பாவலர் பாரதியார் அவர்கள் கவிவன்மையையும், நாவலர் பாரதியார் அவர்களின் ஆராய்ச்சித் தெளிவையும் சொல்வன்மையையும் இணைத்துப் பேசி மகிழ்வது தமிழறிந்த பெருமக்களுக்கு வழக்கமாக இருந்ததும் இருப்பதும் ஆன உண்மை.
நம் நாவலர் அவர்களின் இளம் பருவச் சூழலும், பள்ளிப் பருவப் பியற்சியும், கல்லூரிப் பருவப் பல்கலை வளர்ச்சியும் அவர்களைத் தமிழ் அன்னையின் தனிமகனாக ஆக்குவதற்கு ஏற்றனவாயிருந்தன. இளமையில் கலைநலம் பெற்ற இளைஞ ரொடும், கருத்து முதிர்ந்த புலவரொடும். உள்ளம் உயர்ந்த வள்ளல்க ளொடும் இடைவிடாது பயின்ற இவர்களது நுண்ணறிவும் உள்ள விரிவும் பெருநலமெல்லாம் ஒருசேரப் பெற்று வளம்பட நாளும் வளர்வவாயின. பள்ளி, கல்லூரிகளில் நல்லாசிரியர்பால் பயிலுங் கால் இளமையிலேயே பண்புபெற்ற இவர்கள் நுண்ணறிவு, ஆன்ற ஆங்கில ஆசிரியர் அன்புறவாலும் பழக்கத்தாலும் தொடர்பாலும் மிக மிக வளர்ந்து உயர்நிலையை அடைவதாயிற்று. இயற்கையாக அமைந்த தமிழ்ப்பற்றும் வீரமும் பண்பட்ட நுண்ணறிவோடு பரந்த நூற்பயிற்சியும் கலந்து, ஆரம்நிறை பொதியிலின் இளங்கலென்ன வளர்ந்து நறுமணத்தொடு தமிழகமுழுதும் பரவி நலம் தரலாயின. தமிழ்நாட்டுக்கோ, மொழிக்கோ ஏதேனும் இழுக்கோ இடை ஊரோ தோன்றுங்காலத்து இவ்விளங்கால் வெய்ய கோடை மேல் காற்றாகவும் சூறையாகவும் சுழன்ற அவ்விடுக்கண்களைத் தூற்றிச் சூழும் கடலில் எறிந்து ஏமம் செய்து மகிழ்வதும் உண்டு.
நம் நாவலர் வழக்கறிஞராகப் பல ஆண்டு தென்பாண்டி நாட்டில் திகழ்ந்து, நாள்தோறும் வளரும் வருவாயைப் பெற்று வந்தும், அதன் பயனையும் புகழையும் சிறிதும் கருதாமல் தமிழ்ப் பணி ஒன்றையே பெரிதும் பேணி, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்னும் தண்ணோக்கோடு அண்ணாமலைப் பல் கலைக் கழகத் தமிழ்த் தலைமைப் பேராசிரியராக அமர்ந்து தொண்டாற்றிப் பெரும் புகழ்கொண்டதும், அங்கு அவர்கள் தொடர்பால் நூற்றுக்கணக்கான மாணவர் கல்விப் பயிற்சியோடு வீர உணர்ச்சியும் பெற்று உலவுவதும் நம்மவர்க்கெல்லாம் பேரானந் தத்தை விளைவிப்ப தாகும்.
ஓய்வுபெற்ற காலத்தில் கூடற்குடபால் பரங்குன்றின் பாங்கர் பழனம்சூழ் பசுமையிருக்கையில் அமர்ந்து, நெறியும் நிரலும் கொண்ட வாழ்க்கையில் தமிழ்த் தொண்டாற்றிவருவது, காண்ப வர்க்கும் கேட்பவர்க்கும் களியூட்டுவதாகும். தம்பெயர்க் கேற்ற பேரழகோடு மதியழகும் பெற்று, முதுமைத் தெளியும் இளமை உளவளமும் கொண்டு, தம் இருக்கையில் இன்பப் பெருக்கொடு சுவடிகளைத் துருவிப்படிப்பதும், கண்ட உண்மைகளைத் தேனின் இனிய சொல்லில் வேண்டுழி வேம்பும் கலந்து அருகயலிருப் போர்க் குணர்த்துவதும் ஆர்வமுடையவர்க்கெல்லாம் பேருவகை விளைப்பதொடு, அந்நிலையை மனத்தால் நினைப்பவர்க்கும் அளவிறந்த ஆனந்தம் உண்டாக்கி வருவனவாகும். இப்பெருந் தகையார் தமிழிலும் பல அரிய அறிவினிக்கும் நூல்களியற்றி, அவற்றுள் ஒரு சிலவே வெளியிட்டுள்ளார். ஏனையவை எல்லாம் வெளிவரச் செய்வது தமிழ் மக்களின் கடமை ஆகும்.
இப்போது அவர்கள் வெளியிடும் மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி என்னும் சிறுகதைச் செய்யுள், தமிழகத்தின் தென் பகுதியில் செல்வமிகு வாழ்க்கையின் சில கூறுகளையும், குடிப் பிறப்பின் சால்பையும், இடை நடுவே காணப்படும் எளிய இனிய இயல்பையும், இழிதகவுடையார் பழிவளருள்ளப் பான்மையையும் நல்ல சொல் ஓவியமாய்க் காட்டுவதாகும். பொருட்சிறப்பினும், உண்மை காணும் ஊக்கத்தினும், ஆராய்ச்சித் திறமையினும் வன்மையுற்ற உளக்கருத்துணர்த்தவரும் சொற்கள் எவ்வளவு எண்ணி முயன்றாலும் தம் இயற்கை மாறமுடியாதாகலின், இப்பாக் களில் சொல்லின் நொய்மையும் பொருள் எளிமையும் காண இயலவில்லை. இதை ஒரு குறையாகக் கொள்வதும் ஒண்ணாது. அதுவுமன்றி, இது அவர்கள் விளையாட்டாக எழுதிய செய்யுளா கலானும், இடையீடுற்ற பல ஆண்டுகளுக்கு முன் பின்னாக இயன்ற பாக்களாகலானும், எல்லோருக்கும் இனிக்கப் பேசி எளிதில் புகழ்பெற விரும்பாது உண்மை அறநோக்கில் ஊன்றி உறைத்த உணர்வூறும் உரனுடை உளக்கிளர்ச்சியான் எழுவன ஆகலானும், இப்பாக்களை இப்பண்புகளைக் கருதி அளந்தறிவார்க்குப் பல இடத்தும் நலங்காண இயலும்.
“பேசும் மனிதருடன் உலகில் பிறந்து தவழ்ந்துநடந்தோடி,
வீசும் பொதியை வளி ஊர்ந்து…. திகழும் தமிழணங்கு”
விருத்தர் வியந்தனர், நன்மடவார் விழியில் அவனை வர வேற்றார் - சோதிநிறைந்த முகத்தறிவு சுடரும் விழிகளிலோர் துயரும் - அறத்திற் கனியும் உயர்காதல் - அருளின் உரு ஒளிரும் அறிவே - விரல்கள் உளரா என் உளயாழ்ப்பண்ணே - பாசி படரு வது போலப் படிறுநிறை மனத்தள் - இவைபோன்ற தொடர்களில் இனிய சொல்லும் கனியும் கருத்தும் ஒன்றி என்றும் உவகை தரும்.
அறத்தில் கனியும் உயர்காதல் என்று நம் நாவலர் கூறும் பொழுது, காதலின் உண்மை இலக்கணத்தைச் சூத்திர உருவாய் வெளியிடுவதுபோல் தோன்றுகிறது. காதலின் அடிப்படை அறமே என்பதும், அறத்தில் வேரூன்றாத காதல் கனிதராதென்பதும், அறம் வேரும் அதன் கனி காதலுமாகத் தோன்றும் வழி ஒன்றிலேதான் இனிய காதற்கனி பழுக்கும் என்பதும் அடங்கக்கூறி, அறத்தின் வரம்பும் காதலின் எல்லை இல்லாச் சுவையும் விளக்கி, அற வரைவில்லாது துய்க்கும் காமச்சுவை எந்நாளும் மன்னும் சீரொடு சிறப்பைத் தராதென்பதும், இன்னும் இன்ன இனிய பல உயர்ந்த கருத்துக்களும் ஊன்றிச் சிந்திப்பார் உள்ளத்தில் வியப்பை விளைத்து நயப்பைத் தரும். கனிந்த உள்ளக்கவிகள் எல்லாரும் பொரு ளொன்றிலேயே கருத்தை நிறுத்திச் சொல்லைப் பொருட்படுத்தார் என்பது கவிச்சுவை உணர்வார் துணிவு என்பதும் இங்கு நாம் நினைவு கொள்ள வேண்டும்.
இது அளவால் சிறு நூலாதலின், யாவரும் தாமே இதை முழுதும்படித்து இன்புறவேண்டும் என்றெண்ணி இன்னும் பல எடுத்துரைக்கவிரும்பாது விடுகின்றேன். இந்நூலாசிரியர் ஆராய்ச்சித் திறமும் வாழ்க்கை உயர்வும் இவர்களொடு பயிலும் பேறுடை யவர்கள் உவந்து பாராட்டுவதால், தமிழகமுழுதும் தெரிந்து மகிழும் வண்ணம் தங்கள் ஓய்வுக் காலத்தில் தம் வாழ்க்கை வரலாறு ஒன்றெழுதி வெளியிடுவார்களாயின், தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் தருவதாகும். தமிழ்ச்சங்கம் அமர்ந்த தமிழ்ப்பெரும் கடவு ளாம் ஆலவாய் அண்ணல், நம் நாவலர் அவர்கட்கு நீடிய வாழ் நாளும் வல்லுடலும் ஏனைய இன்பங்களும் மேன்மேலும் வளரச் செய்து தமிழ்ப்பணி இடைவிடாது செய்ய அருளும் வண்ணம், அவன் அடிகளை வணங்குகின்றேன்.
மயிலை
10 - 2 - 47
-நீ.கந்தசாமிபிள்ளை
முதற் பதிப்பு - முன்னுரை
ப்பனுவல் முழுதும் இப்போது புதிதாய் நான் எழுதினதன்று. என் மாரிவாயில் முன்னுரையில் சொன்னபடி, 1909 ஆம் ஆண்டில் குமரித்துறையில் தொடங்கி முடிவுறாமல் நின்றுபோன புதினக் கதையில் மங்கலக்குறிச்சிப் பொங்கல் விழா எனும் தலைப்புடன் சில பாக்கள் எழுதப்பட்டிருந்தன. நான்கு வாரங்களுக்கு முன் அவற்றைச் சில நண்பர் படிக்க நேர்ந்தது. அவர்கள் அப்பாட்டுக்களைப் பாராட்டியதோடு, அக்கதையில் கண்ட பொங்கல் விழா நாளின் நிகழ்ச்சிகளை மட்டுமாவது எளிய நடையில் பாடி ஒரு சிறு பனுவலாக வெளியிடுமாறு வற்புறுத்தித் தூண்டினர். அதற்கு இணங்கி, 150 பாட்டு வரை இயற்றியும், முன் எழுதியவற்றுட் சிலவற்றைப் பொருத்தம் நோக்கித் திருத்தியும், அமைத்தது இத்தாழிசைக் கொச்சகச் செய்யுள். இப்பாக்களை வண்ணவகை எனக்கொள்ளினும் இழுக்கில்லை.
நண்பர் வற்புறுத்திய நடை எளிமை நாட்டத்தால், இச் செய்யுளில் கவிச்சுவையும் பொருள் வளமும் குறையலாம். உணர்வின் செறிவு நெகிழ்வுக்கேற்ப, இறுக்க இளக்க மொழி ஆட்சி செய்யுளுக் குச் சுவை தரும். ஆனால் பிழை விலக்கி எழுதுவதே பிசகெனக் கருதும் புதிய தமிழர், பாட்டில் செய்யுள் மொழிக் கலப்பைத் தவறென வெறுப்பர். ஆதலால், செறிவுக்குரிய செய்யுள் மொழி யைச் சுருக்கி, பிழையற்ற பேச்சுவழக்கில் இப் பனுவல் பாக்கள் அமைந்துள்ளன.
இது அகத்திணைச் செய்யுளாதலின், இதில் தலைமக்கள் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் ஆயினர், இச்செய்யுள் அகப்பகுதியில், நிகழ்ந்தது கூறி நிலையல் எனும் துறையில், தலைவி கூற்றாகும் இது தொல்காப்பியர் கூறும்,
“சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
ஓதல் வேண்டாது குறித்தது தோன்றும்”
புலன் வகையாகும். விருந்து வகை எனினும் பொருந்தும்.
இப்பாக்களை எழுதி உதவிய நண்பர் வேந்தன்பட்டி வித்து வான் பெரி. சிவனடியான் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர் வித்துவான் வெள்ளைவாரணர், இருவருக்கும் கடப்பாடுடையேன். நான் கேளாமலே, அன்புரையாக இதற்குப் பாயிரம் பாடித்தந்த அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியரும், புலவர் பரம்பரையினருமாகிய வித்துவான், பத்துநூற்றுப் பொன் பரிசாளர் அருணாசலம் பிள்ளை அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும்.
பசுமலை
15 - 1- 47
இளசைகிழான்,
ச.சோ.பாரதி
கதைச் சுருக்கம்
பாதியமலைச் சாரல்; தெற்குமலைவாரம்; வட்டமலை வளாகம்; அதில் பழமையான சிற்றூர், மங்கலக்குறிச்சி. அங்குக் கண்ணுக்கினிய காட்சிதரும் ஒரு பெரிய வீடு; அது, உயர்குடிச் செல்வ வேளாளர் ஒருவருடையது. அதைப் பண்ணையார் மாளிகை என்பர். பண்ணையார் புகழொடு வாழ்ந்து மாண்டனர். அவருக்கு மக்கள் இருவர். மூத்தவர் அமைதியும் அருளும் நிறைந்தவர். அவருக்கு ஆண்மகவில்லை; இளையவர் நடுவயதில் காலமானார். அவருக்குப் புதல்வர் இருவர், புதல்வியர் இருவர் பிறந்தனர். அவருள் மூத்தவரின் முதல் மனைவி மகப்பேறின்றி மரித்தாள். மகவாசையால் தன் முதுமை கருதாது ஓர் ஏழைப் பெண்ணைப் பொருள்கொடுத்துப் பெற்று மறுமணம் புரிந்தார். சில ஆண்டு கழிந்து பிள்ளை இல்லாமலே இறந்தார். இளையவர் சமர்த்தர், அறம் திறம்பா உளத்தர். தனக்கு மனமொத்த பெருங்குடிப் பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தார். தமையரின் இளையாள் தன்னைத் தவறாக விரும்ப, இணங்காமல் மறுத்தார். அதை வெறுத்த இளையாள் தன் கணவருக்குத் தலையணை மந்திரம் ஓதினள். அவர் தம்பிபால் மனம் மாறுபட்டார். அது கண்ட இளையவர், சூல்கொண்ட தன் மனைவியுடன் வெளியேறி இலங்கை சென்று தங்கினார். பெரும் பொருளீட்டினார்.
அங்கு அவருக்கு மகன் பிறந்தான். அவன் பிள்ளைப் பருவம் செல்வ விளையாட்டில் கடந்தது. பள்ளிப் பருவம் படிப்பிலும் உடற் பயிற்சியிலும் நடந்தது. பிறகு அவனைத் தந்தை உயர்தரக் கல்விக்கு மேல்நாட்டுக் கனுப்பினார். அங்குக் கலைகளில் முதன்மை பெற்று மீண்டான். சால்புகள் மிகுந்த அவனால் தங்கள் பழங்குடிப் பெருமையைப் புதுக்கிப் பெருக்க விரும்பினள் அவன் தாய். தங்கள் தாய்நாட்டில் அவன் நல்ல பதவி பெற்று வீறுபெறச் செய்யும்படி தன் கணவரை வேண்டினாள். அவரும் உடன்பட்டு முயன்று உதவினார் . பிறகு மகனை முதலில் மங்கலக் குறிச்சியில் பெரிய பாட்டரை வணங்கி, அவர் வாழ்த்துப் பெறும்படி அனுப்பினார். அவனும் அங்குப் போந்தான். பேரன் பாட்டரைக் கண்டு தண்டனிட்டான். அவரும் அவனை மகிழ்ந்து வரவேற்று வாழ்த்தினார். அவனே நம் பாட்டுத் தலைவன்.
மூத்தவரின் இளையான், தன் கணவர் பண்ணைச் சொத்துக் கள் அனைத்தையும் தானே கவரக்கருதினள். தன் தந்தை கணவருக் குக் கடன் கொடுத்தது போலவும், அக்கடனுக்குப் பண்ணைச் சொத்து முழுமையும் கணவர் விற்றது போலவும், சில மலரணைப் பத்திரங்கள் பிறப்பித்தாள், தந்தையிடமிருந்து சொத்துக்களைத் தன் பெயருக்கு எழுதிவாங்க எண்ணினாள். தற்செயலாய் அவள் தந்தை இறந்தார். சொத்துக்கள் தன் மாற்றாந்தாய் மகனான அண்ணருக்கு இறங்கும் என அறிந்து அஞ்சினாள். அண்ணரிடம் அதிக அன்பு காட்டினாள். பிறகு மெல்லப் பத்திரங்களைப் பற்றிக் குறிப் பிட்டாள். கணவரின் தாயத்தார் சொத்துக்களை அடையாமல் தடுக்க அப்பத்திரங்கள் பிறப்பிக்கப் பெற்றன; தந்தை தன் பெயருக்கு மாற்று முன் இறந்தார். தாங்கள் அவற்றை எனக்கு மாற்றித் தரவேண்டும் என்று, அண்ணரை அவள் நெருக்கினாள். தங்கையின் வஞ்சம் அறிந்தார் தமையர். தந்தைபேரால் வந்த சொத்தும், தான் தேடிய பொருளும் தனக்குப் பிறகு தன் ஒரே மகளுக்கும் அவள் கணவனுக்கும் ஆகும்படி மரணமுறி (Will -ஒயில்) எழுதினார். அதுவும், வயது வந்து அவள் விரும்பும் கணவனை மணந்தால் மட்டும் ஆகும் என்றும், அன்றேல் அச்சொத்துக்கள் தனக்குதவி செய்த தன் இளைய மைத்துனர் வழியைச் சேரும் என்றும் வரையறுத் தெழுதினார். அதை அறிந்த தங்கை சினந்து தமையரையும் அவர் மனைவியையும் நஞ்சு அருத்தி மாய்த்தாள். அவள், கணவன் இறந்தபிறகு, தன் தாய்வழியில் ஏழை உறவினனான பண்ணை உழவனோடு உறவாடிக் கருவுற்றாள். ஊர் அலருக்கு உட்கினாள். தல யாத்திரைக்குப் புறப்பட்டாள். அயலூரில் ஒரு மகனைப் பெற்றாள். உழவன் தங்கை ஒரு கைம்பெண்ணுக்குப் பணம் கொடுத்து, அம்மகவை அவள் மகனாக வளர்க்கச் செய்து திரும் பினாள். சில ஆண்டு கழிந்து, தன் மகனை அவ்விதவையிடம் வாங்கி, பிள்ளையில்லாத கணவர் குடிக்கு ஊரறியப் பிள்ளை கூட்டி வைத்துக் கொண்டாள். தன் மகனுக்குத் தனக்குப்பின் அத்தனை சொத்தையும் சேர்க்க வேண்டும் என்பது அவள் ஆசை. அதற்காகத் தன் தமையன் மகளை அம்மகனுக்கு மணம் செய்து, அவளோடு சொத்தை எல்லாம் அவனடையச் செய்ய எண்ணினாள். அதற்காக அம்மருகியைக் கொல்லாமல் தன் ஆதிக்கத்தில் வைத்து வளர்த்தாள். அப்பெண்ணே இப்பாட்டின் தலைவி.
இவ்வாறிருக்க, பொங்கல் விழா வந்தது. விடியும் வேளையில் ஆற்றுக்கு தை நீராடச் சென்றாள் தலைவி. இருட்டில் வழுக்கிச் சுருட்டும் சுழியில் விழுந்தாள். வெள்ளம் இழுத்தது. அந்நேரம் குளிக்க வந்த தலைவன் கரையில் நின்றான். ஆற்றில் குதித்து விழுந்தவளை ஏந்தி நீந்திக் கரைசேர்த்தான். இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு காதல்கூர்ந்தார். எனினும், அங்கே அவளிடம் அந்நிலையில் தனியே பேசுவது தகுதி அன்றென நினைத்துப் பெருந்தகை பிரிந்தான். தலைவி தன் வீடு போந்தாள். அங்குப் பொங்கல் உண்டாட்டு முடிந்தது.
அவ்வூரில் மாலையில் ஐயனார் கோயில்முன் வழக்கமாய் நடக்கும் விடலையர் போட்டி விளையாட்டைப் பார்க்கப் போகும் மகளிரொடு தலைவியும் வந்தாள். போட்டியில் எல்லோரையும் விடத் தலைவன் சிறந்து வாகை சூடி விளங்கினான். அன்றங்குப் புதிய வேங்கை ஒன்றையும் தனியே மலைந்து கொன்று அருந்திறல் காட்டினான். அதனோடு தன் விற்றிரமும் விரகமும் விளங்க ஒரு முல்லைக் கொத்தை அம்பால் எய்து தலைவி குழலில் செருகினான். யாவரும் அவனைப் போற்றினர். விளையாட்டு முடிந்ததும் தலைவி வீடுபோந்தாள். அவள் மாமி, அரங்கில் நடந்ததை அறிந்து தலைவியையும் அவள் மாண்ட தாயையும் பலவாறு பழித்தாள். அப்போது அங்குவந்த முதியளான தலைவியின் சித்தி, அம்மா மியைக் கடிந்து, அவளின் பொல்லாங்குகளை எல்லாம் எடுத்து விரித்து இடித்துரைத்தாள். அன்று முற்பகலில் தலைவி வளையை உழவன் திருடியது வெளிப்பட்டு, அவனைக் காவலர் பிடித்து அடித்தனர். அடி பொறாமல் குடி வெறியில் மாமியின் காதகக் கதைகளைக் கக்கினான். அவைகளையும் அம்முதியோள் தன் மைத்துனிக்கு விளக்கி, விரைவில் தூக்குத் தண்டம் அவளுக்கு கிடைக்கும் என அறைந்து அச்சுறுத்தினள்.
அதற்கிடையில் தலைவனுக்கு வெற்றிமாலை சூடி, இளைஞர் அவனை ஊர்வலமாக உலாவரச் செய்து பாராட்டினர். அதைப் பொறாமல் கைம்பெண் பெற்ற கயமகன் தலைவனைக் குத்தினான். இளைஞர் குத்தினவனைக் குமைத்துக் காவற்கூடத்தில் அடைத் தார். தலைவனை மருத்துவர் புண்ணைத் தைத்துப் பாட்டர் வீட்டில் சிகிச்சை செய்தார். உணர்விழந்த தலைவன் மயக்கத்தில் தலைவி பெயரைச் சொல்லிப் புலம்பினான். மருத்துவர் சொல்படி பாட்டர் அனுப்பிய மருத்துவப் பெண், தலைவியின் மாமி வீட்டில் வந்து தலைவிக்கு அவன் நிலைமையை அறிவித்தாள். தலைவியும் அவள் சித்தியும் மருத்துவப் பெண்ணும் பாட்டர் மாளிகைக்கு வந்தனர். அங்கே மருத்துவர் தூண்ட, பாட்டர் வேண்ட, தலைவி பரிவால் தலைவனை அருகமர்ந்து இங்கித இன்னுரைகளால் உயிர்ப்பித்தாள். அவனும் தெளிந்தான். தனித்த இருவரும் காதலால் உளங்கலந் தொன்றி உவந்தனர். பாட்டரும் சித்தியும் வாழ்த்தினர். மாமி தனக்கு வரும் தண்டனைக்கு அஞ்சித் தற்கொலை செய்து மாண்டாள்.
இவ்வாறு நிகழ்ந்தவற்றைத் தலைவி, மணந்து மனை மாண்பு பெற்று வாழுங்கால், தன் தோழிக்குக் கூறினாள். அக்கூற்றே இச்செய்யுளின் பொருள்.
சிறப்புப் பாயிரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர்
வித்துவான் அருணாசலம் பிள்ளை அவர்கள்
அன்புரை
நாவலர், உயர்திரு. சோமசுந்தர பாரதியார் அவர்கள்
இயற்றிய பொங்கல் விழாப் பாராட்டுப் பாக்கள்.
“ஆய்ந்தாய்ந்து சொற்பெய் தமைத்த விருந்திதனைத்
தீந்தேன்பெய் தட்டதொரு சிற்றுணவா - மாந்தி
உவப்பர் தமிழறிஞர், ஒண்பொருள்தேர்ந் துள்ளம்
உவப்பர் சுவைப்பெருக்கில் நின்று”. (1)
“உலகியலும் மக்கள் உளப்பாங்கும் காதல்
நிலைஅரும்பி முற்றும் நெறியும் - விலக்கில்லா
ஊழின் வலியும் உரைத்திறனும் ஓவியம்போல்
சூழும்இந் நூலகத்தே தொக்கு.” (2)
“நாவலர் என்றார் நவிலும் திறம்கண்டோர்,
பாவலர் என்று பகர்வேமால் - மூவா
மருந்துவிளை சிற்றூர் மருங்கமர்வோர் செய்தி
திருந்த அமைத்தமுறை தேர்ந்து.” (3)
“எங்கள்பே ராசான், இளசைகிழான், வாகைத்
தொங்கல் புனைசோம சுந்தரன்என் - றெங்கும்
புகலும் பெரியோன் புதிதுபுனைந் தியாத்த
தகவுளநூல் வாழ்க தழைத்து.” (4)
(ஒப்பம்) மு. அருணாசலம் பிள்ளை
அண்ணாமலைநகர்
தமிழாசிரியர்
8.12.1946
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
கோனூர் சமீன்தாரும், பெருங்குடித் தனவணிகச் செல்வருமான திருவாளர் பெ.ராம.சி. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு
உரிமை உரை
"இரவைப் பயந்துநிதிக் கிழவன்
எதனையும் வேண்டாமல் ஈந்து
அரவை அணிந்துமகிழ் அரனுக்
கன்பன் எனஅளகை உறையும்
கரவை இகழ்ந்து,கலை வளர்க்கக்
கருதி உலகில்வரு தரு,பால்
பரவை இகழ்ந்துவிரி புகழார்
பருணிதன் சிதம்பரன் பாரி." (1)
"பாரில் புகழ்விரும்பிப் பலரும்
பணத்தை விரயமிடப் பார்ப்போம்;
காரில், கைமா றெதுவும் கொடையால்
கருதா தறிஞர்அற வோர்பால்
நேரில் பழகிப் பிறர் அறியா
நிலையில் புலவர்பெற நினையாச்
சீரிங் குதவும்வண்மை அறத்தின்
செம்மல், சிதம்பரன்மெய்த் திருவன்." (2)
"திருவை அறத்தினும் நல்அறத்தைத்
திருவினும் செய்துயரும் திறலோன்,
பொருவில் தமிழ்கமழும் பாவைப்
பொருளும் பதமும்பதம் பார்த்து,
பருவ மழைமகிழும் பயிர்போல்,
பாடும் புலவர்உளம் உவப்ப
மருவிச் சுவைமதிக்கும் மகிழ்நன்
மணக்க இப்பாஉரிமைப் படுப்பேன்." (3)
இளசைகிழான் ச.சோ.பாரதி
மாரி வாயில்
நாட்டின் பெருமை
1. வேதம் தமிழ்க்குறள் வீத லிலாப்புகழ்
ஓத ஒளிரெழு ஓதிம முக்கடல்
ஏத மிலாஅரண் என்றும் இழைத்துயர்
போதம் வளர்தமிழ்ப் பூருவ நாஅடு.
2. கங்கை யெனப்பல யாறு கவின்செய
மங்கை வளப்பரு வம்தவி ராதறத்
துங்க மடிவளர் தூயள் தமிழ்கமழ்
சங்கம் வளர்ந்தொளி தங்குதென் னாஅடு.
3. தூரத் துரோமரும் சீனரும் தொல்லுல
கோரறி நாகரி கத்தின ரொக்கலும்
சாரத் திரவியம் ஐந்துந் தருந்தமிழ்
ஆரத் தொடாரம் அளிக்குந்தென் னாஅடு.
4. ஊரி யூர்காரியொ டோர்தவி சார்ந்தவர்
பாரிற் பழங்குலப் பாண்டியர் கோல்சுமந்
தாரின் றமிழ்ப்புக ழாருந்தென் னித்தில
வாரித் திரைவளர் வண்கும ரித்துறை.
வேறு
5. தென்னவர் புகழுஞ் செந்தமிழ்ப் பரப்பும்
அன்னதென கடலை யாண்டவர் விறலூர்க்
கன்னிநன் மதில் கற்பமுங் கடலும்
தன்னலம் தொலையாச் சால்புடைக் குமரி.
6. பாண்டியர் பழமைப் பார்த்திவர் குலத்தள்,
பாண்டவர் நடுவன் பார்த்தனன் மனைவி,
ஆண்டகைப் பிரிந்தாள், ஆற்றிலள், பசலை
பூண்டவள் புரிந்து போற்றிய குமரி.
7. வேட்டபின் விடுத்துப் போனவன் உருவம்
தீட்டலு மழுங்குஞ் சிந்தையு முடையள்,
ஊட்டமு மறந்த ஒண்டொடி கொழுநன்
கூட்டமுன் பறிந்த கொன்பழங் குமரி.
வேறு
8. வேட்டவர் வேட்ட வெல்லாம்
விரும்பியாங் குதவுந் தெய்வக்
கோட்டமுன் றுறையுட் டோய்ந்து
கொழுநனைக் கூட்டு மாறு
நீட்டிய தவங்கி டந்து
நிதம்நினைந் துருகு வாண்முன்
சேட்டமுஞ் சுசியும் நீங்கிச்
சிராவணம் சேர்ந்த தம்மா.
9. முக்கடல் கலப்ப மோதி
முழங்கலை தழுவ, வாடை
மிக்குவந் துலவ, விண்தான்
விழுந்தலை படியும் பாங்கர்ப்
புக்கவோர் பிழம்பின் சோதி
பொதிந்தெழும் புனித வானத்
துக்கலூர் தேரென் றோர்கார்
உருவெடுத் தொளிரக் கண்டாள்.
10. பிரிந்தவன் வருந்தே ரென்று
பேதுறும் பேதை நெஞ்சம்
திரிந்தவன் வஞ்ச னென்று
செம்மலைப் பழித்தேன்; அன்னான்
புரந்தரன் பொன்னூர் சென்றென்
புதுமண முரைத்துத் தாதை
திரந்தருந் திருக்கொண் டென்பால்
திரும்புமிந் நாள்கொ லென்பாள்.
11. அந்தணன் அயலான் வேண்ட
அளித்தசொற் றவறா தீன்ற
தந்தையை மலைந்து கானத்
தகனமு முடித்து நின்ற
சுந்தர னெனக்குச் சொன்ன
சூளினை மறந்து வீரர்
சொந்தநல் லறம்பொய்த் தாண்மை
துறக்குமோ தோழி என்பாள்.
12. வந்தனன் வாழி யென்னும்;
வள்ளலை வழுத்தும்; காட்சி
தந்தமெய் யுவகை நெஞ்சம்
ததும்பிமேல் வழியச், சொல்லும்
பிந்தவுள் ளுணர்வு முந்த,
மோனமே பெரிது பேசும்
நந்தலி லமுதார் தெய்வ
நகைமுகத் தென்ன நின்றாள்.
13. எழுந்தனள் குதித்தா ளாடி
யிருகரம் புடைத்தா ளோடி
விழுந்துமண் அழுந்து மேனி
மிளிர்ந்தனள் மகிழ்ந்து கண்ணீர்
பொழிந்தனள்; வரதை யென்று
போற்றினள் குமரித் தேவை;
அமிந்தனள் நெஞ்சந் தோழி
அம்புதம் தேரன் றென்ன.
14. தேரெனத் திளைத்தாள், தோழி
தேற்றிடத் தெளிந்து சூழ்வாள்;
காரினுக் கரசன் மைந்தன்
காதலை மறந்து வீரர்
போரினை விரும்பி வாழும்
போதகக் களிற னானுக்
கோரின முடைய கொண்மூ
வுரைப்பினென் குறைசென் றோதும்.
15. ஓதநீர் சுவறத் தன்வே
லோச்சியோன் தளையா லுற்ற
வாதையென் மணத்தில நீங்கி
மகிழ்ந்ததை மறவா தெண்ணும்,
பேதையென் நிலையும் பேணிப்
பேசிடப் பெயரும், செல்தன்
நாதனுக் கினிய நம்பி
நலம்பெற நயக்கு மென்பாள்.
16. ஓதிமத் தொதுங்கு வாளிவ்
வொருநினை வோட வோர்ந்தாள்,
தாதியர் தவிரச் சென்று
தனியொரு புளின மேறி,
ஆதியி லழகற் கண்ட
அன்றுதா னறிந்த வின்பம்
பாரதிமே லுளத்துட் கொண்டாள்,
பகர்வள்கொண் மூவைக் கூவி.
17. பார்த்தனென் பதிமுன் னுற்றுப்
படிறறி யாதே னுள்ளம்
ஈர்த்தெனைப் புகழ்ந்தென் னேழை
யிகுளையை யிரந்தென் தாதை
வார்த்தைகொண் டென்னை வாழ்த்தி
மணந்தபின் தணந்தான் தன்னை
ஓர்த்தநீ தூதாய் மீள
ஒருப்படுத் துய்க்க வல்லாய்.
வேறு
18. ஓதரிய துயர்பலவும் ஒருங்கொருவ
வுவந்துலகுக் குதவுங் கொண்மூ!
காதலிருங் கடல்படிந்து கவலையெனுங்
கருமுதிர்ந்து கனத்தெ னுள்ளம்
ஆதரமென் னளப்பரிய மாதிரமே
னீந்தியெழு மாற்றல் குன்றித்
தீதுறினு முனக்கொருவா றினத்துரிமை
செப்புவதாற் பரிவு செய்யே.
19. விதும்புமனத் தெழுந்தெரியும் விரகவனல்
தரும்பெருமூச் சுருவ மென்னத்
ததும்புவெடிப் பிழம்பினையாற் றணந்தநிலைத்
தணல்தழல்வ தென்னக் காய்ந்த
உதும்பரமென் றழல்காலுஞ் சஞ்சலத்தாற்
சஞ்சலநன் குணர்வை போலும்;
வெதும்புமன வேதனையான் விரித்துரைக்க
வேண்டுகிலை விரைவை விண்ணே.
20. விளித்துனைத்தாம் வேண்டிலர்க்கும் துளித்துவளம்
நல்குவையேல் விரும்பு மென்பால்
களித்துதவா தொருவுவையோ? காரரசே
கைம்மாறு கருதி நில்லாய்;
அளித்துளைய லாதெவரு மளித்திடநீ
பெற்றனையென் றறிய கில்லேன்;
முளித்தமனந் தளிர்த்திடுமா றென்குறைநீ
முடிக்கஇனி முடுகு வாயே.
வேறு
21. என்மேலது பேதைக்குணம், இயல்பேழைமை யன்றோ?
வின்மேவிய படிவத்தொடு விரதத்தையும் விழைவு
தன்மேவிட மின்மேவிறை தனில்விட்டயல் பெயர்வான்
கன்மேவிய நெஞ்சந்தரு வஞ்சங்கரு திலனால்.
22. துறைதோறுறு நலமேவுற மறையோரொடுந் தோன்றித்
துறையார்தமிழ் மறைசொற்பொருள் தருமெய்ப்பயன் சொரியும்
துறைசார்ந்துறை யிறையென்னிறை மனமுங்கவர் தொழிலிற்
றுறைபோயொரு துவரைச்சிறு மிக்கென்றெனைத் துறந்தான்.
23. இகுளைச்சிறு மகளுக்குள நெகிழத்தமி ழேழை
பகுதிப்படு தகுதித்திறம் நியமம்பையுள் படரான்
மிகுதிப்பட வீரஞ்சொலும் வடவாரியர் விரதம்
உகுமெய்ப்புது மடவார்மணத் தெனுமுண்மைமு னுணரேன்.
24. ஆசற்றழ கொளிருந்திரு வுடலத்தவ ரகமும்
மாசற்றில ரெனநற்றமிழ் மடவாரறி கிலரால்;
மோசத்திரு ணெஞ்சத்தொடு மொய்ம்பாரியர் வடபால்
வாசத்துறு மல்லாலுடன் வளரத்தெரி கிலமே.
25. தெரியோமொரு வஞ்சத்துறை சிறிதுஞ்சிறு வயதில்
பிரியேமெனு முரையாடவர் பேசிற்பிழை யார்சூள்
திரியாவுளத் தன்பார்நிலை திகழுந்தமி ழவர்பால்
உரியேமென உடலோடெம துயிருந்தர வுயர்வேம்.
26. எழிலான்நய வஞ்சம்பெரி தெனினென்றமிழ் நெஞ்சம்
கழிகாதல்மு னவனுக்குணர் கருமங்கட வாதால்
அழிவாருமென் வழியிற்பழி யணுகாதவ னுருவம்
விழிவாயென தகமேவிய தகலாதிது சரதம்.
27. இமிழ்வண்டமிழ் கமழ்தெண்டிரை யெங்குந்தரு முத்தம்
உமிழ்மின்னுரு வொடுதண்கரு வுருவம்பெறு கருவி
தமிழ்மன்னுமென் நிலைகண்டுள மிளகாயுயிர் தரியா
தமிழ்துண்டவ ரிறைவன்மக னளியானெனி லறிதி.
28. எனவண்முகி லெதிர்வாள்முன மெழில்போலொளி யேர்செய்
மனமெய்யுரை தமிழ்வாணுதல் மதிவண்டிரு மடவோய்!
முனநின்மண முழவத்தளை வீடுற்றனன் முழுதும்
உனதூழிய முயர்பேறெனக் குரைநீயென வுரைப்பாள்.
வேறு
29. தேடாம லெங்கோ னிருக்குந்
திருக்கோயில் நகர்தேறுமா
றூடாறி வழிசென்று களைமாற
வுண்டாட வுந்தூங்கவும்
வாடாத வளநீர் வழங்காறு
பலபாயும் வரைதோறும்நீ
நீடாம லிளையா தவற்காண
நின்றேக வழிசொல்லுவன்.
30. கன்மீது பகைநின்ற தோளண்ணல்
கரைகின்ற கனல்வேதியன்
தன்மீது பரிவுள்ள முடனைந்து
தருநீழ லார்தந்தைவிண்
மன்மீது படைதொட்ட வயமீளி
யுடன்வந்த மறைவல்லவன்
என்மீது பரிவுற்றென் னிகுளைக்
கவன்சொற்ற விவைகேட்பையே.
31. பீடாரு மாரத்து மணநாறு
தென்றற் பிறப்பீவதும்
வாடாத புகழ்வீசு தமிழ்மங்கை
வளர்தொட்டில் வளமார்வதும்
நீடாழி யுழுதோடி நிதிதேடு
நாவாய்கள் நிறைகொற்கையார்
நாடார நலனல்கு பொருநைப்
பெருக்கூட்டு பொதியின்மலை.
32. உலகெங்கு முணராத சாகத்தொ
டகில்வான முறுதண்பொழில்
நலனுண்டு நளிர்நின்று வெயிலென்று
மறியாத நறுநீழலார்
பலவொன்று சிறுமந்தி பலவொன்று
கடுவன் பறித்தோர்பலாப்
பலநீவிர் பொதுவுண்மி னெனவூடு
பொதியிற் பழம்போதிகாண்.
33. இயற்கைத் திறந்தந்த வினைநுட்ப
மலிசெவ்வி யெழில்யாவுமுன்
பெயற்கோ ரிடங்கண்டு பெரிதும்
குவித்தாங் குயர்பெற்றியால்
புயற்காடு மயிலென்ன மயல்தந்து
பொறியைந் தையும்பேதுறச்
செயற்கான நலனார்தொல் பொதியிற்
பெருஞ்சாரல் தெளிநீர்த்துறை.
34. என்னிற பிரிந்தான்மன் எழிலாரு
மரமங்கை மார்பண்ணையிற்
பொன்னிக் குறழ்தோளிர் தொடலைக்க
ணெதிர்போழ்து புதிதோர்மணம்
உன்னிக்கொல் முன்வேட உருவத்தை
யுணராத பழிதீருமோ
முன்னிக்கொல் முன்சென்று முழுகும்
பழம்பாவ நாசத்துறை.
35. மின்னின்று வாடாப் பசும்போர்வை
வேய்வேழ மிளிர்மத்தகம்
தன்னின்று மொழுகோடை தவழ்கின்ற
தெனவீழ ருவிநீர்கரும்
கன்னிக் கிடந்தந்த வன்கங்கை
கணியாது பெருகுந்திருப்
பொன்னிக்கும் மேன்மல்லல் பொழிசூழல்
குற்றாலப் பொருவில்துறை.
வேறு
36. சாரலெ லாமெழில் தங்கிய துறைபல
சாரவ ளந்தரு தண்டமிழ்ப் பொதியிலில்
சாரக்க ளித்துளந் தண்ணெனத் துளித்தயல்
சாரப் பெயர்குவை தங்கலை யெழிலிநீ.
37. காரிறுத் ததனையும் காதலன் கருதிலன்
பாரெனக் குருகினம் கட்டிய பறக்கவென்
ஆரியன் மனமென அம்பர மிருண்டிட
நீரினில் மறைகளென் னெஞ்செனக் குவிந்திட.
38. ஆடவற் கிரங்குமென் னல்லலுக் கிரங்கிய
பாடல் மழுதிடப் பைந்தள விணர்சிரித்
தேடகம் விரித்திட எங்கணு முலவைகள்
பாடவம் கொழித்திடப் பாண்டியிற் படர்குவை.
வேறு
39. வளமலயம் பிறக்கொழிய எங்கடமிழ் வைகை
களமர்பழங் கிளைஞர்தொழும் செழியர்நிலம் கடல்க
வளமெனமுன் னுண்டபகை வைத்ததனை மருவா
துளவிளையு ணிதிகொழித்தோங் குந்தமிழ்நா டுறுவை.
40. தென்பொதியத் தாரநறுந் தென்றலிருந் ததனுக்
கன்புமற வாதுவிசும் பழவுகுநீ ரென்ன
முன்பெயல்நற் றூவலொடு முந்துவைநீ யூதை
யுன்பருவத் துண்மைதிசை யெங்குமுரைத் துலவ.
41. உறுபயனெல் லாமுருக்கொண் டோங்குபுகழ் நாட்டுத்
தறுகண்மறத் தமிழர்படை தனைமலைவா ரின்றி
மறுவிலறத் தொழிலமரப் பொருநரென வகுத்துச்
சிறுவினைதேர் சாதிதெரி யாதசெழுந் தேசம்.
42. தொழிலுழவென் றிருதுறையும் தொல்லுரிமை சொல்ல
வழிவழியாக் கொண்டதமிழ் வாணர்கட லேறிக்
கழிநிதியம் கருதலர்பாற் கொண்டபெருங் கப்பக்
கிழிகொணர்வார் அறம்வளர்க்கக் கீர்த்திவளர் நாடு.
43. மானுறழும் விழியர்தமிழ் வழியுமண மலர்வாய்
வானுலவு முழுமதியேர் அமுதொழுகு வதனம்
தேனுகராத் தெய்வமரை எனத்திருவும் வாணி
தானுமிருந் திலகவொளி தங்குதமிழ் நாடு.
44. கோட்டமகில் குங்குமந்தக் கோலமொடு கறியா
னாட்டருநெல் லிக்கிளநீர் நகர்தருபல் பண்டம்
வேட்டபொரு ளீட்டி,வளை வித்துருமம் முத்தாற்
காட்டவிர்தேன் நாவிவிலை கழறுறுநா டுறுதி.
45. உற்றுயர்நா டுளவினிய கண்பருகி யுவப்பை
மற்றயற்கா விரிதருநற் றலையல்வளம் வழங்கப்
பெற்றதனால் வளவனெழில் நாடெனும்பேர் பெற்றுக்
கொற்றமுயர் தண்புனனா டுற்றுமகிழ் கொள்வை.
வேறு
46. ஏவாமைத் தொழில்புரிவார் ஏற்பதறி
யாரியற்ற இயைந்து மல்கித்
தாவாமை விளையுளொடு தக்காருந்
தாழ்விலராந் தகையார் செல்வர்
ஓவாமை வளத்தொடுநல் லொளியுதவுங்
காவிரிபாய்ந் துயரு நாடு
சாவாமை வண்மைதரும் புகழென்னு
முண்மையினைச் சாற்றும் நாடு.
47. பண்புடையார் பழையர்தமிழ்ப் பாண்டியர்போல்
பாரிலிசை படைத்த சோழர்
தண்புனல்நாட் டவர்தகுதி சாற்றரிது
தலைநின்ற தமிழ மேழி
நண்புடைமை யாடவரும் நனிவிருந்தை
நல்லாரும் நாளும் பேணி
வண்புகழை வளர்த்திறவா வளச்சிறப்பை
வழங்கறமார் வாய்மை நாடு.
48. கள்ளாரு நறுஞ்சோலைத் தண்படப்பை
கழனிபல களமர் சாறு
தள்ளாத வளமனைத்தும் தரும்புனல்நா
டுடைத்தவத்தர் தம்மையென்றும்
நள்ளாரும் வளவரென நவில்செவ்வி
படைத்தாக்கம் நல்கி யோடும்
வெள்ளாறு பாலாறு விரிபெண்ணைத்
தமிழ்க்காட்சி விழைந்து காண்பை.
49. காவிரிவெள் ளாறுவிரி பாலாறு
பெண்ணையெனக் காம்பு நாலாய்
பூவிரிதண் புனனாட்டைச் சுரந்தூட்டும்
மடியுடைய பொற்பி னல்லான்
பாவிரிசெந் தமிழ்தழுவு நீண்மலயப்
பயனனைத்தும் பம்பும் நாட்டில்
நாவிரிபுள் ளினமிழற்றும் பண்ணார்ந்து
நில்லாது நடப்பை விண்ணே.
வேறு
50. விரைதிபறந் துறுதிகுடப் பொருநைவளம் விரிக்கும்
தரைதிருவும் தருவுமுயர் வானவர்தந் நாடு
திரைதிமில்கள் வரவழைத்துத் திளைக்குமெழில் நாடு
உரைதிரியா துயர்தமிழ்நாட் டும்பர்மலை நாடு.
51. தமிழ்தவழுந் திருவுயரும் தரணிதொழுந் தரளம்
உமிழ்கடல்சூழ் வழுதி நிலம் உயர்த்தபுலி யோம்ப
இமிழ்மலிசோ ணாடிவையோ டென்றுமுறழ்ந் தெழிலார்
சிமிலநெடு மடிவளரும் சேரர்வள நாடு.
52. நாடுபவர் நாடுவன யாவுநிறை நாடு
கூடுவைமல் குலவுகுட மலைநிதியங் கொழித்துப்
பீடுயரும் பலநதமும் பேணவளம் பெருகிக்
கோடுயரும் யானைதொழில் கூடுமெழில் நாடு.
53. முழுதுலகுந் தொழில்கருதி முடிப்பவருக்குப் பகலாம்
பொழுதுதவி மாலைசுடர் புகுதுபழம் புணரி
தொழுதுபுகழ் பாடவளந் தூங்குகுடந் துருவிப்
பழுதுணரா மலயநெடுந் தொடர்தொடர்ந்து படர்தி.
வேறு
54. மலையினைக் கடலை மான வரம்பென வகுத்துக் கொங்கர்
அலையினைப் புகுந்து மூவாக்க டம்பெறிந் தாண்ட சீர்த்தி
நிலையினை நிகர்த்துச் செம்மாந் துயர்ந்தயல் நிமிர்ந்து வானத்
தலையினைத் தழுவு மானைத் தடமலைச் சாரல் சார்தி.
55. இத்திரு மலையி னீங்கி னிளநில வெறிக்கு மூரல்
முத்திருந் தலர்ந்த செம்பொன் முளரியின் முகத்தர்வைகல்
மத்திருந் திழுக்கு மாய மகளிர்அங் குழலை மாரி
ஒத்திருந் தொருவா நீல மலையினை யுவந்து காண்பை.
56. நோய்தர அறியாச் சீதம் வலம்செய நுடங்கு மஞ்சு
வேய்தர வசந்த மொன்றே விழைந்தவ ணிலவ வென்று
பாய்தரு மருவித் தாளப் பண்ணொடு மஞ்ஞை யால
ஆய்தர ஞானந் தேடு மழகர சிருக்கும் ஆங்கண்.
57. மாய்தரும் வளமங்கோரா மலையினில் இயற்கைத் தெய்வம்
காய்தரும் வெயிலின் வெம்மை கண்டறி யாத கானில்
வேய்தரும் குழற்கா லூத மென்சிறை மிழற்ற வெற்பிற்
சேய்தருங் கலுழி பாடச் சிறந்தர சிருக்கு மம்மா!
வேறு
58. கொடுமனத்த ரிருளுளத்தை யளந்தாழுங்
குடகடல்சூழ் குடகின் பாங்கர்
நடுமனத்தர் நேர்மைநெறிச் சால்புயர்வு
நனிகாட்ட நிற்கும் நல்ல
நெடுமலையத் திடைச்சிமய நிவந்துமழை
நிலைநீல மலையின் வானைத்
தொடுமரிய தடஞ்சாரல் தங்கியிளைப்
பாறிவழித் தொடர்வாய் செல்லே!
வேறு
59. நாடுகுட நாகமகல் நாகமளந் துயரும்
கோடுகுணக் கோடுவரை யோடுமுறை கொண்டு
கூடுகுதூ கலமதனின் கூலமெனத் தாலம்
பாடுகுல நீலமலை பம்புமயல் படர்தி.
60. மாய்தலறி யாதபசு மாமைமலை மருமந்
தோய்தலறி யாதுதவழ்ந் தொழுகுபழ வானி
தேய்தலறி யாதசெழுஞ் செவ்விசெயத் தினமும்
சாய்தலறி யாதவளத் தண்ணடைகள் சார்தி.
61. என்னெழிலுங் கன்னிமையு மேதமறி யாத
மின்னிடையார் பலர்நலமும் வௌவிமகிழ் மீளி
மன்னுபொது மார்பமென யாவையுமேல் வாரித்
துன்னுமிரு பெண்ணைவளந் தோயஉயர் நாடு.
62. சேருதிநன் னாடதனைத் தினம்விளையா டிளையார்
சாரையினுக் கோடவவர் சீரொலிக்கே தடம்வாழ்
சாரசமோர் சிறிதும்வெரு வாதருகே சகுலி
ஊருவவோர்ந் துவக்குமெழி லொன்றுமொளி நாடு.
63. முட்டியறி யாதவளம் முரலிசைப்புள் மகிழ
மட்டிலடங் காதமது வூட்டுமெழில் வனமும்
கொட்டியென ஆம்பலென நெய்தலெனக் குரகம்
ஒட்டியொரு வாதுலவும் ஊருணியும் துதையும்.
64. நாடிதுவிட் டடைவைநறு நாறுதொறும் நத்துக்
கூடிரியக் களமர்கடைக் குலமடவார் கெழுமி
ஓடிநடத் தழுவியவர் உழுவல்பெறு முழவர்
நாடிமகிழ் விழவயரும் தொண்டைநல நாடு.
வேறு
65. தொண்டையி னெல்லை யெய்தத்
தூயநல் லமுதை வென்ற
பண்டைநற் றமிழற் பண்ணார்
பாசுரம் பயில்வ தோடும்
அண்டையிற் சாமம் பாட
அழகனா யமர்ந்தான் செய்ய
இண்டைநல் விழியின் நின்ற
எழுமலை நிவந்து தோன்றும்.
66. வடுகினில முரலும் வண்டும்
தமிழ்தருங் குயிலும் வந்து
நெடுமலைச் சாரல் தோறு
நித்தமு மிசைப்பக் கேட்டுக்
கொடுநுதிக் கொவ்வைச் செவ்வாய்க்
கிஞ்சுகங் கொஞ்சும் கோல
அடுசுவைப் பாலி னின்சொ
லரம்பையர் விரும்ப வம்மா.
67. ஓதிய பண்களோடு மூவகையி
லாழ்வார் பற்பல்
சாதியர் துழனி யாரத்
ததைதிருப் பதியைச் சார
ஆதியில் முருகன் கோயில்
அவன்திரு மாமன் வைப்பாய்ப்
போதிய புனைந்த போதிப்
பொழில்வலங் கொண்டு போதி.
68. அம்மலை யகலம் நீங்கி
யருஞ்சுரத், தத்தம் நீந்திப்
பம்மலுற் றோடும் ஆறும்
பலகுல மலையும் பாங்கர்ப்
பொம்மலுற் றகன்ற நாடும்
புளிஞரா றலைக்குங் காடும்
மம்மர்செய் அளக்கர் தாண்டி
மரகத மலையைக் காண்பை.
வேறு
69. மகிழமுங் கடம்பும் மலிதருஞ் சாரற்
கிடையிடைப் பசுநிறப் பளிங்கின்
முகிழெனக் குரும்பை முதிர்ந்திள நீரும்
வழுக்கையு முதவிட முசுக்கள்
மகிழ்ந்துனை விருந்துக் கழைக்குமா றெழுந்து
வாங்கிய வளமட லிருந்து
நெகிழ்ந்திள மகவுக் கருத்திட நிறைந்த
தென்பொழில் மரகதம் நீங்கி
70. மேலலைப் பரதர் மெல்லியர் நிதமும்
நித்திலம் வித்துரு மமுமே
சாலவுங் கொணர்ந்து தந்தமுந் தேனுந்
தருபவை தமக்கவை பகரும்
ஏலமார் வரையிற் சந்தன நிழலி
லென்றுமங் கிருந்தரம் பையர்கண்
ணாலமா ரழலூ டருந்தவ முழந்த
அறிவர்நல் லருந்ததி யடைவை.
வேறு
71. பழமுதிருஞ் சோலைவளம் பம்புமருந் ததிவிட்
டழல்முதிரும் வெயினுழையா வடர்வனமார் குழல்
நிழன்முதிரும் பொழில்தழைய நின்றபழம் பம்பைப்
புழன்முதிரும் பணைசெறிதிண் புலப்பரப்பிற் புகுவை.
72. ஆறுமழை நீருதவா அவல்களெலா
மற்றொழிய அவ்வா றன்றி
யாறுபிழை யாதொழுக யாணர்புன
லனவரத மளிக்கும் பம்பைப்
பேறுபிழை யாதபெரு வீறுதவு
பொய்கைவளம் பெருக்கிப் பேணச்
சாறுபிழை யாதபுலம் தங்காமற்
சாருதிதென் கங்கை யாற்றை.
73. ஏராரும் பொழில்பலவும் படப்பையொடு
விளையுள்வள மெல்லா மீயும்
சீராருந் தெண்ணறல்தீந் திரைவிரிகோ
தாவிரிதான் சென்று மேற்கே
பாராரு மலையழகு பார்க்கவரும்
பவ்வமெனப் பரந்து பாக்கம்
ஊராரு மருதமொடு பாடிபல
வுவந்துலவி யொழுகும் மாதோ.
74. தான்மருவு தென்கன்னித் தரைமருமம்
தழுவுகடற் றடக்கை போல
வான்மருவு மலயநில மகளையலை
மகிபன்மண மகிழ வார்க்கும்
தேன்மருவு தெண்ணீரி னொழுக்கென்னத்
தெய்வவளஞ் செய்து செல்லும்
மான்மருவு மடவிழியார் நிதங்குடைகோ
தாவிரியின் வனப்பைக் காண்பை.
75. என்றுமுள தென்றமிழ்போற் பரம்பொருள்போ
லெல்லையறு கால மெல்லாம்
நின்றுவள நிலமூட்டுந் தொல்கங்கை
யெனவடவர் நினைத்து வாழ்த்தும்
தொன்றுவளர் தூயபுக ழெனநீடண்
ணீத்தமதைத் தொழுது நீக்கிச்
சென்றுவளஞ் செங்குடக்காய்க் கொழித்தொழுகு
நருமதையின் தீரம் சேர்தி.
76. தோமுற்றார் தொடுகடலை வெறுத்துரிய
தொன்றுமுதிர் பவ்வந் தோயக்
காமுற்றார் குடக்கோடும் நருமதையின்
கரைமருங்கிற் கவினார் கானம்
பேமுற்றார்க் கவலமுமுள் பிழைப்பிலறப்
பெருமிதத்தின் பெற்றி பேணி
ஏமுற்றார்க் கெழில்வளத்தா லின்புமிழைத்
தியலமைதி எங்கும் எய்தும்.
77. மடமானைத் தொடருழுவை படப்பாயும்
வயமாவின் காலை வாலால்
திடமாக வரிந்திறுக்கி வீழ்த்தியதைத்
தின்றுதிரி மூரிப் பாந்தள்
நடமாடு கொடுவனத்தின் நடுநெளியும்
நருமதையாம் நதத்தீ, ரத்தின்
தடமாருந் தவப்பள்ளி மிடையவிடை
யரமகளிர் சாழ லார்வர்.
வேறு
78. இலங்குமிவ் வளாகம் நிற்க
வியங்குதி வடபா லாங்கே
கலங்குபு கயிறாய் முன்பாற்
கடல்கடைந் தயர்வாற் றூங்கித்
துலங்குவான் கங்கைக் கோட்டந்
தொல்கங்கைப் பொழிலி னீங்க
விலங்குமா கணம்போ னீண்ட
விந்திய மலைவந் தோங்கும்.
வேறு
79. நிலத்தியலு மொழிவழக்கும் நெறிபலவுங்
கலையுணர்வு நீண்ட நாளாய்க்
குலத்தியலுந் தொழிலறமுங் கொள்கைகளும்
வெவ்வேறாக் குலவக் கொண்டு
நலத்தியலு மறத்தொல்லை நாகரிக
மிரண்டுமிந்த நல்ல நாட்டில்
கலத்தியலு நீரென்னக் கலவாமற்
காக்குமிடை விந்தங் காண்பை.
80. தன்காதற் றென்புலத்தைத் தழுவுமிரு
கரமென்னத் தக்க வாறு
மின்காதல் புரிமஞ்சு தவழுமிரு
மலைத்தொடரு மிண்டிக் கன்னி
நன்காதற் றுறையிறைஞ்சிக் கூப்பவிடை
வளம்வரும் நாடு காத்துப்
பொன்காதல் புரிவிந்தம் குடகுணக்காய்
நிலப்பரப்பைப் புரந்து நிற்கும்.
81. விந்தமலை விடுத்துவடக் கேகுமிடை
விரிந்துபடர் வியலின் வெம்மை
யந்தரத்து மழற்றுமதன் அகனீந்திக்
கடப்பதுமிக் கருமை யாமால்,
உந்தரத்து நீயணுகில் உன்னீர்மை
யுண்டுதவு முனங்கங் கெவ்வம்
கந்தரம்நீ யாகையினால் உயர்ந்தோங்கிப்
பறந்ததனைக் கடப்பை காரே.
வேறு
82. நீடுநிலை கோடைபெற நிழலொடுநீர் நில்லாக்
காடுமுளி யோமைநுணாக் கவடுதொறுங் காணக்
கூடுவன குடிஞையொடு கூன்சிலவு மல்லால்
ஊடுலவு முயிரினமாண் டொன்றுவன காணாய்.
83. நிழலுமிழும் உலவைபசு நிறப்புதல்புல் லெதுவும்
அழலுமிழும் வெயில்தெறவாண் டறவொழியு மடவி
தழலுமிழத் தறுகணர்தாம் தரக்கெறியுங் காழ்கள்
சுழலுமிழுஞ் சூறையிடைச் சூறைகொளுஞ் சூழல்.
84. பிணவுபுனிற் றுழுவைவிடர்ப் பிறங்கவதன் போத்தாங்
குணவுபெறற் சூழல்வதைமுண் முளரிகிழித் தோச்ச,
நுணவுலவை யெருவைபுலி யெருவைமுடி நுங்க
வணவுழியாண் டழல்புலியை யறைந்தடர்க்கு மடவி,
85. மாந்துபுன லோடுணவும் வழங்கரிய வரைப்பில்
ஈந்துபுதற் கள்ளிமிசை யீகைபடர்ந் திவரும்;
மாந்தரிலை விலங்கினமும் வாழ்வரிது வழியில்
நீந்தரிய நெடியவனம் நீங்குவைநீ பறந்தே.
86. இவ்விடம்விட் டேகிவட மதுரைவல மிட்டு
வெவ்விடமுண் டவன்சடைநீர் வேணியொடு விளவச்
செவ்விடமோர்ந் திரியமுனை தெரியுமதிற் றிளைத்தே
எவ்விடரு மியவயர்வும் இறக்குளித்தாங் கெழுவை.
87. தென்மொழிபோற் றென்றமிழ ருரனுளம்போற் றெளிந்து
தொன்மொழியார் யமுனையறல் தோயுமிரு துறையும்
பன்மொழியும் பயில்வர்குடை பயசினிடைப் படிந்தே
என்மொழியென் கொண்கனிடம் இயம்பவிரைந் தெழுதி
88. யாணர்திரை கரைபொருமால் யமுனைமதில் கழுவும்
பாணர்புகழ் செல்வம்வளர் பஞ்சவர்நற் பதிபல்
வீணர்நுழை யாதவினை யாற்றுபவர் வேள்வி
ஆணர்மலி யிந்திரப்பி ரத்தபுர மடைதி.
89. பேரரசர் ஆதரமும் பேரறிவும் விறலும்
வீரமுந்தா ளாண்மைவிளை விழுநிதியும் இறைமை
வாரமும்நேர் சமைத்ததிரு வைப்பெனவாங் கோங்கு
மூரதனை யொன்றிநதி யோரம்விரி சேரி.
90. ஓரையயர் வோருமய லுறுதவநோற் பவரும்
சீரையணி வோருமுயர் சீலைதரிப் பவரும்
ஆரையக ழடைவளைந் தகன்றபுறஞ் சேரிக்
கூரையயல் குலவுபெருங் கோயில்களில் வதிவர்.
91. இரவுபக லிடையறவற் றெப்பொருளு மேந்தி
விரவுபுறம் வினைபுரிவோர் படைபயில்வார் வேகப்
புரவிகளி றூர்வர்நிறை புனல்படிவார் பொம்மல்
அரவமொழி யாநியமம் அகநகர்வாய்க் கொளுவும்.
வேறு
92. நன்றெங்கு மிசையேறி நடுநாவல்
வடபாதி எழில்நா டெலாம்
நின்றங்கு தம்மாணை பொதுவற்று
நிலையத்தந் நேரா ரும்நேர்
மன்றங்கு வந்தேறி வழிகூறி
வந்திக்க மன்சூயம் வேட்
டன்றங்கு பொன்றாத புகழ்கண்ட
வடலைவர் அரசாளு மூர்.
93. நீடாமல் நகரும்பர் வலமாக
விண்சாரி நீநேர் வையேல்
தேடாம லடலைவர் திறல்பேசு
திருவைப்பி னெழில்கா ணுவை
கூடாம லஞ்சாத குலமன்னர்
நிலவாழ்வு கொல்வில் லினர்ப்
பாடாமல் மகிழ்கின்ற பாவாணர்
பாண்மக்கள் பாரில் லையால்.
வேறு
94. மண்ணொடு பிறந்து தூய
மன்குடி சிறக்கத் தோன்றிப்
பண்ணொடு வளருந் தெய்வப்
பழந்தமி ழரசி யெங்கள்
பெண்ணொடும் பாதி யான
பெற்றியன் பிறவான் மூன்று
கண்ணொடும் பத்தர் பாவங்
காணொணாப் பெரியோற் கன்பர்.
95. ஐவரும் புதிய பேரூர்
அமைத்தத னடுவில் தங்கள்
தெய்வதந் தமிழர் போற்றும்
சிவன்திருக் கோயி னாட்டி
மெய்வழி பாடு காட்டி
விழைபவர் தொழப்பல் வேறு
மொய்வரு நியம மெல்லா
முறைவகுத் துரிமை செய்தார்.
96. நித்தனின் நியமம் நிற்க
நெடுந்தடந் தெருக்கள் சுற்றிப்
பத்தியி னெழுவ நான்கு
பக்கமுங் கோட்டிப் பாட்டை
பித்தியின் புழைகள் கூடும்
பீடிகை மன்றம் பள்ளி
சத்திரம் தடாகம் தோப்பு
தண்டமா திகமுஞ் சாரும்
97. நன்னகர் நாப்பண் நம்பன்
பொன்தளி நணுகி ஐவர்
மன்னர்பொன் முகடா ரைந்து
மாளிகை சிகரி மன்னிப்
பொன்னகர்க் குறவு காட்டிப்
பொருவரு பதாகை நீட்டி
உன்னரு முயர்வி யாரு
முணருமா றொளிர்ந்து தோற்றும்.
98. நலத்தகு தம்பி மார்கள்
நால்வருள் முதல்வன் மூன்றான்
வலத்தினில் வைக எங்கள்
வள்ளலோ டிளவல் வாம
நிலத்தினின் றேமஞ் செய்ய
நேயத்தால் நிறுவி என்றும்
அலத்தல்விட் டாழி யோச்சும்
அண்ணல்த னரசு வீறும்.
99. பொன்னவிர் மாட மைந்திற்
பொருவிலா நம்பி முன்னென்
கன்னிமை கவர்ந்து காதற்
கவலைதந் தகன்ற காளை
நன்னகர் அண்ணல் கோயில்
நடுவதன் வாம நிற்கும்
முன்னிழல் படங்கில் மூரி
வானரம் நுடங்கு முன்றில்.
100. நாவியு முயலு நானா
நவ்வியு முகளு ஞாங்கர்
வாவியும் வனமு மெல்லா
வனப்புடை மணப்பூ நல்கும்
காவிய முருக்கொண் டென்னக்
கவினுமக் கோயி லும்பர்
ஓவியம் நடைகற் றென்னச்
சிலதிய ருலவக் காண்பை.
101. நின்றனை நினைந்து சூழ்தி
நெடுநிலை மாடத் தும்பர்
மன்றுபற் பலவுள் வாம
வாசியார் பளிக்குத் தெற்றிப்
பொன்றிணி யமுனை யாற்றின்
பொலிவொடு கொட்புக் காணக்
குன்றணி குயிற்றி யாங்குக்
குலவுபொன் பொருவில் கூடம்.
102. வேல்பயில் வீரர் நின்று
வியந்திடச் சூத ரேத்த
நூல்பயில் புலவர் வாழ்த்த
நுவலரு மாடத் தும்பர்
பால்பயில் மொழியா ரந்திப்
பல்விளக் கெடுத்துப் பம்பிச்
சேல்பயில் விழிக ளாரச்
சூழதரச் செம்மல் சேரும்.
103. யவனர்நற் சிலையின் மேனி
யாணரோ வியம்போல் வண்ணம்
நவநனி யெழில்கள் நல்கும்
நளினவாண் முகத்தி லொத்த
உவமனில் விழியான் யாரு
முணர்ந்துட னிறைஞ்சு மெங்கள்
சிவனருள் திருந்தப் பெற்ற
செம்மலை யெளிதிற் றேர்தி.
104. ஆரமும் நூலும் பெண்டி
ரயில்விழிச் சுவடும் பொன்னார்
பாரமும் தாங்கு மார்பும்
படைபயில் நெடிய தோளும்
வீரமும் கொடையும் வெஃகும்;
விழியளி யொளியை விள்ளும்;
ஈரமும் அறிவோ டாண்மை
யெழில்முகத் திலகு மென்றும்.
105. சோலையிற் றுழனி யோயத்
தோயிருட் படலம் சூழும்;
பாலையில் வண்டு பாடப்
பாங்கர்மின் மினிக ணீந்தும்;
மூலையில் யமுனை நீரில்
முகிழ்நிலாக் கற்றை மூசும்;
மாலையி னெழிலை மாந்தி
மகிழ்வனம் மாடத் தென்றும்.
106. அடுத்தர மியமாம்; சூழு
மயலெழிற் பொழிலில் யாழின்
எடுத்துளர் நரம்பிற் றும்பி
எங்கணு முரலும்; தீம்பண்
மடுத்தவ ணிருந்து வள்ளல்
மாலையிற் றனிக்கு மாங்கண்
கடுத்தவ னகலா வாறு
கடுகியென் கவலை சொல்வாய்.
107. ஈண்டியங் கெழிலி! ஏந்த
லிளமரக் காவின் எங்கும்
வேண்டிய வுருவு காட்டி
மிளிர்ந்தவன் விழிநிற் காணத்
தூண்டிய பின்ன னாற்குன்
உருமுரை கரந்து தொல்லைப்
பாண்டியர் தமிழிற் பன்னாய்
பாங்கினா ருணரா வண்ணம்.
108. விண்ணிலே மறைந்து நோக்கி
வேந்தனிங் கிதங்கண் டொன்னார்
புண்ணிலே பொலியும் வாளாள்
புரவலற் றொழுது தென்னர்
மண்ணிலே மனையாள் நல்லூழ்
வாய்த்திலா மங்கை கொண்கன்
கண்ணிலே கருணை காணாள்
கடவுவள் வழிபா டென்பாய்.
109. ஏழையா ளிரங்கா யேனும்
எழிலட லுடையாய்க் கென்றும்
பீழையார் பேதை பெண்மைப்
பெட்புடை வாழ்த்தும் பெண்டிர்
மாழையார் வள்ளல் நின்னில்
வாழுமூழ் மடந்தை மார்க்குப்
பேழையா ரன்பு முய்த்தாள்
பெறுகென வணங்கிப் பேசாய்.
110. நீலமார் வானின் மீன்போ
னின்றவண் மிளிர்ந்து மின்னிச்
சூலமார் கடவுட் கன்ப
னடிதொழு தவற்கென் பெண்மைச்
சீலமார் துனியும் செம்மல்
சேவகக் கடனுஞ் செப்பிக்
கோலமா ராண்மைக் கேலாக்
கொடுமையை விடுக்கக் கூறாய்.
111. யாரைநீ யாதுன் மாற்றம்
எனிலவற் கியம்பு கண்டாய்
ஓரையைக் கழங்கைப் பந்தை
ஒப்பில்தன் பாவை தோழி
மாரைமுன் கவலை யில்லா
மனத்தையும் விடுத்துன் காதற்
பேரையே பேறென் றெண்ணிப்
பேதுறும் பேதை தூதேன்.
112. விந்தைநீ வினவல் என்பேர்
விளைவொடு கருவி யென்ப
முந்தைநான் அறிவ னுன்னை
மும்முறை முகம னில்லை
நுந்தையின் அணுக்கத் தொண்டன்
நுவல்வனுன் புகழ்மை பேணி
நிந்தையை நீக்க நின்பால்
நேசத்தால் பேச வந்தேன்.
113. தென்னர்செந் தமிழர் தேயாச்
சீர்த்தியர் செழியர் தெய்வ
நன்னர்வான் கங்கை மண்ணை
நணுகுமுன் பழையர் நாட்டை
மன்னராய் ஆண்டு மாண்ட
வழுதியர் வழியில் வந்தாள்
பின்னர்நின் மகனைப் பெற்றோள்
பெருமனைக் கிழமை பேணாய்.
114. கற்பற வாழ்வுங் காதற்
கடற்கரை விளக்குங் காணத்
தற்பரை யருளை நாடித்
தமிழ்த்துறைக் குமரி நோற்பாள்
விற்பன விநய மாதர்
விரகிலள் விழைந்து நாளுங்
கற்பன கணவன் காதற்
கடன்புரி கடன்காண் கல்வி.
115. என்றிவை யியம்பி யின்னும்
எம்மிடைத் தொடர்ந்த காதல்
நன்றுமுன் வளர்ந்த செய்தி
நான்சொல வுணர்ந்தென் கொண்கன்
பொன்றலில் புகழ்போல் நின்ற
பொருவிலென் அன்பன் னாற்குச்
சென்றுநீ தெளியச் செப்பித்
தேற்றியெம் மிருவர்ச் சேர்த்தி.
116. வருபுனல் விழவு காணமருத
முன் றுறையுள் மேனாள்
ஒருபுறக் காவி லுற்றேம்
உருத்தவ ணும்ப லொன்று
மருவுழி வெருவித் தோழி
மாரொடு மறுகப் பன்னத்
துருவியம் பும்பற் கொம்பி
னூடுறைத் தூன்றக் கண்டேன்.
117. தெளித்தெதிர் சினந்த யானை
தெருமர முகத்தில் வாளி
குளித்தவன் புழைக்கை வில்லிற்
குழித்துமேற் குதிக்க வோடி
ஒளித்தது பிளிறி; ஊங்கோர்
ஆளிபோல் மீளி ஒண்கண்
அளித்தெனைப் பருக அன்னா
னழகமு தருந்த லானேன்.
118. காத்தெனை யளித்த காளை
கண்களி யூட்டக் காதல்
நீத்தம்நா னிலையேன் நாணென்
நிறையுட னெகிழ நெஞ்சம்.
யாத்தவற் குறவு கூற
யாணர்நோய் மகிழ்ந்தேன்; கண்டான்
பூத்தபுன் முறுவ லுள்ளப்
புணர்வொடு புளகம் கூர.
119. பஞ்சவர் கால மோராப்
பழையர்தங் குடியிற் றோன்றும்
வஞ்சியர் தமிழர் கற்பின்
மணம்புணர் வகையா னன்றி
எஞ்சிய குலத்தார் காதற்
கிடைந்துள மிளகார்; என்பெண்
நெஞ்சமிம் மாணிப் பார்ப்பான்
நெகிழ்த்தவா நினைந்தேன் மாழ்கி.
120. என்னிலை யயிர்த்துள் ளேங்கி
எண்ணமிட் டயரு மேந்தல்
தன்னிலை கருதிக் காதற்
றருக்கொடு தகவார் தந்தை
மன்னிலை மாண்பு முன்னி
மறுகுமென் னுள்ளம் பொய்யா
நன்னிலை நட்பி னல்லார்
நாப்பணு ர் நகையை நாணும்.
121. வேர்த்துடல் விதிர்த்து நின்று
வெறுங்கைகள் பிசைந்து விம்மி
ஆர்த்தழு தயலா ராயத்
தன்பறி வழகு மிக்காள்
பார்த்தன ளிறைஞ்சி யண்மிப்
பாண்டியர் மகள்கா ணென்ன,
ஓர்த்தன னுவந்து யானும்
பார்த்திவ னுணர்தி ரென்றான்.
122. தானையர் தகையா வண்ணம்
தனக்குநல் வழிசொல் லென்ற
கோனையென் தோழி கூடக்
குழைந்துயிர்த் திருந்தேன் மீண்டாள்
ஆனையை வென்ற ஆளி
மானினுக் கஞ்ச விஞ்சை
மீனைவெல் விழியாற் செய்த
விரகினை விளம்பு கென்றாள்.
123. அந்தண னல்ல னாலென்
னாருயிர்க் கமுதா யிந்நாள்
வந்தழல் மதமா வென்றென்
மனம்புகு மன்னன் மாரன்
தந்தழல் காம வேழம்
தடிந்துளம் தளிர்க்க என்னைச்
சொந்தமாய் மணக்கத் தூண்டச்
சூழெனத் தோழி சொல்வாள்.
124. தனித்தவன் விழைவு சொல்லித்
தழையொடு தாமந் தந்தான்
குனித்தவிற் பகழி கொண்டோர்
குஞ்சரப் பகைகொன் றெங்கட்
கினித்தவ னினிய வுன்கட்
கிடைந்துழல் கின்றான் எம்மோய்
பனித்தலை விடுதி பார்த்தன்
பன்னிநீ என்றாள் பாங்கி.
125. பாண்டியர் விளக்கே நின்போற்
பான்மதி வழிவந் தானாம்;
பாண்டவர் குடிப்பேர்; தாங்கள்
பஞ்சவர்; பார்த்தன் தன்பேர்;
ஆண்டவர் அவற்குஞ் சொக்க
ராவராம்; தமிழும் ஆய்ந்து
வேண்டள வறிந்து ளானாம்;
வேந்தன்பால் விரைகின் றானாம்.
126. கூடலார் கொடுக்க வேட்டுன்
கூட்டமும் புருவ வில்லும்
நீடலார் நீலத் தம்பும்
நின்னரு ளுடனே பெற்றிங்
காடலா ரனங்க னாட்சி
யடக்கிநிற் கரச வாகை
சூடலார் விழவு செய்யத்
துணிந்துளான் வாழா னன்றேல்.
127. நம்மைமுன் செல்லச் சொல்லி
நமக்குமுன் நடப்பான் போலும்
அம்மைநீ யணியத் தன்வில்
லரதன வாழி தந்தான்
வெம்மையா லுனது மீனார்
விரலணி விழைவன், ஈதி;
செம்மையீ தெல்லாந் தெய்வத்
திருவுளக் குறிப்பா மென்றாள்.
வேறு
128. பகல்போயது பலரும்பழ மதுரைப்பதி படர்வார்
அகல்வேமென ஆயஞ்சொல மெய்காவல ரணுக
நகல்வல்லவ ரிகலிப்பிசி நடைநோவழி நொடிகள்
புகல்வல்லன பலவுஞ்செவி புகுதாம னடந்தேன்.
129. பழுதில்லெழு நிலைமாளிகை பலபந்திகள் நிலவும்
முழுவெண்ணில் வொளிர்தண்குடை முரசார்கொடை வழுதி
வழுவில்குடிக் கயலார்கொடி வளரும்விறல் மூதூர்
விழுஞாயிறு மெழுதிங்களும் விரவும்பொழு துற்றேன்.
130. நானாவித நன்மக்களந் நகருட்புக நானும்
மோனாவிர தங்கொண்டுள முழுதும்திறை கொண்டோற்
கானாவிழி யலமந்தழ அவனோடுறை மகிழ்வை
நோனாவிதி நொந்தேபுழை நுழைவாருடன் சென்றேன்.
131. பகடானிரை மேதித்தொறு பலமீள்தரு மிடையே
சகடாரொலி பொதுவர்குழல் தாயின்சிலை மணிகேட்
டகடாரிளங் கன்றங்கக வார்ப்போடெழி லிளைஞர்
உகள்தாரிசை யவராடொலி ஒல்லென்றொலி கழுமும்.
132. மாடந்தொறும் வடிவம்பல வரிசைச்சுடர் மாலை
நீடம்தெரு நிறைவார்க்கிருள் நேராதொளி பகல்போல்
ஆடம்துகில் நிழலாநிலை பலமல்லிகை யவிரப்
பீடம்தளிச் சுடராவளி வளைநல்லொளி பெருகும்.
133. அந்தித்துனி வந்துற்றதெ னயர்வோடழி நெஞ்சில்
சிந்தித்துயர் காதல்நிலை செப்பித்துணை செய்ய
வந்தித்தெதிர் வளர்கோயிலில் வரமங்கையை வாழ்த்திச்
சந்தித்தெரு விட்டெங்கடி தாமப்பொழி லுற்றேன்.
134. எங்குற்றனை? எங்கண்மணி என்னுற்றது சொல்லென்
றங்குற்றழு மென்தாயர்சொல் லறியாதுட னழுவேற்
கிங்குற்றர சிபம்நிற்பதை எய்தாரெவர்? வதுவன்
பங்குற்றதென்? என்றேபடர் பரிகின்றனர் பலரும்.
135. மங்குற்றளை களைமன்னரின் வழிவந்தவள் வைகை
பொங்குற்றது காணத்துறை புகவிட்டது மன்னன்
அங்குற்றது மறியின்வரு மரிலோடுனக் கழிவாள்
கங்குற்றலை யுறவந்திலை கரைகின்றன ளன்னை.
வேறு
136. எனதுளநோ யவரவலம் இகுளைதொலைத் திடுவான்
தனதுரிய தாய்தழுவித் தனிக்கொடயல் சென்றாள்.
மனதழியான் ஆயமுடன் மாளிகையு ளன்னை
கனதுயரங் களையவழி காணவிழைந் துற்றேன்.
137. இதுசெயுமுன் என்வரவோர்ந் தெழ்நான்
கதுமெனக்கை கூப்புமுனம் கட்டியெனை முத்திப்
புதுமகனான் பெற்றெனிநாட் புகுற்ததெலாம் புகல்வை
எதுகருதி ஏங்குதி?ஆண் டெய்தியதென் னென்றாள்.
138. தியங்கியநான் செப்புமுனஞ் செவிலியவ ணுற்றாள்;
உயங்கலைநம் மொருமகட்கின் றுயிருயரன் புதவி
வயங்குவட மன்னன்,மகள் வதுவைபெற வரும், நம்
கயங்கதுவக் காத்திவள்மெய்க் காதல்பெறுங் காளை.
139. என்றபொழு தன்னைமகிழ்ந் தென்னையணைத் தெடுத்துச்
சென்றனளென் தந்தைதிருச் செழியர்பிரான் தெய்வ
மன்றதிலென் மன்னன்விழி மகிழ்வரவேற் றென்னைத்
தின்றதவன் செய்யமுகஞ் சிறக்கணித்துத் திளைத்தேன்.
140. மறத்தகரி மருதமதில் வலவனைமுன் வதைத்துப்
புறத்தபொழிற் றன்மகள்பால் புகுவதையெய் தோட்டும்
திறத்தவனை யாய்புகழச் செம்மல்முறு வலித்தான்
அறத்தொடுநின் றவள்மொழிகேட்ட ரசன்மகிழ் பூத்தான்.
141. அண்ணலொடு வந்தவையா ரந்தணனங் கறைவான்
பெண்ணழகி கண்ணிலருள் பெற்றதனைப் பேணும்
விண்ணவர்கோன் விறன்மகனல் விசயனிவன் மேனாள்
பண்ணியமெய்ப் புண்ணியமிப் பெண்ணுருவாப் பார்ப்பான்.
142. வார்த்தசிலை நுதல்விழியில் வாழ்வுநிலை பார்த்தான்,
பார்த்தனிவள் கைப்பிடிக்கும் பாக்கியமும் பார்ப்பான்;
சீர்த்திகொடைத் திருவுயரும் செழியஇவ ரிருவர்ச்
சேர்த்தறவாழ் வுயர்மணநீ செய்யவருள் செய்வை.
143. வில்விசய மீனர்தவ மேவுமியை பிவள்தன்
வில்லொடுமீன் வளர்வதனம் விளக்கும்;மதி விளங்குந்
தொல்வழிநும் மிருகுடியுந் தோய்தல்முறை; தமிழை
வல்லைவட மொழிமணக்கும் வகைவழக்காய் வழுதி.
144. என்னலுமங் கிறைஞ்சியெழு மேந்தலையென் தந்தை
தன்னகலத் தார்வமொடு தழுவியய லிருத்தி
மன்னவவென் நன்னுதனான் வழங்குமுனுன் ஆண்மை
உன்னவளாக் கியதுழுவ லொத்துடையீ ருவப்பேம்.
145. காண்டிவம்போற் கற்புநிறை காதலுன துரம்போ
லீண்டியசால் புடையிவளோ டின்பமெலா மெய்திப்
பாண்டியர்தொல் குடிவிளங்கப் பாவையிவள் பால்நாம்
வேண்டியநல் விறன்மகவை விரைந்துதவி வாழி.
வேறு
146. என்றவையில் எமைவாழ்த்தி இறைவனறி
வோர்கணிகள் இசைத்த நாளில்
மன்றல்தர வள்ளலெனை மருவியநன்
மங்கலத்தை மறவே னென்னாத்
தென்றலொடு சந்தனமும் தென்கடல்வெண்
ணித்திலமும் பொதியிற் றேக்கும்
நின்றதமிழ் நிலமுடையள் நினக்குரைப்பா
ணிலையிதென நிகழ்த்து நீயே.
147. குன்றரிய காதல்கொடு குளிர்வித்தென்
விழியிலெழில் மழைத்த கொண்டல்
நின்றதென வில்லாண்மை நிறுவியென
துயிர்காக்கும் நிமித்த மன்று
வென்றகளி றின்றுளது, வில்லொடவன்
விழியுரைத்த வெய்ய சூளை
நன்றறியும் பொழிலுளது, நல்லகரி
வன்னிகுழி நவிலெம் மூரில்.
148. மணந்துமகி ழிரவிலவன் அரமியத்துள்
மடியிலெனை வைத்து முத்தித்
தணந்தினிநான் வாழ்வதில்லை, சங்கரனார்
ஆணை, எனத்தந்த சொல்லை
உணர்ந்தமதி யெஙகளிரு குலமுதல்வன்
உளனம்பன் வேணி யும்பர்;
புணர்ந்தபழங் கிழமையவன் நெஞ்சறியும்;
பொய்யான், நீ புகல்வை யெல்லாம்
149. உடல்தோய்ந்துன் னுளங்கலப்பா ரிருக்கவெனை
யுவப்பதெவ னெனநான் ஊடக்
கடல்கலக்கும் யாறனைத்துங் கங்கைகொலோ?
கண்ணகல்வான் கலந்து காந்தி
யிடல்மகிழுஞ் சுடரனைத்துந் திங்கள்கொலோ?
எல்லொளியில் விரியு மெல்லா
மடல்மலருந் தாமரையோ? உணர்வுபுணர்
மொழியனைத்தும் தமிழோ? மங்காய்.
150. கங்கைமதி மரைதமிழ்நீ, கடல்வானெல்
லுணர்வேநான், காதல் காலுன்
பொங்குமொளி முகநிலவார்ந் துயிர்வாழும்
புள்ளென்னைப் புலவாய், நல்லை;
மங்கையுனை, மழைமறக்கும் பயிரெனினும்,
மறந்துயிர்நான் வாழ மாட்டேன்;
சங்கைவிடுன் தமிழ்போலுந் தண்ணளியாற்
றழுவென்றான், தகைமை சாற்றாய்.
151. மற்றையநாள் மகிழ்ந்துலவு மாடமிசை
மருவவர, மறுத்துத் திங்கள்
கற்றைவிழி காணுமென்றேன்; என்முகந்தன்
கைமறைத்துக் களித்துக் காணாய்
ஒற்றைமதி ஒளித்ததினி யுட்குவதேன்?
ஒல்லையினி உனதி ரண்டு
பற்றைகளாற் றழுவென, நான் பரிந்தணையப்
பரவசத்தால் பசைந்தோ மன்று.
152. அகங்குளிரத் தனிநிலவி லவனணைத்து
முத்தியென தழகை யார்ந்து,
மகளிரெழில் விளக்கென, நான் முகங்கருக,
மதிமறுவால் மரைகள் கூம்பல்
தகவெனில்தண் சேதாம்பல் மலர்தலியல்
பெனவிறைஞ்சித் தன்கை கூப்பி
மிகவணங்க, முறுவலித்தேன்; மீட்டுமெனைத்
தழுவிமகிழ் மிதப்பச் செய்தான்.
153. பொழுதனைத்து மிரவாய்நங் காதல்நறும்
புதுமலர்க்குப் புலரி புக்குப்
பழுதெதுவும் தாராமல் படைக்கும்வலி
யுனக்கிலையோ? பகர்தி, யென்றேன்;
எழுதரிய எழிலுயிர்க்கும் ஓவியமே
நீவிரும்பி லெதுவுஞ் செய்வேன்;
வழுதியற வண்மயிலே பிறர்வினைக்குப்
பகல்வழங்க மறுக்க மாட்டாய்.
154. கழுதுவிழை கங்குலினைக் கள்வரொடு
காமுகரே கருத லாவர்;
பழுதறுநம் மெய்க்காதல் பகலிரவு
பகுத்துவளர் பான்மைத் தன்றே
முழுதறமும் பொருளெதுவு மின்பமுளை
விளைவெனமுன் முன்னி யோர்ந்தே
எழுதிணையி லிருபொருளை யீந்ததமி
ழிறைவிபணி இழைப்ப னென்றான்.
155. பகலையறம் பலபகர்ந்துன் பாங்கரெனை
யகற்றுவதாற் பகைப்ப னென்னை
நகலினிக்கக் கவவுக்கை கசந்திரவை
நாணுதியோ நம்பி யென்றேன்;
தகவுபணி வெனத்தனது கைகுவித்துத்
தண்மதியிற் றமிழ்ச்செவ் வாம்பல்
நகலியலென் றவனிறைஞ்ச, நகைமுகிழ்த்தேன்;
நல்லை தமிழ்நங்கை யென்றான்.
156. மதிமுகம்தன் மகிழ்வென்றான்; வான்மறைந்து
கூனாய்த்தன் மறும றைக்கும்
சதிதானோ வுவப்பென்றேன்; தாமரையைச்
சரிசொல்லத் தகுமோ என்றான்;
வதிவாழும் வாடுமலர் மகிழுதியோ?
மனக்கருத்தை மறையா யென்றேன்;
புதிதுவமம் புகலென்றான்; உள்ளமுகம்
போதுமென்றேன், புளகம் கொண்டான்.
157. பின்னொருநா ளவன்வனத்தென் தோழிநகப்
பேசிட, நான் பிணங்கி, யன்றென்
மன்னொடுரை மறுத்தவன்றன் மடிமகிழ்பெண்
பூவையையும் வைதேன்; பூவை
தன்னொடுதான் சொன்னதுரை யெனத்துயர்கண்
ததும்பவுரை தளம்பி னான்; இப்
பொன்னொடுநின் கணவநிழல் தோயிலுளங்
காய்வனெனப் புகன்ற தன்றே.
158. பூவைபுகல் மொழியென்னைப் புளகிக்கப்
புலவியெலாம் போக்கிப் பாங்கர்
பாலையழு திருப்பவளைப் பொறுப்பையெனத்
தழுவினேன்; பசைந்து பார்த்தென்
கோவையிதழ் தன்னிதழாற் குழையஅகங்
குளிரவுடன் குலவிப் புல்லும்
தேவையெனைச் சினவாத திருவுளத்திற்
கொருகோடி தெண்டஞ் செய்தேன்.
159. மாதொருத்தி விளையாட்டி லுடன்பிறந்தா
ரொருபெண்ணை மணந்து வாழும்
தீதொருவார் வடவரெனச் சிரித்தவளைச்
சினச்சிரிப்பாற் றெழித்து, வீரம்
யாதொருவர் தனியுரிமை? யாவையுநீ
யறிவைகொலோ? யாழ கேள்நின்
பேதொருவாய், பாஞ்சாலன் பெண்ணொருத்தி
ஐவர்மணம் பெறுமா றுண்டோ.
160. வில்வளர்தோ ளிளவலப்பாஞ் சாலனைப்போர்
வென்றதனால் விசய னென்னும்
சொல்வளர வெற்றிமகள் தனைமணந்தான்,
நடுவனவன் தொடர்பால் நல்ல
கல்வளர்தோட் சோதரரும் புகழவனோ
டுடன்கோடல் கறையென் பாரார்?
மல்வளர்தோட் பாஞ்சாலன் வழங்கவனல்
மகண்மணந்தார்; மறப்பா யல்லை.
161. அஞ்சவரு போரழலில் பாஞ்சால
னஞ்சலிக்க ஐய னைவர்
தஞ்சமெனும் வின்னூலன் தனக்காக
வென்றவிறற் றகவு தந்தாள்
பஞ்சவரைப் புகழ்மடந்தை பொதுமணத்தல்
பண்பலவோ பகர்வா யென்றேன்;
மஞ்சமறைந் தோர்ந்தவன்தன் மார்பிலணைத்
தெனைவழுத்தி மகிழ்ந்தான் மாதோ.
162. இவையெலா மவற்குரைப்பை; என்னிலையு
மவன்கடனு மெடுத்துக் கூறி,
அவையறியக் காதல்சொலிக் கைப்பிடித்திங்
குடன்வாழ்வன், அகலே னென்றான்;
நவையெதுகண் டெனைநெகிழ விடுவதென
நவில்கிலனா னறிவ தெங்ஙன்?
சுவைபிறர்பால் நுகர்கவுழைத் தொழிற்றொடர்பே
விழைவ, னெனச் சொல்லு வாயே.
163. நல்லாபொல் லாரெனினும் ஓம்புவதாண்
அறமெனத்தான் நவின்றா னென்பால்;
வில்லாள்வா னவனானோர் பொல்லாளு
மல்லளவன் விரும்பி வேட்டோள்;
அல்லாக்கச் செய்வர்பிற ரல்லர்; எனை
யளியாமல் அவன்வில் லாண்மை
ஒல்லாத பொல்லார்போல் கொடுமைசெயல்
ஒப்புரவோ உரனோ என்பாய்.
164. பொன்மானைப் பின்தொடரப் புருடனைவிட்
டவன்பின்னே புலம்பு வீரன்
தன்மானங் காப்பவனை வைதனுப்பித்
தனியிருந்த தருக்காற் றக்க
சன்மானந் தென்னிலங்கைச் சிறைபெற்றாள்
எனினுமவள் தனிமை தாங்காள்,
தன்மானத் தவிப்பளெனச் சிறைமீட்டுத்
தலையளித்தான் தகைமை சொன்னான்.
165. வில்லறமுந் தனைமணந்த மெல்லியலாள்
நல்லறமு விளங்க அன்னை
சொல்லறமுன் னேற்றதினாற் றூயபுக
ழேற்றபெருந் துணையில் வீரன்
இல்லறமுங் காதலறக் கடனும்விழை
சால்பினைஎவ் வெவர்க்குங் காட்டி
நல்லறமுன் னிறுவியதை நவின்றவனென்
நலமழிய நடத்த னன்றோ.
வேறு
166. எதுவொன்று மவனோவ நானென்று
மனதார எண்ணிற்றிலேன்;
மதுவொன்று மலர்வண்டு புதிதுண்ண
நலமீயும் வள்ளன்மைபோல்,
விதுவொன்று குடிவீரன் நிறையோடென்
னெழிலார வேளாண்மைசெய்
ததுவொன்று நினையாம லாளாம
லளியாம லவனிற் பதே?
167. மதியென்று மலர்கின்ற குமுதத்தை
வஞ்சிக்கு மரைவாண்முகம்
கதியென்று கரைகின்ற வுயிர்வாழ
அருளென்ற காண்டடீவனென்
நிதியென்று நின்றேனென் நிறைகொண்டு
கவல்கூரும் நிலைதந்ததென்
விதியென்று தமிழ்மாதர் விரல்சுட்ட
விடலாண்மை விறலாகுமோ.
168. மறவே னெனுஞ்சொல்லை மறவா
மனத்தேனம் மகிபன்வரும்
துறவா னவன்சொற்ற சூளென்றும்
இருவென்ற துணைவன்பணி
இறவாமை கடனென்று மிதுகாறு
மிறவா திருந்தேனெனை
யறவே தணந்தாரு மகிழ்நற்கெ
னாற்றாமை யறிவிப்பையே.
169. வம்பிக்கு மொழிவல்லர் நெஞ்சத்தை
வதுவைக்கண் வஞ்சித்துவாழ்
நம்பிக்கென் னிலையோதி நானாடு
நலமென்கொல்; நட்புற்றவர்
நம்பிக்கை கொல்வோ னெனப்பெண்டிர்
பழிகூற நங்கொண்கனும்
தும்பிக்கு மலர்போ தெலாமுண்ணல்
போன்மாதர் தோள்தோய்வதே.
170. சுனைநீல விழிவண்டு பொதுவுண்ண
மலர்நெஞ்சு தோம்அற்றெனை
நினையுங்கொ லெனயார்கொல்
பிறர்நம்மில்? நீநின்னை நினையாயெனில்,
அனையே னெனக்கொள்ள லாமென்
றவன்சொல்ல, அழுதேனியான்;
எனைவிட்டு னினைவுற்ற தெண்ணாய்கொ
லெனமுத்தி யிழவேனெனா.
171. தனைவென் றிரண்டற்ற தவயோக
நிறைஞான தருவேயெனை
வினைகொன் றுனருள்கொண்டு வீடெய்த
வைப்பாயென் வைப்பேயுனை
எனையன்றி வேறென்று கருதாஎன்
னிதயத் தினிக்குந்திரு
அனையாயென் அறிவேயென் அன்பூரு
மின்பென் றணைத்தானவன்.
172. தப்பின் றிரண்டொன்று மெனிலொன்
றெனல்மிக்க தவறாகுமால்;
அப்பொன்று முப்பென்ன அளவாதி
வேறன்றி யறவொன்றினும்,
ஒப்பின் றுயர்வுள்ளி யொருவா
வுளத்தின்ப முறுபோகமார்
வைப்பின்றி வீடேதன் வாழ்வுன்னை
மறவாமை மனமார்வைநீ.
173. மகிழ்விக்கு நின்னோடு மகிழ்கின்ற
நானொன்றி மருவுந்திரு
முகிழ்விண்ட மலர்நின்ற மணமென்று
மலரென்று வேறெண்ணொணா
நெகிழ்வித் திரண்டற்ற நிறைகந்த
மலரென்ற நிலையாகுமால்;
மகிழ்விக்கு மணநீ, அம் மணநாறு
மலர்நான்,இம் மறையோர்வைநீ.
174. என்றேனை யிறுகத் தழீஇ, முத்தி
யீதுண்மை யெனமெய்சிலிர்த்
தொன்றே யிரண்டில்லை யென்பாரு
ளின்பத்தை யுணர்வாரலர்;
நன்றே யறிந்தேனம் மொருமைக்க
ணிருவேமும் நனிவாழ்வுறல்
தொன்றேயிம் மெய்கண்ட தமிழன்பு
தூய்தென்று தொழுதானரோ.
வேறு
175. இவையெடுத் தோதி யென்ற
னின்னலுக் கிறுதி காட்டக்
கவையிலா வுளத்தென் காதல்
கனிவுறச் செவிவா யூட்டி
நவையிலாப் புகழை மீட்டும்
நம்பியன் பறத்தி னாட்ட
அவையமன் றளித்த வண்மை
யவற்கறைந் தனுப்பென் மாட்டே.
176. ஊணிலாள் உறங்காள் ஒன்று
முவப்பிலாள் ஓர்ப்பு மில்லாள்
பூணிலாள் வெய்ய நெஞ்சிற்
பொறித்துனை நினைந்து நையும்
மாணிலா வாழ்வு வேண்டாள்,
மனதிலுன் காதல் மோதக்
காணிலாள் அலைக்குங் காமக்
கடற்கரை சேர்க்குந் தெப்பம்.
177. முன்னையே யிறப்பள், நீயுன்
முகத்தெழி லமுதை யூட்டிக்
கொன்னையே யிறவாப் புத்தேள்
கொடுநிலை கொடுத்தாய், வேண்டாத்
தன்னையே வெறுப்பள் சாம்பித்
தண்கடற் குமரி தங்கி
உன்னையே உளத்துட் கொண்டிங்
குயர்தவ நோற்ப ளென்பாய்.
178. தன்கடல் முத்தும் தன்தென்
சந்தனக் குழம்பு நுந்தொல்
நன்கலை மதியும் நோவள்;
நாணிலாக் கயவர் போல,
மென்கலை தெரியாய் நீத்த
மெலிவிடைப் பகைமை மேவிப்
புன்கணை பொழியும் வேளைப்
புலம்பொடு பொருவ ளென்பாய்.
179. கூடலிற் றனிமை தாங்காள்
குரைகடற் குமரி யெக்கர்க்
கூடலை யிழைத்துக் கொண்கன்
கூடலுண் டாங்கொ லென்று
நாடலை நோற்கும் நானென்
னலிவற நலங்க ளார,
வாடலை வருவ னென்ன
வன்புறை வழங்கக் கேட்பை.
180. காதலிற் றனித்தார் காமக்
காய்வுநோய் கசப்பே யீயும்;
ஆதலி வமுதை வென்ற
அவள்தமி ழாம்பற் பண்ணை
ஓதலி லுவப்புக் கொள்ளாள்;
உன்னரு ளில்லை யாமேல்
சாதலிற் பிழைப்புக் காணத்
தகும்வழி தருவை என்பாய்.
181. பெண்மைமெய்ப் பெட்பே வாழ்வாய்ப்
பேணுதல் குறிக்கும் பேர்,இவ்
வுண்மையா டவர்க ளோரார்;
உவப்பவற் றிடையோர் போது
வண்மையாற் காதற் கீந்து
மகிழ்பவன் மனத்தென் நீர்மை
அண்மையுற் றுறைக்கு மாறங்
கவற்குரைத் துய்தி தேர்வை.
182. மண்ணில் மரத்தில் கல்லில்
மற்றொரு பொருளில் இன்றென்
கண்ணினில் கவினாக் காட்சி
காதலால் பதித்தேன், காளை
எண்ணினி லெழுதொ ணாத
எழிலெலாம்; என்னி லன்னான்
கண்ணினிற் காதல் பொய்த்தான்,
கருத்தியல் மறைத்தான், கண்டாய்.
183. தன்னியல் பிறர்பாற் காணுந்
தன்மையே னன்னா னென்பால்
பன்னிய வனைத்துங் காதல்
பழுத்துவீழ் கனியென் றெண்ணி
மன்னிய மனைவாழ் மாட்சி
மகிழ்நனாற் பெறும்பே றென்ன
உன்னிய வுளத்தேற் கோங்கு
முவகையன் றூட்டி னானால்.
184. அழல்தரும் வேனி லன்றி
அலைக்கும்வெம் பனியு மல்லால்
நிழல்தரும் காருந் தென்றல்
நின்றுலாம் பருவந் தானும்
கழல்தரும் காளை நாடு
கண்டறி யாதெக் காலும்;
தழல்தரும் பாலைக் கென்றே
சமைந்தவ் வுலகம் போலும்.
185. கடலிலா நாட்டிற் பெண்டிர்
கண்ணெனுங் கடல்கள் தூக்கும்
உடலெழி லமுத மாரி
யுதவுகார்க் கேனென் னுள்ள
மடல்முளி வறத்தை மாற்ற
வரும்வரம் வழங்கா வன்கண்?
அடலினும் பெண்மை யண்மை
ஆட்சியே ஆண்மைத் தென்பாய்.
186. எனைமறந் தினிய பெண்டி
ரெழில்நலம் நுகர்வ னேனும்
தனைநிக ரெழில்கள் தாங்குந்
தனயனை மகிழாத் தந்தை
எனையனும் உலகி லுண்டோ?
இங்கவன் மதலை ஐயன்
நினைவொடும் வினவு வாற்கென்
நித்தநான் உரைப்ப தென்பாய்?
187. பஞ்சைய ளல்லள், பார்த்தன்
பத்தினி, குடியில் யாரும்
பஞ்சவர் பகையை யஞ்சார்,
பரவைகால் படியப் பண்டை
விஞ்சைவாழ் இமயத் துச்சி
விளங்கமீன் பொறித்த வீரர்;
நஞ்சமுண் டவனை யெங்கள்
நங்கையே நகையால் வென்றாள்.
188. காதலாற் பொறுத்தி யென்றென்
கற்பறங் காழ்த்த நெஞ்சம்
ஓதலாற் சினவேன், பெண்மை
உயர்புகழ்க் கூறென் றஞ்சி;
கோதலாற் குணத்தை மேவான்;
கோப்பெருந் தேவி போலச்
சாதலா லுய்வன், சாற்றாய்;
தணந்தவற் றெறவும் வல்லேன்.
189. கண்ணுதல் விரும்பி வந்து
காதலால் மணஞ்செய் தாண்ட
மண்ணுடை மனைவி யென்னை
மணந்தபின் தணப்ப தன்னான்
எண்ணுதற் கில்லை; யென்னில்
என்னையிங் கிருத்தி யேதோ
பண்ணுநற் கரும முண்டேல்,
பகரொணாப் பான்மை தேறாய்.
190. தன்னிக ரற்ற வீரத்
தமையனுக் கரசும் வீறும்
மன்னர்தம் வணக்க வாழ்த்தும்
வழங்கின வள்ள லேழை
நன்னுத லொருத்தி வாழ்வை
நலிவது பழியென் றோதித்
தன்னற மோம்ப வந்து
தமிழர சேற்கச் செய்வாய்.
191. ஆக்கலோ டழித்தல் நன்று
புரத்தலும் புரிவை யாகி
நீக்கமொன் றறியா தெங்கு
நிலவுமெய்க் கடவுட் காரே!
ஏக்கமுற் றழுங்கு மென்பா
லிரங்கியுன் இறைவன் சேய்என்
பாக்கமுற் றிடச்சென் றோதப்
பரிவைநீ, பரவு கின்றேன்.
192. உலகுயி ரனைத்தும் தத்தம்
உழுவலாற் கூடி யுய்ய
அலகிலின் புறுத்துங் கார்நீ
அவனுளங் கரைத்தென் இன்னல்
விலகுமா றளித்துப் பெண்டிர்
தமியரை விரும்பிக் காக்கும்
இலகுயிர்த் துணையாம் சீர்த்தி
எழிலுற வளர்த்தி யென்றாள்.
வேறு
193. வழுதிகுல மடமயில்வண் கற்பகநீ வாழி
எழுதருநல் லெழிலுடையாய் எவர்க்குமரு ளுடையாய்
தொழுதெனது நன்றிநிதம் சொல்லியுனை வாழ்த்திப்
பழுதறநான் வாழ்வுறுமிப் பாக்கியம்நின் னளியே.
194. பிணிபசிகே டொழியவளர் பெரியதமிழ்ச் செங்கோல்
பணிகிலனான் பட்டதளை பரிந்துதறித் தோய்செம்
மணிகுலவு மலரிதழ்வாய் வருநினது வண்மைப்
பணிபுரிவென் பாக்கியம்நீ பகர்ந்தவழிப் படர்வேன்.
195. திருந்துசிலைத் திருவுயர்நின் செம்மல்நினைப் பிழைத்துத்
தருந்துயர்நீ வருந்தலையத் தனஞ்சயனும் அறவோன்
மருந்துமொழி யூர்வசியின் மாலையற வெறுத்தோன்
விருந்தெனநின் விழிநிழலை விழைபவனா னறிவேன்
196. மல்வளர்தோள் மகிழ்மணநீ வழங்கினதை மறவான்;
செல்வன்விரைந் தொருமதியிற் றிரும்புவனற் செய்தி
எல்வளைகை யிறப்பமெலி வெய்துபட ரிரியச்
சொல்வனவன் றூயவனீ துயரவயல் துஞ்சான்.
197. எல்லைகரி, யென்பணிசென் றியற்றியிறைக் கியம்பி
வல்லைவரு வேனினது வண்மைமற வேனான்;
தொல்லையுல காட்சியொடுன் தோணலநீ தரவும்
ஒல்லையுவந் துனைவழுத்தா னுளனெனினா னுணர்வேன்
வேறு
198. என்றவட் கியம்பி வாழ்த்தி
யெழுந்துநேர் வடக்கிற் சென்று
நன்றியும் நட்புந் தூண்ட
நடுவழித் தாழா தேகிக்
குன்றமர் தேரளான் முன்னர்க்
குறுகிநல் லற்ற மோர்ந்து
பொன்றலி லுளத்தாள் காதல்
புகன்றது பொய்யா மாரி.
199. வானவர் செருக்கை மாற்றி
மக்களை மதிக்க வைத்த
மானவண் வழுதி, வேம்பன்,
மாக்கடற் றருக்கைப் போக்கிப்
போனவன் பெருமை பேணேன்;
பூட்டின தளைநான் பெற்றேன்;
மீனவர் வீறு சொல்லும்
விழியினான் விடுக்க வந்தேன்.
200. பதிதணந் திடத்தன் கூடற்
பதிகசந் தவள்பாற் காய்ந்து
மதிதொழ மறந்தா ளென்ற
வன்கணோ வஞ்சம் வேறோ
கொதிதழற் குழம்பே கொட்ட
குமரியிற் கொண்க னின்றி
வதிபவட் கிரவெந் நாளும்
வருத்தமே வழங்கும், நின்போல்.
201. ஈந்துபொன் பொதிபூப் புன்னை
இறப்பில மணத்தை யென்றும்
ஏந்துபொன் மடலார் தாழை
எழிலடும் பெங்கு மேய
நீந்துநுண் மணலில் மூசு
நிலவியல் நிழலு நீர்மை
மாந்துதன் பெடையோ டன்றில்
மகிழ்தொறு மாழ்கு மேழை.
202. அவள்மயல் வீறு நஞ்சை
யழிக்குமன் பமுதப் பேறு
பவளவாய்த் தீரம் காதற்
பரவைநாள் கொழிக்கப் பம்பும்
தவளநன் முத்தார் மூரல்
தரத்தலை யளித்தாள், தக்க
உவளமென் றுவந்தா யன்னா
ளுழக்கநோ யூட்டு வாயோ?
203. நனவிலுன் நினைவால் நையும்;
நடுங்குமுன் நங்கை துஞ்சிற்
கனவுக ளடர்க்கக் கண்டே;
காதலின் கசப்புங் கண்டே
வினவலர் வீழ்வா ரன்பின்
மெய்ம்மையை ஐயு றாதார்க்
கெனவிவ ளியலாற் கண்டே
னிறப்பள், நீ யிரங்கா யென்னில்.
204. கற்பகத் திறையை வென்ற
கைதவன் கடற்றென் கன்னித்
தற்பரை கோயின் முன்னுன்
தவம்தவம் கிடக்க, அன்னாள்
அற்பறங் குழைந்தாய் கோர்சேய்
அமிழ்தெழு தமிழி லன்னை
கற்பற மிழற்றக் கண்டேன்;
காணநீ நோற்றா யல்லை.
205. கற்பினி லன்பி லொப்பார்
கடப்பவர்க் காணாள் தென்னர்
இற்பிறப் பாட்டி தெய்வ
எழிலொடு மிழப்பை யேயோ
பொற்பறி வுரனால் நின்னைப்
பொறையளி பெட்பாஞ் சால்பால்
தற்பயந் தாளை வென்ற
தமிழ்மகன் மழலைச் செவ்வி.
206. தந்தையைக் காட்டக் கேட்கும்
தநயனைத் தழுவித் திங்கள்
விந்தையார் வேலை காட்ட
விம்முவன்; விளையா டென்னப்
பந்தைப்பொற் பாண்டில் முத்தப்
படகினை யெறிவன்; பாலன்
நிந்தையாற் சிந்தை நைவாள்
நிலையைநீ நினைவை யின்னே.
207. கன்னலைப் பழிக்குஞ் சொல்லாள்
கரையிலாக் காதற் பௌவம்
தென்னவர் வரைப்பின் மூன்று
திரைக்கடல் வளரும் செல்வம்
உன்னவை, விரைந்து வந்துன்
னுடைமைநீ யுரிமை கொள்வாய்,
என்னநல் லெழிலி சொல்லி
யேந்தலை வழுத்திற் றம்மா.
208. வந்துதென் மொழியில் வாழ்த்தும்
மாரியை வணங்கி வள்ளல்
செந்துவர் வாயிற் றெய்வச்
செழுந்தமிழ் மணக்குஞ் செல்வி
முந்துற வுணர்த்துந் தூதின்
மொழிசெவி மடுத்துக் காதல்
நந்துத லறியா நெஞ்சி
னம்பியும் நவில லுற்றான்.
209. மதுவைவெல் சொல்லின் வல்லாள்
வண்மையால் மகிழ்ந்து முன்னே
வதுவையை வழங்கி மம்மர்
வாங்கின மடவாள், வஞ்சர்
பொதுவியல் புணர்த்தி யின்றென்
புரைபல புனைவ தென்னே?
வதுவியல் விழுமந் தாங்கி
மகிழ்நனை வழுத்த லன்றோ?
210. சேய்மையும் தெரிவை மாரும்
தினமவள் சால்பு செவ்வி
தூய்மையார் காதல் சொல்லத்
தொழுதழும் நெஞ்சம்; அன்னாள்
வாய்மையேர் வண்மை வாழ்த்தென்
மனமவள் வாழுங் கோயில்:
தாய்மையே தழைவாட் கிங்கென்
தவறிலாத் தன்மை சாற்றாய்.
211. துருபதன் மகளை வில்லும்
சுபத்திரை தனையின் சொல்லும்
தருபத மோர்ந்து வென்றேன்;
தமிழ்த்திரு வென்னைத் தன்பொன்
இருபதம் தலையி லேந்த
ஏவித்தன் காதல் முல்லை
வருபதம் வென்று தந்த
வண்மையை மறக்க வொல்லேன்.
212. ஆர்வலர்க் கரும்பு மன்பே
யாயத்தின் நட்பாம் போதாய்
நார்வலர் நயக்குங் காதல்
நன்மல ரெனக்கு நல்கி
ஏல்வலங் கொண்டாள் தன்னை
யேழையென் றியம்ப மண்ணில்
யார்வலர்? தலைமண் தான்பெய்
யானையான், யாதென் னூழோ.
213. தந்தைதன் னையரோடு தனையர்தம்
மாள நாளும்
சொந்தநல் லுரிமை யின்றித்
தொழும்பினைத் தொழும்பெண் வாழ்வு
செந்தமிழ் வழக்கன்று; ஆண்மை
தெரிவைமார்க் குரிமை செய்தல்;
அந்தர மொப்பர் பெண்ணாண்
அகம்புற மாட்சி கொண்டே.
214. மெல்லிய லார்கள் நல்லார்;
மெலித்திலர் மறத்தாண் மக்கள்:
இல்லியல் மெய்யாங் காதல்
மிதவையால் வீடு தேடும்
நல்லியல் தமிழர் நீர்மை;
நாங்களோ கடமை யென்னும்
தொல்லியல் வலிய ராளத்
தொழும்பற வீறு சொல்வோம்.
215. நல்லவை யெல்லா மாற்றல்
நங்கட னென்பர் தென்னர்;
வல்லவை வழக்கா றென்னும்
வடவரோ கடன்க ளெல்லாம்
நல்லவை, மெலியார் தம்மை
நலிவதா ணறமென் பாரால்;
சொல்லுவை துணிவென் றேற்கென்
துணைவியும் சூழ்ந்து சொன்னாள்.
216. கடவது கரவா தாற்றக்
கருதலே காட்சி யென்ற
மடவரல் தமிழ்நன் மாற்றம்
வாய்மையால் மறையாக் கொண்டேன்;
அடலர சார்வத் தண்ண
லாளுமா றவற்கு வேண்டி
வடநில வயவ ரோடு
மலைதலென் வாழ்வின் வாய்ப்பாம்.
217. அற்பினி லறத்தி லாழ்ந்த
அறிவினி லழகிற் காதற்
கற்பினி லொருத்தி யொப்பே
காணொணாக் கடவுட் பெண்ணாள்
எற்பிரிந் தினைவ தேயென்
இற்பெருங் கிழமை சான்ற
பொற்பினைப் புகழ்மை பூண்டு
போற்றநான் தாழே னென்பாய்.
218. புகழ்த்திறம் புரியேன் போகம்
வேட்டுநான் போனால்,கூடல்
அகழ்ப்புறத் தரண்செய் வீர
ராரெனில் யாது சொல்வேன்?
இகழ்க்கட லேறா வென்னை
யேந்திழை யெவ்வா யெண்ணும்?
திகழ்த்திரு சினவா திந்தச்
செய்திநீ சென்று செப்பாய்.
219. ஆய்மயில் விடைகொண் டுற்றே
னவதிநான் வைத்தே னல்லேன்;
பேய்மய லமரிற் பேணும்
பீழையென் பிழையென் றெண்ணிக்
காய்மனங் கவலா வாறென்
கடனறி காத லோடு
வேய்மயல் கொள்ளும் தோட்கென்
விழுமமும் விழைவும் விள்ளாய்.
வேறு
220. நன்று நானிவ ணானில மன்னரை
வென்று வில்லற வேள்வி முடித்துடன்
சென்று செய்வனென் சேல்விழி சேவகம்
என்று நல்லவட் கென்முக மன்சொலாய்.
221. என்று மன்னவ னேவ லிழைத்தெழில்
துன்று தோட்டுணைத் தொல்லற நன்னெறி
நின்று நித்தமும் மெய்த்தவம் நேர்வனான்;
சென்று செப்பெனச் செம்மல்கை கூப்பினன்.
222. வீரர் கைதொழும் வின்மற வீறுவாழ்
வார நெஞ்சினன் வாழ்த்தி வழங்குசொற்
சாரங் கொண்டதைத் தந்தது, தண்டமிழ்
ஈர நீர்மையட் கேமுகில் மீண்டதும்.
வாழ்த்து
வாழ்க ஏர்தொழில்; வாய்மையு மோங்குக;
வீழ்க தண்துளி; வெம்பசி நோயுடன்
ஆழ்க தீயவை; முத்தமி ழார்மணம்
சூழ்க வையகந்; தூய தழைகவே.
தமிழ் வணக்கம்
குறிப்பு
முதல் மூன்று பாடல்களும் தனிச் சொல்லின்றி வந்த சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருண் மேலனவாயுள்ளன.
1. தம்மையீன்ற அம்மையை ஏன்று போற்றல் தலையாய அறமாம். எல்லோருக்கும் தாய் தமிழேயாம்; ஆதலால் தமிழ் மொழியைப் போற்றுதுமென இந்நூலாசிரியர் தம்மொடு பிறரையும் உளப்படுத்துப் போற்றுதல் செய்வாராயினர்.
2. அம்மம் முலைப்பால், அரவணையா யாயரேறே அம்ம முண்ணத் துயிலெழாயே அன்னே யுன்னை யறிந்துகொண்டே னுனக்கஞ் சுவனம் மந்தரரே என்ற பெரியாழ்வார் திரு மொழிகளி லிச்சொல் இப்பொருளிற் பயிலல் காண்க. தமிழ்மொழி பாலூட்டுத லுடையதாகக் கூறினார். பாலேய் தமிழ் எனப் பிற்காலத் தான்றோர் கூறியவாற்றான். இச் செய்யுளில், தாய்மார் தம் குழவிப் பருவத்து மகவுகளுக்கு முலைப்பாலூட்டுதலுடையராகத் தமிழ்த் தாய் தன் மக்களுக்கு வாழ்நாள் முழுதும் சாலப்பாலூட்டுத லுடையாளெனத் தமிழின் மேம்பாடு தோன்ற உணர்த்தினார்.
3. உயிர்களுக்கு இவ்வுலகின்கண் வேண்டுவன தாரக போஷக போக்யம் என இம் மூன்றேயாம் என்பது அறிஞர் கண்டது. இவற்றுள் தாரகம் உயிரை உடலின்கண் நிலைப்பிப்பது. போஷகம் உடலை வளர்ப்பது. போக்யம் நுகர்வாய் அமைவது. இதுவே முறையாயினும் ஈண்டுச் செய்யுணோக்கிப் போனக மாய்த் தாரகமாய்ப் போக்கியமாய் என முறை மாற்றி வைக்கப்பட்டன. தமிழ்மொழி தமிழர்க்கு இம்மூன்று நிலை யினும் உறுபொருளாயமைவதை அறிந்துகொள்க.
தமிழ்ப் பல்லாண்டு
1. தமிழணங்கின் பல்புகழும் நாம்பாடுதும்; அங்ஙனம் பாடிப் பரவுதுமேல் அவளால் அருளப்பட்டு உயர்வோம். ஆதலின், ஒப்புயர்வில்லாத குழவிப் பருவ மொழியாய், மாறாவிளமை, எழில், இனிமை இவற்றுக் குரியாளை நாம் ஏத்துவாம் என்க. இக்கவியுள் குழவி கிழவி என்ற சொன் முரண் காண்க.
2. கடவுளர்க் கேவல்தருமிறைவி சிவனாரும். திருமாலும், முருகவேளும் செந்தமிழ்க்குத் தொண்டாற்றிய செய்திகள் ஈண்டு அறிக. அழகியாள் அழகனைத்தும் கருவுயிர்த்தும், கன்னியாகவே உள்ளாளெனக் கூறிய நயம் பாராட்டற்பாற்று.
3. உயிர்கட்கு உள இருளகலுமாறு முன் தன் முறுவல் ஒளி ஒளிரவுதவி, மக்கள் உயர் திணையாய்ச் சுட்டப்படுதற்குரிய உணர்வுரைக்கவல்ல மொழியை, விலங்கினத்தி னின்றும் மக்களை வேறு பிரித்தறியும் உரிமையாய் முதலில் உலகில் தந்தவள் என்க.
4. வசையைத் தரும் பாழ் வயதின்றி முன்பு உலகு முழுதும் பரவியிருந்த இத் தமிழன்னை, தன்னை நாடி வந்த வட சொற்குத் தன் உலகில் வடபகுதியை உரிய நாடாக ஈந்து மகிழ்ந்தாள்.
5. பின் பிறதிசை மொழிகள் கருவழியுமாறு ஏப்பமிடத்தின் றொழித்த அச்செயற்கை மொழியாய வடசொல்லின் வன்பசி குறையுமாறு செய்து உயர்ந்த தமிழன்னை யாவாள்.
6. உலகில் தோன்றி இறந்தன பல செயற்கைச் செம்மொழிகள். இறவாது நிலவும் நம் தமிழோ செய்யா நல்லியல்பிற்று. ஆதலின், காலமும், இடமும் தன்னை எனைத்தானும் தொட ராமல் எல்லையறியாத் தன்னிளமை நலத்தால் கற்புயர் காதலை மெய்யாய புலவோர்க்கு அருள் செய்வாள் என்க. காலவிடம் காலமாகிய விடமுமாம். வேகவதிக் கேதிரேற விட்டதொரு சிற்றேடு, கால நதி நினைக்கவராக் காரணத் தினறிகுறியே என்ற கவிஞர் கருத்தும் ஒத்து நோக்குக.
7. பொய்மொழியாத புலமை வளத்தைத் திருவள்ளுவர் போன்ற தெய்வப் புலவரும், அறிவறத்தின் உரிமையை நக்கீரனார் போன்ற சான்றோரும் தம் மெய்ம்மையாய மொழிகளால் வளர்த்தமைத்த புகழ் மடந்தையின் மடியில் வளர் தமிழ் மகளைப் பூமடந்தை தன் முதன் மகளாகக் கோடலில் வியப்பு ஒன்றுமின்றென்க.
8. பைஞ்ஞிலம் மக்கட்டொகுதி: மக்கட் டொகுதி நாளும் ஆர்தற்குரிய பண்ணையிட மெனப் புதிய வழகும் மணமும் பொலிகின்ற மலர்ப் பொழில்களையும் கனியொடு தீம்பால் பெருகு பலவுலகுகளையும் பாக்களால் படைத்துத் தருபவள் தமிழன்னையாம் என்க.
9. கன்னிமை யழியாமல் கருவின் முதிர் கலைகளையும் கற்ப காலத்தும் அழிவெய்தாத கவியுலகையும் தருபவளாம் என்க.
மாரிவாயில் - குறிப்புரை
(வித்துவான் தி.பொ. பழனியப்பப் பிள்ளையவர்கள் எழுதியது)
1. வீதலிலா - அழிவில்லாத. எழுஓதிமம் - எழுமலையென்ற வேங்கடம். முக்கடல் - மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று திசையிலுள்ள கடல்கள்.
2. கவின் - அழகு. வழுதியர் பாண்டியர்.
3. தூரத்து உரோமர் - சேய்மைக்கணுள்ள உரோமாபுரியினர். சீனர் - சீனதேசத்தார். ஒக்கல் - சுற்றம். திரவியம் ஐந்தாவன மலை, கடல், காடு, நாடு, நகரங்களில் உண்டாகும் ஐவகைப் பொருட்கள். ஆரம் - ஒன்று முத்து, மற்றொன்று சந்தனம்.
4. ஊரி - மேகம்; அதனை ஊர்ந்து செல்லும் காரி - கரிய நிறத்தினனாகிய இந்திரன். அவனோடு சமானாசனம் (உடனிருக்கை) கொண்டோர் பண்டைப் பாண்டியர் என்ற புராணச் செய்தியறிக. வாரி - கடல்.
5. கன்னி - அழிவின்மை.
6. பார்த்திவர் - அரசர் . நடுவன் - நடுப்பிறந்தோன். பசலை -காதலன் பிரிவால் மகளிர் மேனியில் உண்டாம் நிறவேறுபாடு.
7. வேட்டவன் - மணந்தவன். உருவந்தீட்டல் - உரு எழுதி நோக்கி வருந்தல். ஊட்டம் - உண்ணல்; உணவுமாம். கொண் - பெருமை (இடைச்சொல்). சித்திராங்கதையை மணந்து பிரிந்த பார்த்தன் வடநாடு செல்லுமுன் குமரியாடச் சென்றானென்ற பாரதக் கதையை நோக்கிக் கொழுநன் கூட்டம தறிந்த கொண்பழங் குமரி எனப்பட்டது.
8. வேட்டவர் - விரும்பியவர். தெய்வகோட்டம் - கடவுள் உறை கோயில். முன்துறை - முற்பட்ட கடற்றுறை. சேட்டம் - ஆனி மாதம். சுசி - ஆடி மாதம். சிராவணம் - கார்காலத் தொடக்க மாகிய ஆவணி.
9. உக்கல் - பக்கம்
10. பேதை - எழுவாய்; செம்மல் - பெருமை மிக்க தலைவன். புரந்தரன் - இந்திரன். பொன்னூர் - பொன்னுலகமாகிய இந்திரபுரி.
11. அயலானாகிய அந்தணன் - பிராமண வடிவு கொண்டு தோன்றி யிரந்த அக்கினிதேவன். பாரதம் காண்டவ தகனச் சருக்கம் பார்க்க.
12. நந்தல் - கெடுதல். சொல்லும்பிந்த, உள்ளுணர்வு முந்த, மோனமே பெரிதும் பேசும் - நயமறிக.
13. வரதை - வரந்தருந் தெய்வம், தோழி தேர் அன்று, அம்புதம் என்ன - தோழி இது தேர் அன்று மேகமே தோன்றுவதெனக் கூற.
14. காரினுக்கரசன் - மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன். போதகக்களிறு - களிற்றுப் போதகம். இளமையான யானைக் கன்று.
15. ஓதநீர் - கடல்நீர்; இங்குப் பாண்டியன் கடல்சுவற வேல் விடுத்த திருவிளையாடற் புராணச் செய்தியும், மேகத்துக்கு விலங்கிட்ட புராணச் செய்தியும் அறிக. செல் - மேகம்.
16. ஓதிமம் - அன்னப்பெடை புளினம் - மணற்குன்று. கொண்மூ -மேகம். ஓர்த்த - ஓர்ந்த, எதுகை நோக்கி வலித்தது.
17. படிறு - வஞ்சம். இகுளை - தோழி. தணந்தான் - பிரிந்தான்.
18. ஒருவ - விலக. மாதிரம் - விண். ஆதரம் என் - ஆசையென்ற.
19. விதும்பல் - வேட்கையால் விரைதல். வெடி - இடி. தழல்வது - சுடர் விட்டெரிவது. காய்ந்த உதும்பரம் - பழுக்கக் காய்ச்சிய செம்பு. சஞ்சலம் - மின்னல் (இரண்டாஞ் சஞ்சலம் துன்பம்). தழல்வது என்னும் வினையாட்சியுண்மைக்கு தழன்றிதோ தடங்கரத்து வெள்வேல் தவிர்ந்தது பார் (தணிகை, சீபரி. 338) நோக்குக.
20. தளித்து - துளிபெய்து. முளித்த - உலர்ந்த. முடுகுவாய் - விரை வாய்.
21. இறை கணப்பொழுது. விழைவு - தன்மேவிட ஆசையானது தன்னைச்சார.
22. துறை ஆர் தமிழ் - அகப்புறப் பொருட்களின் துறைகள் நிறைந்த தமிழென்க. துறைபோய் - தேர்ந்து. துவரைச்சிறுமி - சுபத்திரை, சிறுமி - குறிப்புச் சொல்.
23. பையுள் - துன்பம். இகுளைச் சிறுமகள் - உறவினளாகிய சிறுமி (சுபத்திரை). இச்செய்யுளின் பின்னிரண்டடிகளிலும் பின்னர் வரும் மூன்று செய்யுள்களிலும் நூலாசிரியர் வடநாட்டு ஆரியர் விரதம் நெகிழ்தற்குக் காரணம் காட்டுதலும், தென் தமிழர் பிறழா நெறி மேம்பாடு போற்றுதலும் அறிஞர் உற்றுணர்ந்து மகிழ்தற்பாலன. உகும் மெய் - உகுவது உண்மை.
24. அவன் உருவம் என் விழிவழி அகம்புக்கு நின்று அகலாத் தன்மை மெய்ம்மையே.
25. கருவி - மேகமே (விளி). அமிழ்துண்டவ ரிறைவன் - அமிழ்த முண்ட தேவர்கள் கோமான்.
26. முகமரை - முகமாகிய தாமரைமலர். முனம் நின்மணம் முழவத்தளை வீடுற்றனன் முன்புநின் திருமணத்திற்கு முர சொலி முழங்கற்பொருட்டு விலங்கினின்றும் விடுதலை பெற்றேன். ஈண்டு மேகம் சிறைவீடு பெற்றதற்குப் பிறிதோர் காரணம் கற்பித்துரைத்த திறம் வியக்கற்பாலது.
27. ஊடு ஆறி - வழியின்கண் ஆறுதலுற்று.
28. கல்மீது பகைநின்ற தோளண்ணல் - கற்றூணொடு மாறுபட்ட திண்ணிய தோளையுடைய தலைவன். ஐந்து தருநீழலார் தந்தை, விண்மன் வானுலகத்துள்ள கற்பக முதலிய ஐந்து தருக்களின் நிழலில் அமர்கின்ற தன் தந்தையும் விண்ணுல கத்துக்கு இறைவனுமாகிய இந்திரன். சொற்ற இவை - சொன்ன இச்சொற்கள்.
29. ஆரம் - சந்தனமரம். நாவாய் - கப்பல்கள்.
30. சாகம் - தேக்குமரம். மந்தி - பெண்குரங்கு. கடுவன் - ஆண் குரங்கு. பலவொன்று சிறுமந்தி - பலவாக ஒன்றிய சிறு மந்திகளுக்கு. பலவுஒன்று - ஒரு பலாக்கனியை. கடுவன் பறித்து - ஆண் குரங்கு பறித்துக்கொண்டு. ஓர் பலாப்பலம் - இஃது ஒப்பற்ற பலாப் பழமாதலின், நீர் பங்கிட்டுண்மின் என, மந்திகள் ஊடலிற் புக்கன.
31. புயல்கண்டு - ஆடல்புரியும் மயில்போன்று. ஆட்டம் கொள்ளு மாறு ஐந்து பொறிகளையும் பேதுறச் செய்யும் தகைத்தாய என உவமையை விரித்துரைக்க.
32. பண்ணை - மகளிர் ஆயம். பொன் இக்கு உறழ் தோள் - பொன்மயமாகிய கரும்பை யொத்த தோள். தொடலை - மகளிர் விளையாட்டு.
33. ஓடை - நெற்றிப்பட்டம். கருங்கன்னி - பார்வதி. பொன்னிக் கும் - காவிரியினும்.
34. எழிலீ - விளி. தங்கலை - தங்காமல் (முற்றெச்சம்).
35. கார் இறுத்ததனை - கார்காலம் வந்து தங்கியதனை. அம்பரம் - வானம். சுட்டிய - சுட்டுதற்கு. என் ஆரியன் - என் கண வனாகிய பார்த்தனின், மனமென - அளியற்ற மனம்போல.
36. பாடலம் - பாதிரி. தளவு இணர் - முல்லைப் பூங்கொத்து. உலவைகள் பாடவம் கொழித்திட - கான்யாறுகள் புதுப் பெயலாற் பெருக்கெய்த, அன்றி மரக் கொம்புகள் தளிர்த்துக் களிக்க என இருபொருள் கொள்க. பாடவம் - களிப்பு.
37. மலயம் - பொதியமலை, பிறக்கு - பின். வையையாறு கட லொடு கலக்காமைக்குக் காரணம், முன்பு கடல் பாண்டி நாட்டினொரு பகுதியை விழுங்கியதாமென, ஆசிரியர் பிறிது காரணம் கற்பித்துக் கூறுவது அறிந்து மகிழ்க.
38. ஆரநறுந் தென்றல் - சந்தன மணம் வீசும் தென்றல். ஊதை - காற்று.
39. தறுகண் - அஞ்சாமை. மலைவார் - போர் செய்வார்.
40. கப்பக் கிழி - கப்பப் பொருளாகிய பொன் முடிப்பு.
41. தேன் - வண்டு.
42. கோட்டம், அகில், குங்குமம், தக்கோலம், கறி (மிளகு) இவை குறிஞ்சிப் பொருள். நெல், இக்கு (கரும்பு), இளநீர் மருதப் பொருள். வளை (சங்கு), வித்துருமம் (பவளம்) நெய்தற் பொருள். நாவி (புனுகு), தேன் - முல்லைப் பொருள். நானிலப் பொருள் பண்டமாற்று நிகழ்வதாக அமைத்த அழகு அறிக.
43. கண்பருகி - கண்ணாற்பருகி. தலையல் - புதுப்புனல்.
44. விளையுள் - விளைவிப்போர். ஓவாமை - ஒழியாமல்.
45. மேழி - ஏர். ஆடவர் மேழி நண்புடைமையையும், நல்லார் விருந்தையும் நாளும் போற்றி என்க.
46. களமர் - வயலின்கண் தொழில் புரிவோர். சாறு - விழா. நள்ளார் - பகைவர்.
47. மலயத்தை ஓர் ஆண் எனக் கூறியதற்கேற்ப அதனினின்றும் வருகின்ற பேராறுகள் நான்கினையும் முலைக் காம்புகளாகக் கூறியது அறிக.
48. குடப்பொருநை மேற்குத் திசைக்கண் உள்ள ஆறு. வானவர் - சேரர். குபேரனுக்கும் இந்திரனுக்கும் தனித்தனி யுரிமையாம் திருவும் தருவும் ஒருங்கு வளரும் வானவர் நாடென்ற சேர நாடு. ஆதலின் இந்நாட்டு வானவர் விண்ணாட்டு வான வரினும் சிறப்புடையா ரென்றபடி.
49. தரளம் - முத்து. வழுதி - பாண்டியன். சிமிலம் - மலையுச்சி. குடம் - குடநாடு.
50. மல் - வளம். பீடு -பெருமை. நதம் - மேற்குநோக்கிச் செல்லும் யாறு.கோடு - கொம்பு.
51. புணரி - கடல். குடம் - குடநாடு.
52. கொங்கர் அலையினைப் புகுந்த மூவாக் கடம்பு எறிந்து ஆண்ட செய்தி சிலப்பதிகாரத்தாலுணர்க. செம்மாந்து - களித்து. ஆனைத் தடமலை - ஆனைமலை யென்னும் ஓர் மலை.
53. இளநிலவு எறிக்கு மூரல்முத்து - இளமையான ஒளியைப் பரப்பும் பற்களாகிய முத்துக்கள். முளரியின் முகத்தர் - தாமரை மலர்போன்ற முகமுடைய மகளிர். வைகல் - நாட்காலை. நீலமலை - நீலகிரி .குழலை - கூந்தலை. மாரி - மேகம்.
54. மஞ்ஞை ஆல - மயில்கள் ஆட. வேய்தர - போர்வை செய்ய. மஞ்சு - மேகம்.
55. வேய்தரும் குழல்கால் ஊத - மூங்கிலாலாகும் குழல்களில் காற்றுப் புகுந்து ஊத; மென்சிறை - மெல்லிய சிறகையுடைய பறவைகள். கலுழி - கலங்கல் நீரருவிகள்.
56. குடகடல் கொடிய மனத்தாருடைய இருள்செறி உள்ளத்தின் ஆழத்தை யளக்கும் எனவும், அதன் பக்கல் நின்ற நெடுமலயம் நடுநிலை மனத்தாருடைய சால்பின் உயர்ச்சியைக் காட்டும் எனவும் சிறப்பு உணர்க.
57. குடநாகம் - மேற்குமலை, அகல்நாகம் - அகன்றவான். தாலம் - பூமி குதூகலத்தின் கூலம் - களிப்பின் எல்லை.
58. மாமை - நிறம். மருமம் - மார்பு. வானி- மலயத்தெழுந்து கிழக்கோடும் ஓர் யாறு. தண்ணடை - வயற்புலம்.
59. வௌவி மகிழ் மீளி - வௌவுதற் றொழில் விரும்பிய அருச் சுனன்; அவன் மார்பு பல மகளிர் நலங்களைத் தோய்ந்து பொதுவாயது போலப் பலவற்றையும் வாரிவரும் இரண்டு பெண்ணை யாறுகள்.
60. சாரை - சாரைப்பாம்பு. சாரசம் - குருகு வெண்ணாரை. சகுலி - மீன்.
61. முட்டி - தடைப்பட்டு. குரகம் - நீர்வாழ் பறவை. ஈண்டு நீர்ப் பூக்களைப் போன்றே பறவை ஒட்டியுற நீர் அறா ஊருணிகள் பல என்றபடி.
62. உழுவல் - பிறப்புத் தொடர்ச்சி பெற்ற அன்பு. நாற்று நடுங்கால் இந்திர தெய்வதம் தொழுது விழவயரும் வழக்
குண்மை பெரியபுராணம் நாட்டுப் படலம் 12ம் செய்யுளில் காண்க.
63. தொண்டை - தொண்டைநாடு. தமிழிற் பண்ணார் பாசுரமிப் பாலும், சாமகானம் அப்பாலும் பாட இடையே அமர்கின்ற திருமால் குன்றமாகிய வேங்கடம். இண்டை - தாமரை. செய்ய இண்டை நல்விழியனென்றது பத்தருக்கருளும் திருநோக்குடையான் என்பது குறித்து.
64. கிஞ்சுகம் - கிளிகள். கொடுநுதி - வளைந்தமுனை. கொவ்வைச் செவ்வாய் - கொவ்வைப்பழம் போலுஞ் செவ்விய அலகு கொஞ்சும் - மழலை பேசும்.
65. துழனி - ஓசை. வேங்கடம், ஆதியில் முருகன் திருமலை யாகவும் பின்னர் திருமாலின் திருமலையாகவும் அமைந்த செய்தி உணர்த்தப்பட்டது. போதி - மலை. போதிய - போது என்னுந் தெரிநிலை வினையடியாய்ப் பிறந்த இறந்த காலப் பெயரெச்சம். ஓதிய என்பதுமது.
66. அத்தம் - நீரில்லாத நீளிடை. புளிஞர் - வேட்டுவர். பம்மல் -நிறைதல். மம்மர்செய் அளக்கர் - மயக்கந்தரும் அளவில் வெளி.
67. முசு - குரங்கு. தென்பொழில் - தென்னந்தோப்பு; அழகிய தோப்புமாம்.
68. நித்திலம் - முத்து. வித்துருமம் - பவளம். பகரும் - விலை கூறும். அருந்ததி - ஒருமலை.
69. பம்பும் - பரவும். புழல் முதிரும்பணை - உட்டுளையுடைய மூங்கில். பணை - வயல்.
70. அவல் - பள்ளம். யாணர் - புதுமை. பம்பை யென்ற பெயர்க் கேற்ப அறாது நீர் பெருகும் பேறு பிழையாத பெரிய புகழை யுண்டுபண்ணும் பொய்கை. சாறு - விழா. தெண்கங்கை -கோதாவிரியின் பெயர்.
71. படப்பை - தோட்டம். அறல் - நீர். பவ்வம் - கடல். கீழ்கடலே மேல் மலையின் அழகு பார்க்க வந்தென விரிந்தொழுகும். கோதாவிரி, நெய்தனில ஊரான பாக்கங்களிலும். மருதநில ஊராகிய ஊர்களிலும், முல்லைநில ஊரான பாடிகளிலும் உலவிச் செல்லுதல் கூறப்பட்டது.
72. மருமம் - மார்பு. அலைமகிபன் - கடலரசன். வார்க்கும் - பெண்ணை நீர்வார்த்துக் கொடுக்கும் வழக்கைக் குறித்தது. குடைதல் - நீராடுதல். கடலின் தடக்கை போலச் செல்லுமெனவும், வார்க்கும் தண்ணீரின் ஒழுக்கென்னச் செல்லுமெனவும், இயைத்துப் பொருள் கொள்க. செல்லுங் கோதாவிரி, குடையுங் கோதாவிரி எனவு மியைக்க. கடல் தன் காதலியான தென்னில மகளின் மார்பில் தன் மகளான தென்னில மடந்தையை அலையரசன் விரும்பி மணக்க மகிழ்ந்து வார்க்கும் நீரின் ஒழுக்குப்போலவும் என்று தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க. ஈண்டுக் கோதாவிரியின் ஒழுங்கு இரண்டுருவகத்தால் விளக்கப்படுகின்றது.
73. தொன்று - பழமை. நீத்தம் - வெள்ளநீர். செங்குடக்கு நேர்மேற்கு. தீரம் - கரை.
74. தொடுகடல் - தோண்டிய கடல்; கீழைக்கடல். தொன்று முதிர் பௌவம் - பழையதாகி முதிர்ந்த கடல்; மேலைக் கடல். தோம் - குற்றம். காமுற்று ஆர் குடக்கு ஓடும் - விரும்பி அவ்விருப்பிற்குப் பொருந்த மேற்காய்ச் செல்லும். பேம் - அச்சம்.
75. உழுவை - புலி. வயமா - வலிய யானை. மூரிப்பாந்தள் -வலிய பெரும் பாம்பு. சாழல் - மகளிர் விளையாட்டு. நடமாடும் - திரியும். இச்சொல் இப்பொருட்டாதல் நடமாடுங் கோயில் என வரும் திருமந்திரத் தொடரினுள்ளும் வழக்கினுள்ளுங் காண்க.
76. வளாகம் - வரைப்பு. கலங்குபு - கலங்கும்படி. நக்குபு புக்கு என்று கம்பர் கவியிலும் செய்பு என்ற எச்சம் செயவென் னெச்சப் பொருட்டாதல் காண்க. வினையெஞ்சு கிளவியும் வேறு பல் குறிய என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் இஃதமையும். விந்தியமலை கோதாவிரி பாய்கின்ற தென் னிலப்பகுதியை வடக்கே கங்கை நிலப்பகுதியினின்றும் பிரித்துக் குறுக்கே கிடக்கும் இயல்பை இப்பாட்டு விளக்கு கின்றது. மாசுணம் - பெரும்பாம்பு.
77. அறத்தொல்லை நாகரிகம் - மிகப் பழைய சீர்மை.
78. மஞ்சு - மேகம். மிண்டி - நெருங்கி. இருமலைத்தொடர் - கிழக்கு மேற்கு மலைத்தொடர். குடகுணக்காய் - மேற்கும் கிழக்கும் தென்வடலாய் ஓடி இரண்டு மலைத்தொடரும் குமரியருகே கூடுதலாற் பிறந்த தற்குறிப்பேற்றம். விந்தமலை யரசன் தன் காதற்குரிய தென்னில மகளை இருமலைத் தொடர்களாகிய கரங்களால் தழுவிக் கொண்டானென்பது குறிப்பு.
79. வியல் - காடு. உந்தரம் - வழி. எவ்வம் - துன்பம். கந்தரம் - நீர் தாங்கிய மேகம். அக்காட்டு வழியில் நீ நெருங்கினால் உனக் கியல்பான நீர்த்தன்மையை யுண்டு, உனக்குத் துன்பத்தைத் தரும்; ஆதலால் அணுகாமல் உயர்ந்தோங்கிப் பறந்து அவ்வனத்தைக் கடப்பாயென்பது இப்பாட்டின் கருத்து.
80. முளியோமை - காய்ந்த ஓமைமரம். குடிஞை - கோட்டான். கூன் - ஆந்தை.
81. தறுகணர் - அஞ்சாமையுடைய வேடர். தரக்கு - புலி. காழ் -கவண்கல். சூறை - சூறைக்காற்று. உலவை - மரக்கொம்பு.
82. பிணவு - பெண் விலங்கு. புனிறு - ஈன்றணிமை. விடா மலைப் பிளவு. போத்து - ஆண்புலி. முள்முளரி - முட்செடி நிறைந்த காடு. நுணவுலவை - நுணாமரத்தின் கொம்பு. எருவை - கழுகு. எருவைமுடி - இரத்தந் தோய்ந்தமுடி. நுங்க - விழுங்க. அணவுழி - நெருங்கும்பொழுது. அழல்புலி - சினந்தபுலியை. அப்புலியைக் கழுகு அறைந்தடர்க்கும்படியான காடு.
83. மாந்து - உண்ணும். ஈந்து - ஈச்சமரம். ஈகை - ஒரு கொடி வகை. இவரும் - ஏறும்.
84. வெவ்விடமுண்டவன் - சிவபெருமான். இயவு அயர்வு - வழியிலுண்டான இளைப்பு. இற - நீங்க.
85. உரன் உளம் - வலிமை பொருந்திய உள்ளம். அறல் - நீர். பயசு - நீர். கொண்கன் - தலைவன்.
86. யாணர் -புதுமை. பாணர் - பாடுவோர். பஞ்சவர் - பாண்டவர். ஆணர் - வளமை, நன்மை. மால் யமுனை - கருநிறமுடைய யமுனை யாறு.
87. இறைமை - தலைமை. வாரம் - அன்பு.
88. ஓரை - மகளிர் விளையாட்டு. சீரை - மரவுரியாடை. ஆரை - மதில். கூரை - வேய்ந்த சிறு வீடு.
89. பொம்மல் - மிகுதி. நியமம் - பெருந்தெரு.
90. நடுநாவல் வடபாதி - உலக நடுவாய நாவலந் தீவின் வடபகுதி. நேரார் - பகைவர். வழிகூறி - வழிபாடுரைத்து. மன்சூயம் - இராஜசூயம் எனப் பெயரிய வேள்வி.
91. வைப்பு - நிலவெல்லை. பாவாணர் - பாடும் புலவர். பாண் மக்கள் பாணர்குலத்தோர் (எத்துவோர்).
92. தெய்வப் பழந்தமிழரசி எங்கள் பெண் - பாண்டியகுலத்துத் தோன்றிய தடாதகைப் பிராட்டியார்.
93. சிவபெருமானைத் தென்றமிழர் கடவுளென்ற அருமை யறிந் தின்புறுக. நியமம் - கோயில்.
94. கோட்டிப் பாட்டை - கோபுரவாயில் தெரு. பித்தியின் புழை - ஊர்ப்புற மதில்வாயில். கோபுரவாசல் தெரு கோட்டை வாசல் வரை நீளச் சென்று சேரும். பீடிகை, மன்றம், பள்ளி, சத்திரம் முதலியவை இடவிசேடங்கள். பீடிகை - கடைவீதி. தண்டம் - யானை செல்வழி. மாதிகம் - குதிரை மார்க்கம்.
95. பொன்றளி - பொன் மயமாகிய கோவில். முகடு - உச்சி. பதாகை - கொடிகள்.
96. முதல்வன் - முன்னையவனாகிய வீமன், மூன்றான் - மூன்றாம வனாகிய நகுலன். வஞ்சகத்தி லொன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் நெஞ்சி, லஞ்சரண மூன்றானை என்ற பரங்கிரிப் புராண அடியில் மூன்றாமவன் எனும் பொருள் தொனிக்கப் பிரயோகம் வந்திருத்தல் காண்க. வள்ளல் - அருச்சுனன். இளவல் - சகதேவன். வாமம் - இடப்பக்கம். ஏமம் செய்ய - காவல்புரிய. அலத்தல் - துன்புறல். ஆழியோச்சும் - ஆணை செலுத்தும்.
97. படங்கு - கூடாரம். மூரிவானரம் - வலிய குரக்குக் கொடி.
98. நாவி - புழுகுப்பூனை; நவ்வி - மான். உகளும் - தாவும். காவியம் உருக்கொண் டென்ன உவமைநயம் அறிந் தின்புறுக. ஓவியம் - சித்திரவுரு. சிலதியர் - தோழியர்.
99. மன்று - அவையிடங்கள். பளிக்குத் தெற்றி - பளிங்கா லமைத்த திண்ணை; சித்திரகூடமுமாம். கொட்பு - சுழற்சி. வாமம் - இடப்பக்கம். ஒளியுமாம். வாசி - மிகுதி, சிறப்பு. பலவுள் வாசியார் - பலவற்றுள்ளுஞ் சிறப்பு மிகுந்த.
100. சூதர் - ஏத்துவோர். பால்பயில் மொழியார் - பால்போல் மொழியார். செம்மல் - தலைவன்.
101. நளினம் - தாமரை . உவமன் - ஒப்புமை.
102. ஆரம் - மாலை. நூல் - முந்நூல்.
103. துழனி - ஓசை. பாலையில் - பாலைப்பண்ணில்.
104. அரமியம் - அரண்மனை, நிலாமுற்றமுமாம். உளர்நரம்பின் - ஒலிக்கும் நரம்பின் இசைபோல. தும்பி - வண்டு. தனிக்கும் ஆங்கண் - தனித்துறையும் அவ்விடத்து. கடுத்து - ஐயமுற்று. கடுகி - விரைந்து.
105. எழிலி - மேகமே, விளி. அனாற்கு - அன்னாற்கென்பதன் இடைக்குறுக்கம். உருவம் உரை - இடிமுழக்குப் பேச்சு. மனையாள் நல்லூழ் - மனையை ஆளுகின்ற நல்வினை.
106. இங்கிதம் - குறிப்பு. ஒன்னார் - பகைவர். வாளாள் புரவலன் - வாட்படையை ஆளும் அரசன்.
107. பீழை - மனத்துயர். மாழை - அழகு. ஊழ் மங்கைமார் - முறைமையுடைய பெண்டிர். உய்த்தாள் - செலுத்தினாள், அனுப்பினாள்.
108. சூலமார் கடவுள் -சூலப்படையையுடைய சிவபெருமான். துனி - துன்பம், பிணக்கம். சேவகக்கடன் - வீரர்க்குரிய கடப்பாடு.
109. விந்தை - வியப்பு. விளைவு, கருவி யென்பன மேகத்தின் பெயர். உங்களிருவர் காதலுக்கும் விளைவாயுங் கருவியாயும் இருக்கின்றேன் என்பது குறிப்பு. மும்முறை - காண்டவத கனம், இந்திரலோகம், மதுரையில் மணநிகழ்ச்சி, என்ற மூன்று சந்தர்ப்பம். முகமன் - உபசாரச் சொல். அணுக்கம் - நெருக்கம்.
110. செழியர், பழையர், வழுதியர் என்பன பாண்டியரின் பெயர் கள். பெருமனைக்கிழமை - நினது பேரில்லாளும் உரிமை.
111. தற்பரை - இறைவி. நோற்பாள் - தவங்கிடப்பாள். காதற் கடன்புரி கடங்காண்கல்வி - காதற்குரிய செயல்களைப் புரியு முறைமை. கடம் - வழி, முறை.
112. என்கொண்கன் பொன்றலில் புகழ்போனின்ற பொரு விலன்பு - என் தலைவனுடைய பொன்றாது நின்ற புகழ்போல் நிலை பேறுடைய அன்பினை.
113. மருதமுன்முறை - திருமருத முன்றுறையென்ற இடவிசேடம். புறக்கா - புறத்தேயுள்ள பூஞ்சோலை. உம்பல் ஒன்று அவண் உருத்து - யானை யொன்று அவ்விடத்துச் சினந்தெழுந்து. பன்னம் - இலை.
114. தெருமர - சுழல. வாளி - அம்பு. பிளிறி - ஓலமிட்டு. புழைக்கை - துளையுடைய கை. ஆளி - சிங்கத்தையும் வெல்லும் ஒரு மிருக விசேடம். அளித்து - அன்பு காட்டி. யாணர்நோய் - புதிய காதல் நோய். குளித்தவன் - (ஈண்டுப் பிறவினை) பதியச் செய்தவன்.
115. காதல் நீத்தம் - அன்பு வெள்ளம். நெஞ்சம் யாத்தவன் - நெஞ்சைப் பிணித்தவன். யாணர்நோய் - புதியகாதற் பிணி. புளகம் - மயிர்க்கூச்சு.
116. பழையர் - பாண்டியர். மாணி - பிரமசரிய நிலையினன். நெகிழ்த்தவா - இளகச் செய்தவாறு. மாழ்கி - மயங்கி.
117. அயிர்த்து -ஐயமுற்று. தகவு - தகுதி. மறுகும் - கலங்கும். ஊர்நகை - ஊர்மாக்கள் இகழுரை; வாய்க்குள் அரும்பும் நகையுமாம். என்னுள்ளம் கருதி, முன்னி, மறுகும் என வினைமுடிபு காண்க.
118. ஆயம் - தோழியர்குழு. அன்பு அறிவு அழகுமிக்காள் தோழி. பார்த்திவன் - அரசன்.
119. ஆனைய வென்ற ஆளி மானினுக்குஞ்ச என்றதன் நயம் ஓர்க.
120. அழல்மதமா - சினந்தெழுந்த மதம் பொருந்திய யானை. மாரன் தந்து அழல் காமவேழம் தடிந்து - மன்மதன் தந்த தனால் சினக்கும் காமமாகிய யானையை வலியடக்கி.
121. தாமம் - மாலை. பகழி - அம்பு. கட்கு இடைந்து - கண் ணோக்கிற்குடைந்து. எம்மோய் - விளி. பன்னி - பத்தினி. பனித்தல் - நடுங்கல்.
122. தாங்கள் பஞ்சவர் என்பது அவர்கள் ஐவர் சகோதரர் என்பதையும் பாண்டியரைப் போலவே அவருக்கும் பஞ்சவர் என்ற பெயரொற்றுமை யிருப்பதையுங் குறித்தவாறு.
123. கூடலார் நான்மாடக் கூடற்பதியாராகிய நின் தந்தை. உன் கூட்டமும்…….. அடக்கி யென்றது துணைவலிக்கு நின் கூட்டமும் வினை வலிக்குப் புருவ வில்லுங் கண்ணம்பும் நின்வாழ்த்துடன் பெற்று அநங்கன் படையாட்சி யடக்கி யென்றவாறு. அரசவாகை - அநங்கனை யடக்கிப் பெறும் வெற்றியை அவளுக்குச் சூடி விழவு செய்தல்.
124. அரதன அழி - மணியழுத்திய கணையாழி. வெம்மை - விருப்பம். மீனார் விரலணி - மீன்பொறித்த கணையாழி. ஈதி - ஈவாய்.
125. நகல்வல்லவர் - நகையாடுந் தோழியர்கள். பிசி - பிதிர். நொடி - விடுகதை அல்லது நகைமொழி. நடை நோவழி - நடையில் நோவுண்டாங்கால் அதுகெட.
126. பந்தி - வரிசை. கயலார்கொடி - மீனக்கொடி, விழுஞாயிறும் எழு திங்களும் விரவும். பொழுது - சூரியன் விழுதலும் சந்திரன் எழுதலுமுடைய அந்திமாலைப் பொழுது. திங்களஞ் செல்வனை - முதல்வனாகவுடைய பாண்டியர் குலத்தவள் ஆதலின் எழுதிங்கள் விரவும் பொழு தென்று இவள் அந்தி மாலையைக் குறித்தது பொருத்தம்.
127. மோனாவிரதம் - மோனவிரதம் எனற்பாலது எதுகை நோக்கி நீண்டது. ஆனாவிழி - அவலைக் காணாமல் ஆற்ற மாட்டாத விழி. மகிழ்வை நோனாவிதி - இன்பத்தை நோற்றுப் பெறா விதி; நோல் - பகுதி. புழை - திட்டிவாசல்.
128. பகடு - எருது. ஆனிரை - பசுக்கூட்டம். மேதித்தொறு - எருமைக்கூட்டம். சகடு - வண்டி. பொதுவர்குழல் - இடையர் புல்லாங்குழலொலி. சிலைமணி - ஒலிக்கும் மணியோசை. அகடு - வீட்டினகம். அகவு ஆர்ப்பு - அழைக்கும் ஒலி. உகள் - குதித்தல். கழுமும் - நிறையும்.
129. சுடர்மாலை - விளக்கின் ஒழுங்கு. மல்லிகை - தூண் விளக் குக்கள். பீடுஅம்தளி - பெருமையும் அழகும் பொருந்திய கோயில். சுடர் - ஆவளி. வளைநல்லொளி - திருவாச்சி விளக்கு.
130. எதிர்வளர் கோயிலில் வரமங்கை - எதிரிலுள்ள திருக் கோயிலில் எழுந்தருளிய வரதையாகிய அங்கயற்கணம்மை. வந்தித்து - வாழ்த்தியென வியைக்க. கடிதாமப் பொழில் -மணப் பூஞ்சோலை. காவலும் ஒளியுமுடைய சோலை யெனினுமாம்.
131. அரசிபம் - அரச யானை. வதுவன் - பாகன். தாயர் - பாராட் டும் செவிலித் தாய்மார். படர்பரிதல் - நினைந்து வருந்தல்.
132. மங்குல் தளைகளை மன்னர் - மேகத்தைச் சிறைவீடு செய்த பாண்டியர் . அரில் - குற்றம். உனக்கு அழிவாள் - உன் பொருட்டு வருந்துவாள். கங்குற்றலை - இராப்பொழுது. கரைகின்றனள் - மெலிகின்றாள். அன்னை - பெற்றநற்றாய்.
133. அவர் என்பது ஆண்டு வந்த செவிலித்தாயரை. அவலம் - துன்பம். இகுளை - தோழி. தனது உரியதாய் - தோழியின் உரிய தாயாகிய செவிலி. கனதுயரம் - மிகுந்த துன்பம்.
134. இது என்பது மாளிகையுட் சேறல். இப்பாட்டின் கருத்து. மகள் வரவறிந்து எதிர் கொண்டு வந்த நற்றாய் தன் மகளுக்கு மதயானையால் யாதும் ஏதம் நேர்ந்ததோ என்று கருதிக் கவன்றவள் மகளின் நல்வரவு கண்டு அவளை அன்று புதிதாகப் பெற்றெடுத்தது போல உணரும் தன் மகிழ்ச்சி கூறித் திரு மருதந் துறையில் அன்று நேர்ந்ததைச் சொல்லும்படியும், தன் மகள் முகத்தில் (காதல்) கவலைக் குறிப்புத் தோன்றுவது கண்டு அவள் கவலையின் காரணத்தைச் சொல்லும்படியும் கேட்டாள் என்றபடி. புது மகள் நான் பெற்றனன் என்பது இடரொழிந்து உய்ந்தமையின் அருமை பற்றி பாராட்டு.
135. உயங்கலை - வருந்தாதே. மகட்கு இன்று உயிருயரன்புதவி -அரசகுமாரிக்கு மதயானையை விலக்கி அவளுயிரைக் காத்தலோடு தன் மேலான அன்பையும் அவட்குதவி. வதுவை - மணம். வட மன்னன் வரும் - வடநாட்டு மன்னனான அருச்சுனன் வருவான். நம் கயம் - நம்முடைய பட்டத்து யானை. கதுவ - அகப்படுத்த. இப்பாட்டில் மதயானையி னின்று காத்தகாளை அவளுக்குத் தன் காதலைத் தந்து அவள் மெய்க்காதலைத் தானும் பெற்றான் என்ற வரலாறு குறிக்கப் பட்டது.
136. மன்னன் விழி என்னை வரவேற்றுத் தின்றது. பாண்டியன் மன்றத்திலிருந்த அருச்சுனன் சித்திராங்கதை அங்கு வந்த பொழுது குறிப்பால் அவள் வரவின் மகிழ்ச்சி காட்டியதோடு தன் கண்களால் அவள் அழகையும் உண்டுகளித்தான் என்ற படி. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யவை யென்னைத் தின்னு மவற்காணலுற்று என்ற குறளால் காதலர் கண் அவரைத் தின்னும் என்னல் புலனெறி வழக்கம் என்று தெளியப்படும், சிறக்கணித்து - கடைக்கண்ணாற் குறுக நோக்கி. திளைத்தேன் - மகிழ்ந்தேன்.
137. பூவை - சித்திராங்கதை. திறத்தவன், செம்மல் - அருச்சுனன். அறத்தொடு நின்றவள் ஈண்டு நற்றாய்.
138. அண்ணலொடு வந்தவையா ரந்தணன் - அருச்சுனனோடு அந்த அவையில் வந்தமர்ந்த அந்தண நண்பன். பெற்று அதனைப் பேணும் எனவும் பிரித்துக் கொள்க. பார்ப்பான் - பார்க்கின்றோனாயினான். பார்ப்பார் வடிவத்தவனாயினான் என இரு பொருளது.
139. சிலைநுதல் விழியில் வாழ்வு நிலை பார்த்தான் என்பது அவளின் ஒரு நோக்கில் தன்முழுவாழ்வும் நிலைத்தலை நோக்கினான் என்றபடி. சிலை நுதல் அன்மொழித் தொகை. ஈண்டும் பார்ப்பான் என்பது மேலதேபோற் பொருள் தரல் ஓர்க.
140. வில்விசயம், மீனர்தவம் என்பன முறையே இலக்கணையால் பார்த்தனையும் சித்திராங்கதையையும் குறிக்கின்றன. மீனர் - மீனக்கொடியையுடைய பாண்டியர். பாண்டியர் பாண்டவர் திருக்குலங்க ளிரண்டுக்கும் திங்களஞ் செல்வன் முதல்வனாகி அவற்றாற்றான் விளக்க முறுகின்றான் என்னும் பொருள்பட மதி விளங்குந் தொல் வழி நும்மிரு குடியும் என்றார். தமிழை வடமொழி மணக்கும் என்று காட்டிய ஒப்பு மையால் செய்ய மென்னீர்மையும் வெய்ய வன்னீர்மையுமுடைய பெண் (ஆண் பாலார்தம்) சிறந்த பண்புகள் இழைந்து ஒன்றியிடும் பெருமிதம் குறித்தமை யறிக.
141. அகலம் - மார்பம். உழுவல் - பல்பிறப்புத் தொடர்ச்சியுள்ள அன்பு.
142. காண்டிவம் திண்மையாற் கற்பிற்கு ஒப்பாகக் கூறப் பட்டது அவள் கற்பு காண்டிவம் போற்றிட்பமும், அவள் காதல் அவன் அறிவுபோல் தெளிந்த நிறைவும் உடையது.
143. கணிகள் - சோதிடர்கள் தென்றலொடு ……… நின்ற தமிழ் நில முடையள் இதனொடு திருக்காளத்திப் புராணம் நக்கீரச் சருக்கத்தில் வரும்.
அமிழ்துறழ் தமிழொண் மூத்த மையசந் தனமெல் வாசம்
கமழ்குளிர் தென்ற லென்று கரையரும் பொருள் படாமல்
இமிழ்கடல் வரைப்பெ லாந்தோன் றெண்பொருள் படுநா டெள்ளித்
தமிழ்முதல் பிறங்கு நாடாய்த் தயங்குமாற் பாண்டி நாடு
இச்செய்யுளை ஒப்பிடுக. பொதியிற்றேக்கும் பிற நாட்டில் லாது தமிழ் நாட்டின் கண்ணேயே உளதாகிய தென்பதும் ஈண்டு இந்நூலாசிரியர் கண்டு கூறி வைத்து கண்டு தெளிக.
147. சூள் - உறுதியுரை. அவள் விழியை வயலாக்கி - அவன்தன் அழகு மழையை அவ்விழி நிரம்பப் பெய்யும் ஒரு மேகம் போல நின்றான் என்ற உருவகம் வியந்து மகிழத்தக்கது. கைம்மாறு வேண்டாது பெய்யும் கொண்டல்போல அவள் விழி களிக்க அழகால் ஊட்டி மகிழ்வித்தான் என்பது அவனைக் கொண்டலென உவமித்த கருத்து. விழியுரைத்த வெய்ய சூளை - என்பது வாயாற் பேசாமல் தன் காதலையும் அதனால் அவளைப் பிரியாது மணந்து மகிழ்விப்பேன் என்ற உறுதி யுரையையும் தன் நோக்கக் குறிப்பால் வெளிப்படுத்தினான் என்பது. அப்படி அவன் பகர்ந்த காதற் சூளை கரிபகரக் கண்டவர்களில்லை யெனல் வேண்டா; அவ்விடத்து நின்ற களிறும் கடிகாவுமே போதிய சான்று கூறும். இவை அஃறி ணைப் பொருள் பேசா என்னில், மதுரையில் வன்னி மரமும் கிணறும் முன்னமொரு மணத்திற்குக் கரிபகர்ந்த கதை திருவிளையாடலிற் கேட்கப்படுதலால் அவ்வூர் யானையும் பொழிலும் இம்மணத்திற்கும் சான்று கூறும் என்று பார்த்தனுக்குச் சொன்னாள் என்பது பாட்டின் குறிப்பு. வென்ற களிறு என்றதன் குறிப்பு தன் மிடலடக்கின அருச்சுனன்பால் கறுவுகொண்டு வாய்ப்புழி அவனுக்கு எதிராக் கரிபகரும் என்பதாம். (மழைத்த கொண்டல் - மழை பெய்யத் திரண்ட முகில்)
148. அரமியம் - மேல்மாட நிலாமுற்றம். முத்தி - முத்தமிட்டு. தணந்து - பிரிந்து. உணர்ந்த மதியெங்களிரு குலமுதல்வன் என்பது இரு குலத்திற்கும் ஒரு முதல்வனாகலின் நடுவு நிலையிற் பிறழான் என்பது குறிப்பு. உளன்நம்பன் வேணி யும்பர் என்பது இறைவன் திருமுடியிற் றங்கியதாழை பொய்யுரைத்து இழிதகவுற்றதை யோர்ந்து அவ்வுயரிடத் தைச் சேர்ந்திருத்தலான் தேய்திறவாமை யெய்தியதானும் இழி தகவடைந்து இறக்கும்படி பொய்யுரையான் என்று குறிப்புக் காட்டியவாறு.
149. எல் - சூரியன். இது முதல்வருங் கவிகளுள் புலவிநுணுக்கமும் காதல் நயப்பும் ஆசிரியர் கூறுவன அறிவாற் சூழ்ந்தறிந்தின் புறற்பாலன.
150. மரை - தாமரை; முதற் குறைவிகாரம். நிலவார்ந்துயிர் வாழும். புள் - சகோரம். புலவாய் - புலத்தல் வேண்டா. சங்கை - ஐயப்பாடு. பயிர்மழை மறக்குமெனினும் மறந்துயிர் நான் வாழமாட்டேன் என்பது பயிருக்கு மழைபோல் எனக்கு நீ இன்றியமையாதவன் என்பது குறிப்பு.
151. உட்குவது - அஞ்சுவது. பற்றை - காந்தள்; ஈண்டு உவம ஆகுபெயராய்க் கையைக் குறிக்கும். அவள் முகமறைக்க மதியே மறைந்ததென்று கூறுவதால் மதியவள் முகமே என்ப தனைக் குறித்தான் என்பது.
152. பிறமகளிரையும் அவர் எழிலையும் அவன் தன்முன் வியந்தா னெனக் கருதிப் புலந்து முகங்கருகினாள். மதிமறுவால் …. அவன் வணங்க என்பது மதிக்கண் மறுப்போல அவள் முகத்தின் சினக்குறிப்புத் தோன்றலால் மறுவற்ற எல்லொளிக்கு விரியும் தாமரை மறுவுடை மதிகண்டு கூம்புவது போல அவல் புலவிக்கண் அவன் தாமரை மலர் போன்ற தன் கைகூப்பினான் என்றபடி.
மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியு ளுரிய (தொல். பொருள் 227சூ)
என்பதனால் தலைவியைத் தலைவன் வணங்குமிடம் புலவிக் காலமென்பது புலனாம். (மதியுள்ளவிடத்து) ஆம்பல் மலருதல் இயல்பாதலால் உன் முகமதியிலுள்ள வாயாகிய ஆம்பல் முறுவலால் மலரவேண்டுவதும் இயல்பென்பதைச் சுட்டினான் என்பது.
153. அறம் நோக்கும் - வள்ளன்மையுடைய நங்கையாதலின் உல கோர் வினைகளுக்குப் பகலினை வழங்க மறுக்கமாட்டாய் என்றவாறு.
154. கழுது - பேய் அறம்…….” அறம் பொருளிரண்டும் இன்பத்திற்கு முளையும் விளைவுமாயிருக்கின்றன என்பது. எழுதிணையிலிருபொருள் - அகப்பொருள் புறப்பொருள்; இவ்விரண்டும் எழுதிணையா யமைந்து ஒழுகலாறு பெறல் தமிழ் வழக்கு. இனி உயருமொழுக்கத்தால் இம்மை மறுமை யாகிய இருமைப் பொருளையும் எய்தற்குதவும் நூல் நிறைந்த தமிழருக்குத் தலைவி யென்றும் கொள்ளலாம்.
155. தண்மதியில் ……… அவனிறைஞ்ச மதியொளியில் ஆம்பல் கூம்பாது மலர்தலியல்பு. உன் முகமதியில் வாயாம்பல் முறுவலால் மலர வேண்டுமென்றுகூறிஅவன்வணங்க.நல்லை - அண்மை விளியாகவேனுங் Fறிப்புKற்றாகnவனும்bகாள்ளmமையும்.157. கணவநிழல் - கணவம் - அரசமரம். கணவநிழல் - அரசினிழ லும் கணவனிழலுமென இருபொருள்பட நிற்றலறிக.
156. வடவர் - வடநாட்டினர். ஒருவார் - நீங்கார். பாண்டவர் ஐவரும் பாஞ்சாலி யொருத்தியைப் பொது மணந்ததைக் குறித்துத் தோழி இயற்பழித்தாள். யாழ - முன்னிலையசைச் சொல். பேது - பேதைமை. ஒருவாய் - விடுவாய்.
157. இளவல் - சிறுவயதினனாகிய அருச்சுனன். நடுவன் - நடுப்பிறந் தோன். கறை - குற்றம். சொல் - புகழ். அனல்மகள் - நெருப்பிற் றோன்றிய துரோபதை. நடுவன் கொண்ட புகழை அவன் முன்னவரும் பின்னவரும் ஆகிய சோதரர்கள் ஒருங்குடன் கொள்ளுதல் இயல்பேயாம். யாரும் அதைக் குற்ற மென்னார். பாஞ்சாலன் பெற்ற மகளல்லள்; தீயிற் பிறந்தா ளொருத்தியை அவன் தர ஐவர் மணந்தார் என்ற கதைக் குறிப்பையும் உற்று நோக்குவாய் என்று தோழிக்குக் கூறினாள்.
158. ஐயன்- பார்த்தன். வின்னூலன் - துரோணன். தம் வில்லாசிரிய னாகிய துரோணன் பாண்டவரை வேண்டித் தூண்ட அவரா ளாய்ச் சென்று அருச்சுனன் பாஞ்சாலனை வென்று வணங்கிய வெற்றிப் புகழே பாஞ்சாலியெனப் படுவாள். துரோணருக் காக ஐவரும் கையுறையாகத் தரவிரும்பிய பாஞ்சாலனை யடர்த்த வெற்றி அவ்வைவர் ஆளாய்ச் சென்ற அருச்சுனன் கொண்டாலும் அது ஐவருக்கும் பொதுவுடைமை யாவது தவறில்லை யென்பது குறிப்பு. மஞ்சம் - பள்ளிக்கட்டில். மறைந்தோர்ந்தவன் - அக்கட்டிலிற் பின்னிருந்து இக்கூற்றைக் கேட்டு வந்த அருச்சுனன். தோழி இயற்பழித்தமை மறுத்துத் தலைவி இயற்பட மொழிந்ததை யறிந்து வியந்து தழுவி வாழ்த்தி மகிழ்ந்தா னென்பது குறிப்பு.
159. நவை - குற்றம். சுவை - காம நுகர்ச்சி. உழைத்தொழில் - தலைவற்கு அருகிருந்து அறம் பேணுந் தொழில்.
160. வேட்டோள் - மணக்கப் பெற்றவள். அல்லாக்க - துன்பமுற. அல்லாத்தல், செம்மாக்க என்பனபோற் றிரிந்து நின்றது. அல்லாக்கச் செய்வர் பிறரல்லர் - அந்நியரால் அலமரும் பெண்டிரைக் காப்பது ஆண்மை யறம் என்ற அருச்சுனனே தான் விரும்பி மணந்த மனைவியை அல்லலுறச் செய்வது ஆண்மையும் உரனுமாகாது.
161. இவ்விருகவியையும் ஒரு தொடர்படுத்துப் பொருள் கொள்க.
162. பொன்மானை……பெற்றாள்’சீதபொன்மானாகியமாரீசன்பின்புஇராமiனயனுப்பிப் பின்னர் இலக்குவனையும் அனுப்பிக் காவலிகழ்ந்திருந்தமையற்சிறைப்பட்டசய்தி யறிக. தன்மான - தன்னை யொப்ப.
163. விது - திங்கள். வேளாண்மை - உபகாரம். பூவோரனையர் பொற்றொடிமாதர் வண்டோரனையர் - கணவர் என்ற அடிகளையோர்க. மதியென்று கருதி மலர்கின்ற குமுதத்தை (அல்லியை) வஞ்சிக்கத்தக்க அழகு வாய்ந்த முகமென்க. மரை முகம் - தாமரை யொத்தமுகம், எனத் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க; துப்புறழ் தொண்டைச் செவ்வாய் என்ற சிந்தாமணிச் செய்யுளிற் போல. கவல்கூரும் - கலலை மிகும்.
164. தமிழ் மாதர் விரல் சுட்ட என்பது பேசற்கஞ்சி விரலாற் சுட்டிப் பழிக்க என அருச்சுனன் கொடுமை கூறியது.
சிலரும் பலருங் கடைக்கண் ணோக்கி
மூக்கினுச்சிச்சுட்டுவிரல்சர்த்தி”
என்ற eற்றிணைப்gட்டினைxப்புneக்குக.
168. பணி இறவாமை கடன் - கட்டளை fடவாதிருக்கும்fற்புக்fடன்.jzªJ - பிரிந்து. ஆரும் மகிழ்நற்… அறிவிப்பை இந்திரப் பிரத்தத்தில் பிற மனைவியரோடு நிரம்ப மகிழ்ந்து தன்னை மறந்திருந்த அருச்சுனனைத் தான் மறக்கலாற்றாத தன் காதற்றன்மை கூறுகின்றாள்.நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டேமால் என்னும் சிலப்பதிகார அடி சிந்திக்கத்தக்கது.
169. இக்குமொழி - கருப்பஞ்சாறு போன்ற இன்சொல். கொண் கன் - கணவன். தும்பி - வண்டு.தும்பிக்கு …. உண்ணல் போல் இதனுடன் வண்டேயனையர் மாந்தரென்பது, வண்டே யுரைத்த பழமொழி என்ற பெருங்கதையடிகளை யொப்பிடுக.
பல பெண்டிர்பாலும் நலந்துய்க்கும் பரத்தைமையுடைய காதலனைத் திருத்துவதரி தெனினும், நட்டாரை நட்டாற்றில் நழுவவிடுப்பான் என நல்லார் நவிலும் பழிச்சொற்கஞ்சி விலக்கும் நோக்கத்தோடு அவனுக்கு அக்குறையை மனங் கொள்ளக் கூறுதலை மாரியிடம் வேண்டினாள் என்பது குறிப்பு.
170. இவ்விரண்டனையும் ஒரு தொடராகக் கொண்டு பொருள்
171. காண்க. தோம் - துற்றம். சுனைநீல…… மலர்நெஞ்சு சுனையில் நிற்பதால் வாடாத நீலமலர் போன்ற பரத்தையர் விழிகளாகிய வண்டு பொதுவாக நுகரும்படி மலர்கின்ற உன் நெஞ்சு தோம் அற்று எனை நினையுங்கொல் அத்தகைய பரத்தமை யொழுக்கக் குற்றம் நீங்கி என்னை நினைக்குமோ என்று தலைவி வினவினாள். யார்கொல்பிறர் நம்மில்…… என்றவன் சொல்ல – நினைப்பவர் நினைக்கப் படுபவரினின்றும் வேறாதல் வேண்டும்; நாம் ஈருடலோருயிர்க்காதலராதலின் ஒருவரை மற்றொருவர் நினைப்பதேன்? நீ யுன்னை மறக்கக்கூடுமெனில் யான் உன்னை மறத்தலுங் கூடுமென்றான். தன்னை மறத்தலுங் கூடுமென்ற தலைவன் சொல்லளவிற்கே தலைவியழ. எனை விட்டுனினைவுற்றதெண்ணாய் கொல் என முத்தியிழவே னெனா - என்னை அறமறந்து உன்னையே நானாக நினைப்பன் என்ற என் உள்ளக் கருத்தறியாமல் என்னை நினைத்து உன்னை மறப்பேன் என்றது போற்கொண்டு அழுவது முறையா எனக்கூறி என்னை முத்தமிட்டு இனி யுன்னை இழக்கமாட்டே னென்றானாக. முத்தியிழவேன் என்பதில் எனக்கு வீடுபேறாகிய உன்னையிழக்க மாட்டேன் என்ற குறிப்பும் தோன்றும்.
172. தனவென்று - தன்னை வென்று. வைப்பு - நிதிப்பொருள். முன்பாட்டில் இழவே னெனா என்ற தொடரை இப்பாட்டில் அணைத்தானவன் என்பதனோடு கூட்டி முடிக்க.
173. தப்பின்று இரண்டு ஒன்று எனல் - இருபொருள் ஒன்றாகக் கலத்தல் கூடு மென்றமட்டில் தனக்குச் சம்மதம். எனில் ஒன்றெனல் மிக்க தவறாகும் - கலந்தாலும் இரண்டில்லாமல் ஒரே பொருளாகி விடுவதாகக் கருதுவது நிரம்பக் குற்ற மாகும். அப்பொன்றும்உப்பென்ன……..வீடேது’ -நீரிற் கலந்த உப்பின் வண்ணம் வடிவு, முகத்தலளவு முதலிய குணங்களை யிழந்து நீரளவிற் கரைந்து நின்றாலும், நீரிற்கு உப்புசுi வதந்துநிற்கும். அவ்வாறு உப்பும் நீரும்போலக் காதலால் இரண்டறக் கலப்பினும் காதலர் ஒருவரேயாய் விட்டதாகக் கருதல்கூடாது. ஒருவரேயாவரெனில் அக்காதலர் ஒருவரை யொருவர் காமுற்று மகிழ்தல் கூடாதாகும். தன் தன்மை கருதும் உயிர்க்கு ஆனந்தம் அரிதாகும். இறைவனின் உயர்வை நினைந்து மறவாது வழுத்துதலில் உயிர் நிரதிசய இன்பம் அனுபவிக்கும். அதுபோல் பல பண்புகளால் ஒத்த காதலர் தம்மை ஒத்தாரெனக் கருதாமல் ஒருவர் மற்றவரைப் பரபரம் உயர்ந்தாராக மதிப்பதால் மட்டும் இன்பம் நிலைபெறும் என்ற தத்துவமும் இப்பாட்டில் விளக்கப்படுகிறது.
174. திரு, நிலையாகும், என முடிக்க. மறை - இரகசியப் பொருள். இக்குளகச் செய்யுட்களில் இரண்டறக் கலக்கும் இன்பத்தைத் தம் காதலொருப் பாட்டுக்கு உவமை கூறித் தலைவன் பாராட்டினான். அக்காதற் கலப்பை யேற்று அதற்கு வட நாட்டார் கொண்ட கேவலாத்துவிதப் பொருண்மையினை மறுத்துத் தென்னாடுடைய சிவனையே போற்றும் சித்தாந்த சைவ அத்துவித வுண்மையை வற்புறுத்திக் காதலர் அவ்வாறு கலத்தல் வேண்டுமெனத் தலைவி எடுத்துக் காட்டினாள்.
175. முத்தியீதுண்மை என்ற தொடர், முத்தமிட்டு, இதுவே உண்மை எனவும், இதுவே முத்தியென்பதுண்மை யெனவும் இருபொருள்பட நிற்பதறிக. மெய்கண்ட தமிழன்பு மெய்ம்மை யாகக் கண்ட தமிழ்க்காதற் றிறத்தோடு மெய்கண்ட சைவசித் தாந்த முத்திறத்தையும் இத்தொடரிற் சிலேடையினமைத் திருத்தல் காண்க. தொன்றே யென்பது இவ்வுண்மைகளைத் தமிழர் பண்டே கண்டாரென்றும் வடவாரியனான அருச்சுனன் அதுவே தூய்தென்றும் பாராட்டித் தொழுதான் என்பதாம்.
176. இன்னுலுக்கிறுதி - துன்பத்தைப் போக்குநெறி. கவை - கவர்த்தல்.
177. நெஞ்சில் பொறித்து - உள்ளத்திற் படமெழுதி. காணிலாள் - காணாள்.
178. கொன் - வீணே; ஐகாரம் பெற்றுக் கொன்னையென நின்றது. இறவாப்புத்தேள் கொடுநிலை - இறவாத தேவர்க்குரிய கொடிய நிலையைக் கொடுத்தாயென வெறுப்பினா லிகழ்ந் துரைத்தமை யறிக. காதலனைப் பிரிந்தும் உயிர்வாழ நேர்தலால், இறவாமை அவட்குக் கொடு நிலையாயிற்று.
179. மேனியில் அணியும் முத்துமாலையையும் சந்தனக் கலவை யையும் வீசும் திங்களொளியையும் நோகின்றாள். மென்கலை தெரியாய் - காதற் செவ்வியினியல் முதலிய நுட்பங்களை யறியும் உயரறிவில்லாத நீ. நீ நித்த மெலிவிடை நாணிலாக் கயவர்போலப் பகைமை மேவிப் புண்கணை பொழியும் வேள் எனக்கூட்டிப் பொருள்கொள்க. புன்கணை பொழியும் வேள் - புல்லிய அம்புகளைச் சொரிகின்ற மன்மதன். புலம்பு - தனிமை. மெலிவிடைப் பகைமை மேவல் கயவர் தொழிலென வறிக.
180. கூடலிற் றனிமை - நான்மாடக் கூடலிற் றனக்குற்ற தனிமை. எக்கர்க்கூடலை யிழைத்தல் - மணற்றிட்டில் கணவன் வருதல் வாய்வதோ எனக் குறிகாணும் பொருட்டுக் கூடற் சுழி யிட்டுப் பார்க்கின்ற வழக்கறிக. வாடலை - நீவாடுதல் வேண்டா. வன்புரை - வற்புறுத்து முரை.
181. ஆம்பற்பண் தமிழிசைமரபிற் சிறந்த ஒருபண். சாதலிற் பிழைப்புக்காணத்தகும். வழி - சாதலினின்றும் பிழைத்தல் பெறும் வழியென்றும், சாதலே வாழ்வு பெறும் வழியென்றும் இரு பொருள் கொள்க. சாவது தான் வாழ்வென்று தானம் பல செய்து என்ற சிலப்பதிகார அடியை நோக்கிக் கொள்க.
182. பெண்மை யென்ற சொல் அன்பையே வாழ்வாகப் போற்றும் பெயராகும்; அங்ஙன மாகிய இவ்வுண்மையை ஆண்மக்க ளுணரார். ஆதலால் அவ்வாண்பாலார் தாம் விரும்புவ பலவற்றிடைக் காதலுக்கு ஒரோவோர் பொழுது ஈந்து பிற பொழுதிற் பிறவற்றிற் கருத்தைச் செலுத்தா நிற்பரெனக் கூறியவாறு அறிக.
183. காட்சிக்கின்பந்தரும் அவன் வடிவைச் சுதைமண்ணாலும் இழைத்தமைத்த மரத்தாலும் கல்லினிழைத்த வடிவத்தாலும் அமைத்துக் கொள்ளாது, என் கண்ணகத்தே பதித்து வைத் தேன்.
184. இதனொடு தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே காமத்துக் காழில்கனி என்ற திருக்குறளை யொப்பிட்டு நோக்குக.
185. கழல்தருங் காளை - வீரக்கழலை யணிந்த காளைபோல்வான். பாலை – பாலை யாகிய நிலம் என்றும், பிரிவொழுக்கம் என்றும் இரு பொருள் கொள்க. இதனால் தண்ணிலமாகிய தமிழ கத்தின் வேறுபட்ட வெந்நிலமாவது வடநாடெனத் தெளிக.
186. கடலிலாநாடு - பாண்டவர் நாடு கடலில்லதென அறிக. பெண்டிர் கண்களாகிய - கடல்களைத் தூர்க்கும் தன் மேனி யெழிலாகிய மாரியைப் பொழியும் அருச்சுனன் என்க. கார் ஆகுபெயராலீண்டு அருச்சுனனைக் குறிக்கும். என் உள்ள மாகிய மலர் உலர்கின்ற தன்மையை மாற்றத் தான் போது கின்ற வரத்தை யருளாத கொடுமை ஏன்? என்று வினவிய தாகக் கொள்க.
187. எனையரும் - யாரும்.
188. குடில் யாரும் பஞ்சவர் - பாண்டவர் ஐவரும் ஒரு சேரப் பஞ்சவர் எனப்பட்டம் பெறப் பாண்டியர் குடியில் ஒவ்வொருவரும் பஞ்சவர் என்ற பெயராற் சிறப்பர் என வேறுபாடு தோற்றுவித்தமை யறிக. பரவை கால்படிதல் -கடல் கால் கழுவுதல். விஞ்சை - விஞ்சையராகிய தேவகணத்தர் - இமையத்து மீன் பொறித்த பாண்டியர் செய்தியும் சிவபெருமானைத் தடாதகைப் பிராட்டியார் தன் இனிய நகையால் வென்று மணம் புரிந்து கொண்ட செய்தியும் அறிக.
189. என் கற்பு அறம் காழ்த்த உள்ளம், தலைவன் தவற்றை நீ கொண்ட காதலாலே பொறுக்க என்று அடிக்கடி வற்புறுத் தலாலே பெண்மையின் உயர் புகழுக்கு ஊறுபாடு ஆகும் என்று நான் சினங் கொள்ளேன். கோது - குற்றம். குற்ற மல்லாற் குணத்தைப் பொருந்தான் என்றபடி. கோப்பெருந் தேவிபோலச் சாதலாலுய்வன் - பாண்டியன் நெடுஞ்செழியன் பெருந்தேவிபோல உயிர்போக்கி வாழ்வு பெறுவேன்; அதனால் தணந்தவனை (பிரிந்த அருச்சுனனை)த் தெறவும் வல்லேன் என்றாள்.
190. வீரத்தமையன் - தருமராசன்.
191. கடவுட்குக் கார் முத்தொழிலான் ஒத்தலின் கடவுட்கார் என்றார். கடவுண் மாமழை யென்றார் திருக்கோவையார் கொளுவினும். பாக்கம் - பக்கம்; கடற்பக்க மெனினுமாம்.
192. உழுவல் - தொடர்பாடுடைய அன்பு. இன்னல் விலகுமாறு - துன்பம் நீங்கும்படி.
193. முகில் சிறையினின்றும் நீங்கிய பேறு இவளாலாதலின் இங்ஙனம் வழுத்திற்று.
194. தளைபரிந்து தறித்தோய் - விலங்கினை அன்பு கொண்டு நீக்கியோய்.
195. சிலை - வில். மருந்துமொழி - அமிழ்தனைய இன்மொழி. ஊர்வசியின் மாலையினை வேண்டாது நீத்தது பாரதத்தா லறிக.
196. எல்வளைகை யிறப்ப மெலிவு - ஒளி பொருந்திய கைவளை கள் கழலுமாறு உண்டாய மேனி மெலிவு. துயர - துயர் கொள்ள.
197. எல்லை கரி - சூரியனே சான்று. இறை - தலைமகன். வல்லை - விரைவு. தொல்லை யுலகு - பண்டைப் பாண்டி நாடு.
198. அற்ற - உரிய செவ்வி. பொன்றல் - கெடுதல். பொய்யாவானம் - தவறாது பெய்யும் முகில்.
199. இக்கவியின் முதலிரண்டடிகளுள் இந்திரன் ஆரம்பூண்ட தெய்வப்பாண்டியன் சரிதையும், கடல் சுவற வேலெறிந்த பாண்டியன் சரிதையும், முகிலைத் தளையிட்ட செய்தியும் குறிக்கப்பட்டமை ஒர்க. விழியினாள் விடுக்க - விழியாள் தளை விடுக்க, தூதுவிடுக்க என்றும் இருபொருள் கூறுக.
200. பதிதணந்திட - தலைவன் பிரிதலால். தன் கூடற்பதி கசந்தவள் - தன் நான்மாடக் கூடற்பதியை வெறுத்தவள். மதியானது கனலாற் காய்வதற்குக் காரணம் கற்பித்தவாறு.
201. ஈச்ச மரமும் பொன் பொதி பூவையுடைய புன்னையும் மணம் ஏந்திய தாழையும் அடும்பும் எவ்விடமும் பொருந்தியுள்ள மணற்பாங்கரில் அன்றில் தன் பெடையொடு நிலவி னிழலிற் களிப்புறுங்கால் இப்பாண்டியன் புதல்வி மயங்குவாள்.
202. தீரம் - கரை. மூரல் - புன்முறுவல். பரவை - கடல். தவளம் - வெண்மை. உவளம் - உணவு. உழக்க - வருந்த. அவல் மயல்வீறு நஞ்சை - அவள்பால் காமத்தா லெழுந்த மயக்கம் மிகும் நஞ்சை. அழிக்கும் அன்பமுதப் பேறு - போக்கவல்ல மருந்தாகிய நிதி பவளவாய்த் ……மூuš’ வாயாகிய கரையில் காதலாகிய உடல் நாள்தோறும் கொழிக்கக் கூடும் முத்துக்கள் போன்ற பற்களின் அழகோடு கூடிய புன்முறுவல். அத்தகைய அமுதப்பேற்றை அவனுக்கு மயல்வீறு நஞ்சை அழிக்குமாறு தன் முத்தார் மூரல் தரத் தலை யளித்தாள் என்று கூட்டி முடிக்க.
203. நனவுக் காலத்து உன் நினைவால் வருந்துவள். உறங்கின் கனவுகள் அடர்த்தலால் நடுங்குவள். வீழ்வார் - காதலர்; காதலர் அன்பின் மெய்ம்மையை ஐயுறாதார்க்குக் காதலின் கசப்புங் கற்கண்டேயாகும் என்பதை இவள் இயல்பினாற் கண்டேனெனப் பொருளறிக.
204. கற்பகத்து இறை - இந்திரன். கைதவன் - பாண்டியன். கன்னித் தற்பரை கோயில் - கன்னியாகுமரித் திருக்கோயில். உன் தவம் - உன் தவமனைய மனையாள். அவன் அன்பும் அறமும் குழைத்தாற் போன்ற ஒப்பற்ற பிள்ளை அமிழ்தெழு தமிழில் அன்னையின் கற்பறத்தைக் கூறக் கண்டேன்.
205. பொற்பு, அறிவு, உரனால் நின்னையும், பொறை, அளி, பெட்பு ஆகிய சால்புகளால் தன் அன்னையையும் வெல்லும் நின்புதல்வன் மழலையை யென்க. கற்பினிலும், அன்பினிலும் தன்னின்மிக்காரையும் ஒப்பாரையும் பெறாதவள் என்க.
206. பொற்பாண்டில் - பொன்னாலமைத்த விளையாட்டு வண்டி. முத்தப்படகு - முத்தாற் செய்த விளையாட்டுப் படகு.
207. காதற் பௌவம் - கடல் போன்ற காதல். மூன்று திரைக்கடல் - கிழக்கு தெற்கு மேற்கு என்ற திசைக்கணுள்ள கடல்கள். எழிலி - மேகம்.
208. துவர் - பவளம். செவி மடுத்து - கேட்டு. காதல் நந்துதலறியாத - காதல் குறைதலில்லாத.
209. வது - தலைவி. மம்மர் - மயக்கம். வஞ்சர் பொதுவியலை என்பாற் புணர்த்தி யென்க. புனைவது - மிகுத்துரைப்பது.
210. அவள் சால்பு, செவ்வி, தூயகாதல் முதலியவற்றை அவள் நாட்டுக்கும் என்னாட்டுக்கும் இடைக்கிடந்த சேய்மையும், என்பக்கலுள்ள பிற மனைவியரும் உயர்த்துக் காட்ட. தாய்மை - ஈண்டுக் குற்றங் காணாத் தகவும் அன்பும் என்றறிக.
211. அருச்சுனன் துரோபதையை வில்லானும், சுபத்திரையை இன்சொல்லானும் வென்று மணந்து கொண்ட செய்தி பாரதத்தாலறிக. காதல் முல்லை - அன்பு கொண்ட கற்பறம். ஆர்வலர் - அன்பர். ஆயம் - மகளிர் கூட்டம்.
212. அன்பு, நட்பு, காதல் முதலிய நிலைகட்கு அரும்பு, போது மலர்கள் உரிய ஒப்பாதலை நன்கு நோக்குக. ஏழையென்றது 201ம் செய்யுளை நோக்கி.
213. தந்தையும் தன்னையரும் தனயரும் தம்மையாள நாடொறும் தம்முரிமையின்றி அடிமை கொண்டு வாழும் பெண்டிர் வாழ்வு தமிழகத்தில் வழங்கப்பெற்றதன்று. பெண்பாலாரும் ஆண்பாலாரும் அகவொழுக்கம் புறவொழுக்கங்களில் முறையே தலையாய ஆட்சியுரிமை பெறுவர். நிரனிறைப் பொருள்.
214. மிதவை - தெப்பம். வடநாடு தென்னாடுகளின் வேறுபட்ட கோட்பாடுகளை விளக்குவது ஓர்ந்து கொள்க. தொழும்பறம் - அடிமையறம்.
215. கடனென்ப நல்லவை யெல்லாம் என்ற திருக்குறட் கருத்தை யொப்பிடுக.
216. அற்பு - அன்பு, எற்பிரிந்து - என்னைப் பிரிந்து. இனைவதே - வருந்துவதா?
217. அகழ்ப்புறத்து - அகழ்க் கிடங்கின் புறத்தே. திகழ்திரு என்பதில் எதுகை நோக்கித் தகரவொற்று விரிக்கப்பட்டது.
218. ஆய்மயில் - அழகிய மயில். அவதி - காலவெல்லை. பேய் மயலமரிற் பேணும் பீழை - பேய் மயக்கத்தைப் போரிற் கொள்ளும் என் துயர். வேய்மயல் கொள்ளும் தோள் - மூங்கிலொப்பாகாமையால் மயங்கும் தோளாள்.
219. வில்லற வேள்வி - வில்லாண்மைக்குரிய கடப்பாடுகள். சேல்விழி சேவகம் - சேல்போன்ற விழியாளுக்குச் செய்யும் காதற் கடன்கள்.
220. வின்மற வீறு வீழ்வார நெஞ்சினன் - வில்லாண்மைச் சிறப் பினை விரும்பும் அன்பு கொண்ட உள்ளத்தான்.
வாழ்த்துப்பா
ஏர் - ஆகுபெயராய் உழவை யுணர்த்தும்
மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி
வாழ்த்தியல்
பேசும் மனிதருடன் உலகில்
பிறந்து தவழ்ந்துநடந் தோடி,
வீசும் பொதியைவளி1 ஊர்ந்து,
வினையும் நினைவுகளும் வேண்டும்
தேசும் இயலிசையும் வளரத்
திகழும் தமிழணங்கை, அறிவு
கூசும் அழகிளமை இனிமை
கூர்2 அறக் கிழத்தி3 யைத் தொழுவாம். (1)
வாழ்க உலகு, அறமும் ஓங்க,
வறுமை பசிபிணிகள் நீங்க,
ஆழ்க அழிவுதரு தீமை
அச்சம் கொடுமைவஞ்சம் அழிக,
வீழ்க பருவமழை, என்றும்
விளைக உணவு பொருள் இன்பம்,
சூழ்க தமிழினொளி எங்கும்,
துன்பம் தொலைக, தொழில் உயர்க (2)
நூல்
நிலமும் பொழுதும்
வானம் வறப்பினுங் குன்றாத
வளங்கெழு தென்பொதியை வாரம்1,
கானம் கனிகளொடு தேனும்,
கரும்பொடு நெல்வயலும் ஈனும்;
தானம் பெறுதல்அறி யாதார்,
தாளண்மை வாழ்வுகக்கும் தமிழர்
மானம் கமழ்மலை வளாக
மடிவளர் மங்கலத்தொல்குறிச்சி. (1)
ஏலம் கிராம்பு கருவாயும்2
சந்தனமும் எங்குமணம் நிரப்பும்
கோல மலைவளைந்து நிமிர்ந்து3
கோளில்4 அரண மதிலாக,
நீலத் திரைவிசும்பு விரிக்கும்
நேர்கிழக்கில் ஓர்சிறிய திறவை5
ஓலம் இடும்அருவி யாறே
ஓயா தொழுகிஅகழ் ஒம்பும்.6 (2)
பணத்தைச் சிறிதும்மதி யாதார்,
பசியும் பிணியும்அறி யாதார்,
குணத்தை விரும்புகுடி மடவார்
குறையில் நிறையுடையர் குலவக்
கணத்தும் பிரிவரிய காதல்
களிக்கும் கடவுளரும் கருதா
மணத்தை மகிழ்தமிழர் வாழூர்,
வந்திறுக்கும்7 தைப்பொங்கல் விழவு. (3)
காட்சியும், காதலும்
பொங்கல் பெருவிழவுக் கிரவுப்
பொழுது முழுதும்உறங் காமல்
எங்கும் புதுக்குபவர் ஆர்ப்பும்
இரையும் பெருமழையி னார்ப்பும்
கங்குல் இருபொழுது1 கழியக்
கடைசி விடிவதன்முன்2 வானில்
மங்கல் சிறிதகல, மகளிர்
மழையும் விடக்குளிக்கச் சென்றார். (4)
வெள்ளி முளைத்துவிடி யாமுன்
விழவுத்தை நீராட விரைந்தேன்;
அள்ளத் திரளும்இருட் சோலை
ஆற்றில் இறங்கஅடி வழுக்கி
வெள்ளச் சுழிபறித்த குழியில்
விழுந்து புதுப்பெருக்கின் வேகம்
தள்ள ஒழுகுமெனைச் சுழியில்
தாழாமல் ஏந்திவெள்ளம் நீந்தி, (5)
கையில் மகவெடுக்கும் தாய்போல்
காளை ஒருவனெனைத் தாங்கி
நொய்ய அரைக்கும்நுரைத் திரையால்,
நொறுங்கிச் சரிந்தகரை ஏறிக்
கொய்யக் குனிந்துமலர் கொடுக்கும்
குரவு மரத்தடியில் புல்லில்
பைய நிறுத்திஅயல் படர்ந்து3
பரிவு4 கனிய எனைப் பார்த்தான். (6)
உள்ளம் பதைக்கஉடல் நடுங்க
உரைஒன்றும் ஒல்லாமல் நின்றேன்.
எள்ளற் கரியஎழில் மார்பன்
இனிய உயிரெனக்கன் றீந்தோன்
கள்ளங் கபடமற்ற முகத்தில்
கருணை பொழியும்விழி கலக்கம்
கொள்ளல் எனவுரைக்க, நீத்தம்
குமிழி யெழக்குதித்து மறைந்தான். (7)
கிட்டாமல் பேசாமல் காளை
கிழக்கு வெளுக்கும்அந்த வேளை
தொட்டாண் டெனையெடுத்த தீட்டைத்
தொலைக்கநீர் தோய்வதற்கு விரும்பி
விட்டான் எனநினைக்க, உடனே
விரைந்து மறைய, என்றன் சிந்தை
எட்டாத ஆழத்தில் அவனை
ஏந்தி உடன்நீந்தக் கண்டேன். (8)
கான்யாற்று வெள்ளத்தை நீந்திக்
கரையில் எனைச் சேர்த்தநம்பி,
நான்நன்றி கூறாத பிழையை
நாணென்று கொள்ளாமல் வெறுத்து,
தான்யாதும் பேசாமல் தருக்கால்
தமியன் எனைஇகழ்ந்து விரைந்து
போன புதுமையினை எண்ணிப்
பொருமி அழததென துள்ளம். (9)
நீராடும் ஊரார்கள் காணா
நேராமல் என்மனைக்குத் திரும்பிப்
பாராம லேவினராய தொடர்ந்தான்
’யாரோடுஞ் செராம்ல்
யான்டுக் குளித்தனை? என்றுரைப்பத்
தேராத1 நாண் அலைக்கத் திகைத்துத்
தெருவைக் கடந்துமனை புகுந்தேன் (10)
பொங்கல்விழாப் போட்டி விளையாட்டு
பொங்கல் விழவயர்ந்து விருந்து
புறந்தந் தங்குண்டாடி யிருந்தோம்.
சங்கம் முழங்கஅன்று மாலை
சாத்தன்ஊர்க் கோயிலின்முன் சோலைத்
தங்கி மலைபவர்க்கு வாகை
தருவதைக் காணவிழைந் தேகும்
நங்கையர் கூட்டமொடு நானும்
நடந்தங்கோர் புல்திடரில் அமர்ந்தோம் (11)
எல்லாரும் வந்தமர்ந்த பின்அங்
கிருந்த முதியவருள் முதல்வர்
வில்லாலும் மல்லாலும் நீண்ட
வேலாலும் மிக்கவிறல் காட்டி
வல்லோர்க் குரியமுதல் வரிசை
வாகை விரும்புநரை அழைத்தார்.
சில்லோர் எழுந்தவர்தம் பின்னே
சிறுவன் ஒருவன்எழச் சிரித்தார். (12)
பருத்த உடலினர்தம் வயதால்
பல்லாண்டு மூத்தவர்அங் கிளவல்1
பெருத்த புயங்களிடைப் படர்ந்து
பிறங்கு மெழில்மார்பன் சிரிப்பான்
ஒருத்தன் எழவும் நமைவெல்ல
ஊக்கும்இவன் யார்என் றுருத்தார்;2
விருத்தர் வியந்தனர்நன் மடவார்
விழியில் அவனைவர வேற்றார். (13)
முகத்தின் ஒளிதவழும் மூரல்,
முறுவல் தவழும்எழில் முகத்தில்,
புத்தப் புதுப்புலியை அடர்க்கப்
புகுந்த இளஞ்சிங்கம் போல்வான்
சித்தத் துரன்திகழும் சிரிப்பில்,
செவ்வேள்3 இச்செம்மல்இவன்4 யாரென்
றொத்த வயதினர்கள் எல்லாம்
உவந்து புகழ்ந்தனர்அப் போது. (14)
பல்லோரும் பார்க்கஅவர் முன்னே
பறம்பு1 வளைந்துயரத் திறவை
கல்லாரு முட்கம்பி செறியக்
கட்டி அகன்றாழ்ந்த மடுவில்2
மல்லாருந் தோள்மறவர் இறங்கி
வரிசை முறையில்அங்கு வகுத்த
தொல்லோர் பலகளரித் துறைகள்
தொடங்கித் திறல்காட்டத் துதைந்தார்3 (15)
தலைவன் கணையால் தலைவிக்குக் கண்ணி சூட்டல்
மல்லார்தோள் வல்லார்கள் அசைக்க
மாட்டாத கல்லைவிளை யாட்டாய்
நில்லா தெடுத்திளவல்4 எறிந்து
நெடிய தொலையில்நிலம் குழித்தான்
வில்லால்அங் கோரம்பில் தொடுத்து
விரைமுல்லைக் கொத்தொன்றை விடுத்தான்,
எல்லாக் கிளையவன்என் குழலில்
இறுகச் செறித்துருவ எய்தான். (16)
நல்லார் முகத்தில்அலர்5 நகைக்கு
நரணி முகிழ்க்குமகிழ் மறைத்தேன்.
அல்லார்6 அளகநெகிழ்7 மடவார்
அங்கென்னைத் தங்கண்ணாற் பழித்து,
வில்லோடு நின்றவனை அன்பு
மிதக்கும் விழிகளினால் வழுத்த,8
இல்லாத செல்வம்எய்தி யிழந்த
ஏழை எனஏங்கி இருந்தேன். (17)
மல்லிட்டு வெல்லவாரும், வாளால்
மலைவதிற்9 றலைமைகொள் வாரும்
சல்லி எருதுபிடிப் பாரும்,
தத்தம் துறையில்திறல் காட்ட,
வல்லார்க்கு வாகைமலர் மாலை
வரிசை யொடுமுதுவர் வழங்க,
எல்லாரும் ஆர்க்குமிடை நெடிய
இரும்புப் பஞ்சர1 மிழுத் திறுத்தார்,2 (18)
ஆர்ப்போடு பேச்சரவம் அடங்க
அமைதியுற் றனைவரும் அமர்ந்தார்.
பார்ப்போர் மனம்பதறத், திடரில்
பாவையர் பதைக்க, அயில்3 மறவர்
தேர்ப்பாண்டில் கூடேறிச் சீப்பைத்4
திறக்க உறுமிவரி வேங்கை
வேர்ப்பார்முன் முட்கம்பிப் படுகர்5
வெளியில் குதித்துலவக் கண்டோம். (19)
வாலை அடித்தகன்ற வாயில்
வளைந்தவன் எயிறுகள் தோன்ற,
மாலைத் தழலெனக்கண் அழல,6
வரிப்புலி வெறித்துநின் றுறும,
மேலை அமர்ந்தமுது பெரியார்
மீளி விடலையரை நோக்கக்
காலை எனை அளித்த காளை
கதுமென7 நான்அஞ்ச எழுந்தான். (20)
கல்லாரு முட்கம்பி செறிந்த
காவல் மடுவில்8நடு நின்று
பல்லார் பயந்தொருவப் புலிதான்
பாயப் பதுங்குமுனம் பாய்ந்தான்.
பொல்லாப் புழைவாயில் வேலைப்
புதைத்துப் புறம்உருவத் தரையில்
மல்லாந் தலறஅதன் தலையை
மண்ணோடு தைத்தூன்றி மலைந்தான்.9 (21)
எல்லாருங் கைகொட்டி ஆர்த்தார்.
எள்ளும் சிறியசெயல் இழைத்த
கல்லாத கள்வன்என வெள்கிக்
காளை முகம்கவிழ்ந்து நின்றான்.
சொல்லாத காதல்களி கூரத்
தோன்றாத வாய்முறுவல் ஊர
நில்லாதென் நெஞ்சில்நிறை நெகிழ
நிலையாத மால்1 நீத்தத்2 தாழ்ந்தேன். (22)
மாலை மயங்கமதிப் பிறைமேல்
வானீல வெள்ளத்தில் நீந்திப்
பாலைப் பழித்தொளிர்வெண் பளிங்குப்
படகாய் முகில்கிழிக்கப் பார்த்தேன்;
ஆலை3 அரவமொடு புள்ளின்
ஆர்ப்பும் அடங்கஇருள் அடரும்
சாலை வழித்திரும்பி விரைந்தூர்ச்
சதுக்கம்4 கடந்துமனை புகுந்தேன். (23)
மனையில் தலைவியை மாமி பழித்தல்
வீட்டிற் புகுந்தஎனை மாமி
வினவும் கிழவியர்கள் சூழ
நாட்டுப் புறத்தொருவன் சிறுவன்,
நம்மமூர் மறவர்பொரத்5 துணியாக்
காட்டில் பிடித்தபுதுப் புலிவாய்க்
கைவேல் புதைத்ததனைத் தரையில்
மாட்டி வதைத்தகதை புலையா6?
வல்லார் நம்ஊரவருள் இலையா? (24)
வீரன்என் றெல்லோரும் புகழ
விளங்கும்உன் அத்தான்அங் கிருந்தூர்ப்
பேரைப் பிறன்பறிக்க விட்டுப்
பித்துப் பிடித்துறங்கி னானா?
சூரன் புதியன்எனத் துணிந்தோ
சூட்டும் அவன்மலரைப் புனைந்தாய்?
ஊரார் சிரிக்கவகை நினைந்தோ
உவர்த்த1 பழிகுடிக்கு வனைந்தாய்? (25)
மாமியைத் தலைவியின் சித்தி மறுத்துரைத்தல்
என்றென் செவிசுடுஞ்சொல் மாமி
இயம்ப, இடிகேட்ட அரவென்
றொன்றும் விளங்காமல் உளையும்2
உள்ளம் உடையவிம்மி அழுதேன்.
நின்ற கிழவியருள் ஒருத்தி
நெருங்கித்தன் னெஞ்சிலெனைப் பொருத்தி,
இன்று புலியடர்த்த இளவல்
இனத்தைத் திறலை3 எவர் இகழ்வோர் (26)
மன்ற முதுவர்தமுள் முதல்வர்
மார்போ டணைத்தவனை வாழ்த்தித்
தொன்று தொடர்புபல சொல்லித்
தோழமை கொண்டாடக் கண்டோம்
வென்றி விறல்விளங்க விடலை
வில்லிற் கணைவிடுத்து முல்லை
சென்றிச் சிறுமிகுழற் செருகச்
செய்த திறலைஎவர் வியவார்? (27)
வள்ளி தனைமுருகன் விரும்ப
வானத் தரசன்மகள் வெதும்பிக்
கள்ளி யெனப்பழித்த கதைபோல்,
காளை கணைதன்னைக் கழிக்கத்
துள்ளித் துடிக்கும்ஒரு சிறுக்கி
தூயமனத் திவளைத் தூற்றில்.
எள்ளி இகழஇவள் ஆளோ?
என்று கழறிஎன்கண் துடைத்தாள். (28)
அவ்வேளை யில்வெளியில் ஒளியும்
ஆர்க்கு முரசொலியும் எங்கும்
செவ்வே தெருநிரப்ப, மக்கள்
திரண்டு பரபரக்கும் ஆர்ப்பின்
கவ்வை1 செவிநிரப்ப, அவ்வை2
கடிதில்முன் மாடம்எனைச் சேர்த்தாள்.
செவ்வேள்என் நெஞ்சமர்ந்த செம்மல்
தெருவிற் பவனிவரக் கண்டேன். (29)
தலைவன் உலாவரத் தலைவி மலர் பெய்தல்
வீதி நிறைந்திளைஞர் ஆர்க்க,
மேடை மகளிர்மலர் போர்க்கச்
சோதி நிறைந்தமுகத் தறிவு
சுடரும் விழிகளில்ஓர் துயரம்
ஓதும் பனிப்படலம்3 படர,
ஊரும்பால் வெள்ளைநிறப் பரியின்
மீது முறுவலுடன் செம்மல்
வீறு மிளிரவலம் வந்தான். (30)
அருகு வரவும்அவன் அம்பென்
அளகம் செருகுமலர்க் கொத்தை
விரகு நினையாதென் கைகள்
விரைந்தங் கெடுத்தவன்மேல் வீசப்
பெருகும் உவகையொடு நின்றேன்
பின்வந்தம் மாமி4 என்கை பிடித்துக்
கருகு முகம்கனலக் கழறி,
காம வெறிபிடித்த கள்ளி! (31)
மாமி வசவு
தெருவில் திரிபவர்கள் சிரிக்கத்
தெரியாச் சிறுவனுக்குன் தலைப்பூ
உருவி உதிர்த்துவந்து, நாணும்
ஒழித்து நகைப்பின்,அவன் உன்னை
மருவி மகிழ்வன்என நினைந்தோ
மலரும் புனைந்தனை என் றிகழ்ந்தாள்.
வெருவி1 அலமருமுன் முதியோள்
வெம்பித் தெழித்து2 மறுத் துரைப்பாள் (32)
விடலை கணைகுழலிற் செருகி
விட்ட மலர்க்கிவளை வைத்தாய்;
தொடலைக்3 குறுந்தொடி4 பின் அதைமுன்
தொடுத்த கணையினன்முன் எறிந்தால்
நடலை5 உடனதற்கும் நலிவாய்;
நாவில் நரம்புமிலை உனக்கு,
கடலை நிகர்த்தெவரு மார்த்துக்
களிக்கும் இடையுனக்குக் கடுப்பேன்? (33)
என்ற முதியவளை மாமி,
எங்கே இதுவரையும் இருந்தாய்?
சென்ற உன்அண்ணனொடு நீயும்
செத்தீர்கள் என்றுதிதி கொடுத்தோம்;
மன்றிற் புதுவன்மலர் சூட
மால்கொண் டதைமகிழ்உன் மகளும்
நின்ற பழிகுடிக்குத் தந்தாள்;
நீயும் அதைப்புகழ வந்தாய். (34)
ஈன்றோர் இருவறையுந் தின்றாள்,
இருந்து பழிவளர்க்க நின்றாள்;
சான்றோள்இப் பெண்மணியின் தாய்என்
தமையர் தனைஇகழ லானாள்;
ஆன்றோர் குடிப்பழியை அஞ்சி
அண்ணர்உன் அக்காளை அகற்றத்
தோன்றா துயிர்துறந்து மானம்
தொலையா மலேநிறுத்தி இருந்தார். (35)
கைமை6 நிலையடைந்துன் தமக்கை
கட்டுக் கடங்காமல் நடந்தாள்
பைமை1 நிலைக்குரிய விதவை
பருவ மடந்தைஎனப் புனைந்து
வையப் பழிஇகழ்ந்து வாழ்ந்து
மாணா முடிவடைய, நீஎன்
கையில் இவளைவிடுத் தூர்மேல்
காணாம லேஒழிந்து போனாய். (36)
நானிந்த நாதியற்ற2 நாயை
நட்போடு சீராட்டி வளர்த்தேன்;
தானுந்தன் தாய்மாரைப் போலே
தலைதடு மாறிநன்றி இன்றி
மானம் அழியஉயிர் வாழ
மனது துணிவள், அறம்வீழ;
வானும்3 வறக்கும்இனி நாட்டில்,
வாழ்வேது மானமுடை யார்க்கு? (37)
வானாட்டு மாட்சிசொலி, மண்ணில்
வாழ்வுரிமை பெண்களுக்கு மறுக்கும்
தாநாட்டு நூல்4 கள்என இகழ்ந்து
தக்கோர் அரசுமொழி புகழ்ந்து
மாநாட்டு மேடைகளிற் பேச,
மாண்பு பெறநினைத்து மயங்கி
மேனாட்டுக் கல்விஉயர் வென்று
விரும்பி இவள்படிக்க விட்டேன். (38)
சீனத்துப் பெண்ணாகி, யாரும்
செய்யாப் புதுமைகளில் திளைப்பாள்;
வானத் துருமாறும் முகில்போல்
மாறிக் குழல்வேய்ந்து களிப்பாள்;
கூனக் குறைஉடைகள் தரிப்பாள்;
கூட்டத்து நாணாமல் சிரிப்பாள்;
ஈனத்5 துறையில்இவள் அளவுக்
கிறங்கு பவரிலை என்றி ரைந்தாள். (39)
மாமியைச் சித்தி வசை கூறல்
காது கசக்கும்அவள் வசவைக்
காயாமல் வாய்சிரித்து முதியோள்,
போதும் உனதுபுகழ் முழுதும்
பொய்யா துரைப்பன்எனப் புகன்றாள்;
ஏதும் அறியாஇச் சிறுமி
இறவா திருப்பதுன தருளா?
தீதிவளைச் சேராமல் தாதை
செய்ய மரணமுறித்1 தெருளா?2 (40)
காதல் மகள்தனக்குப் பின்உன்
கையில் மரிப்பளெனக் கருதிச்
சாதல் எதிர்பார்த்துன் அண்ணர்
தாம்ஈட்டி வைத்தபெரும் பொருளை
வாதில்3 முறிவகுத்த முறையால்,
வயது நிறைந்திவள்தன் வேட்கை
மீதில் மணப்பின்இவட் காகும்;
வீயில் மருகனுக்குப் போகும். (41)
இந்த முறிஇருப்ப தாலே
இவளை வதைத்திலை நின்மகனாம்
மந்த மதிக்கிவளை ஒருநாள்
மணக்க நினைத்தனை;இவ் இளையோள்
சொந்த வயதுநிறை நாளும்,
தூயள் உளம்விரும்பும் வேள்தான்
வந்து மணங்கோலும் நாளும்
வாய்த்ததித் தைப்பொங்கல் விழவில்4 (42)
மழவு5 கெழுமி6 மலர் பருவ
மங்கை உனைஉனது பெற்றார்
விழையும் விலைகொடுத்தென் தமையர்
வேட்க விரைந்தன்று விற்றார்
கிழவர் கொழுநர்பண மணந்து,
கேளென் றிளையவரை நெருங்கத் -
தழுவ மறுத்தபுரை1 மறவாய்,
தமையர் மனத்துறவு சுருங்க. (43)
காதைக் கடித்துனது கணவர்
கடுக்கப் பலதொடுத்து கெடுத்தாய்
சூதை அறியாதென் தமையர்
தூயோர்தன் தம்பியரைக் கடுத்தார்
வாதை பொறுக்காமல் அவர்இவ்
வாழ்வை வெறுத்தகல விடுத்தாய்
ஏதை எடுத்துரைப்ப தினிஉன்
எண்ணற்ற கைதவத்தின்2 பெருமை? (44)
தொழுவில் உழவன்உனைத் தழுவத்
தோட்டத்தில் நின்றஇவள் அன்னை
வழுவில் உளத்தள்அதைக் கண்டும்
மனதில் மறைத்தடக்கி மறந்தாள்
விழும3 மிகுந்துமனம் வெதும்ப
வீணே பலபழிகள் கமத்திக்
கழுவ முடியாஉன் காமக்
கறையை மறைக்கஎணிக் குமைத்தாய். (45)
அழகன் உழவன்உன தன்பன்
அப்பாவி இப்பெண்வளை திருடிப்
பழகிய வண்ணாத்திக் கணிந்தான்;
பறித்ததை வண்ணான்தன் சூதுக்
கழகத்தில் வைத்தாடக் - காவல்
கருப்பன் பிடித்தடித்துக் குருதி
ஒழுகக் கொடிறுடைக்க,4 உழவன்
உன்காதற் காதகக்கட் டவிழ்த்தான். (46)
உங்கள் குலமுதல்வர், இந்த
ஊருக்கு மேமுதல்வ ரோடு
தங்கு மிளவல்பிற னல்லன்;
தாயத்திப் பண்ணைஅவன் உடைமை;
பங்கில்லை என்றதனை முழுதும்
பறிக்க நினைத்துனது தந்தை
முங்கு கடனுக்1 கது விலைபோல்
முறியும் எழுதுவித்து முடித்தாய். (47)
தந்தை இறக்க, அவர் மூத்தாள்
தனயர் இவள்தாதைக் கிறங்கும்
பந்தம் அறுக்கநினைத் தவரைப்
பகட்டி மருந்தருத்திப் படுத்தாய்
அந்த முறையில்அவை இன்றிவ்
அணங்கின் தனியுடைமை யாகும்
எந்த முறையிலும்இங் கினிநீ
இருக்க வழியில்லை, ஒழிவாய் (48)
மடியில் கனம்இல்லை; அதனால்
மனதில் பயமும்இலை எனக்கு
கொடிய வசைமொழிகள் கூறிக்
குற்றம் இலாஇவளைக் குமைப்பை;
இடிஉன் தலையில்விழும் காலம்
இனிமேல் தொலையில்இலை; நாளை
விடிய முடியும்உன தாட்சி;
விழுந்து கழிந்ததுங்கள் மாட்சி. (49)
இடிந்து விழுந்ததுங்கள் சூழ்ச்சி;
இன்றே தொடங்கிற்றுங்கள் வீழ்ச்சி;
விடிந்து விழிப்பவர்தங் கனவாய்
வீணே கழிந்ததுங்கள் நினைவு;
முடிந்து சிறையில்இருள் தேடி
முடங்கி ஒளிந்துமுக மூடி
மடிந்து நெடியதொரு தூக்கு
மரத்தில் அசையும்உங்கள் யாக்கை (50)
நில்லோம் இனிஎதையும் எண்ணி;
நின்னை அழைத்துவரப் பண்ணை
வில்லார் எழிற்பண்டி பூட்டி
மேலாளுங் கூட்டிஎனை உய்த்தார்;
செல்வோம் உன்பாட்டரொடின் றிரவைச்
செலவிட் டிப்பழிகாரி கரவை1
வெல்வோம், நினதுயிரைக் காத்தோன்
விரும்பி வரவேற்பன் உன்னை. (51)
என்னைநின் அன்னையுடன் பிறந்த
ஏமாறித்2 தங்கையென்றுன் மாமி
சொன்னாள்ஓர் உண்மைஅவள் வாழ்வில்
சோரும் துயர்துடைத்துன் துணையாய்
மன்னும்மனை மாண்பொ டின்பம்
வழங்க உன்மாமன்மகன் வந்தான்;
கன்னிஉன் காலில்அவன் காதல்
காணிக்கை வைக்கஎனை உய்த்தான். (52)
நேரில் குறைஇரக்க நெருங்கான்;
நின்மாமி தன்மகனொ டெங்கும்
ஊரில் அலர்3 பரப்பி உன்னை
உள்ளம் வெதுப்புவள்என் றஞ்சி,
பாரில் தனக்குநிகர் இல்லாப்
பண்பன்நின் நண்பருள்வை யென்று
தேரில்தன் வாழ்வொடுயிர் தரிப்பன்;
தேற்றாய் எனில்உடனே மரிப்பன். (53)
வந்த மருத்துவப்பெண் குத்துப்பட்ட தலைவன் சித்தநிலை கூறல்
போவோம் வருவை என்றென் சிற்றாய்4
புகலும் பொழுதொருத்தி புகுந்தங்(கு)
ஆஓஎனஅரற்ற, அத்தை
ஆர்அங் கடித்ததுனை? என்னத்
தேவோ எனத்திகைக்கும் அழகன்5
தெருவிற் பவனி6 முடித் திறங்க.
சாவாய்என உன்மகன் குத்தத்
தாங்கி எடுத்திளைஞர் சென்றார். (54)
குத்தின கத்திபறித் தவனைக்
குடுமிபிடித் துக்குட்டைக் கருப்பன்
முத்திரு ளப்பபிள்ளை யோடு
முணங்க1 அடித்துதைத்த போது,
நத்தி விலக்குபவர் இன்றி,
நாயை அடிப்பதுபோல் பலரும்
மொத்திக்2 குமைக்க3 உரன் முரிந்து
மூர்ச்சித்து வீழ்ந்தனன்என் றுரைத்தாள். (55)
வா,வா எனமுதியள் இறங்க,
வந்த மடந்தைஎனை விரைந்து
போவீர்நம் புங்கவர்உம் பாட்டர்
புனிதர்பொன் மாளிகையிற் புதியர்
சாவாமற் றப்பினது நீர்செய்
நவமென்று சாற்றுவர்அச் சான்றோர்,
நாவால் இளைஞரும்நும் நாமம்
நவின்று தயங்க, இவண் வந்தேன் (56)
என்றாள் உரைஎனது செவியில்
இனிமை உடன்எரியை நிரப்ப,4
நின்றாள்என் மாமி நிலைஎதுவும்
நினையாமல், இவ்விரண்டு படிகள்
குன்றாத ஆர்வமுடன் குதித்துக்
குறியொன்றும் இல்லாதெல் லோர்க்கும்
முன்தாவி வாயிலின்முன் நின்ற
மூடுதிரைப் பண்டியினுள் நுழைந்தேன். (57)
தலைவனைக் காணத் தலைவி,
பாட்டர் வீட்டுக்கு வருதல்
சிற்றன்னை வந்தவளொ டென்பின்
திரையைத் திறந்தேறிப் புகுந்தாள்.
மற்றங்கு வந்தபண்ணை மேலாள்
மாடோட்டி பின்இருப்புப் பெட்டி
உற்றங் கிருந்தவுடன், எருதும்
ஒட்டா துணர்ந்துவிரைந் தோடி
முற்ற முதல்வாயில்1 முன்பு
மொய்ப்போர் விலகவந்து நிற்க; (58)
யாயும்2 அயலவளும் முன்னும்
யானவர்தம் பின்னும்விரைந் திறங்கி,
சாயும் சனத்திரள்அன் றங்குச்
சந்தடி இன்றிவழி விடவும்,
தோயும்பூத் தோரணங்கள் தொங்கத்
துலங்குந் தலைவாயிற் படியில்
ஆயு3 மடந்தையர்கள் விலக,
அகத்துட் புகுந்துநடந் தோமால். (59)
கூடங் கடந்தகன்றங் குயர்ந்த
கோலாகலச்4 சதுர அறையுள்
ஆட அசையமுடி யாமல்
ஆடவர்கள் ஆங்காங்கு நிற்க,
மாட மிசைமகளிர் வாய்ச்சொல்
மறந்து மகிழ்துறந்தங் கிருந்தார்.
ஓட முடியாதோர் சிறுமி
உற்றெனது கைபற்றிச் சிரித்தாள். (60)
பின்னே அவள்அன்னை என்னைப்
பேசாமல் பின்தொடர அழைத்து,
உன்னை எதிர்பார்த்துன் பாட்டர்
ஓயா துசாவி5 உளை கின்றார்;6
தன்னேர்இல் செம்மல்1 உயிர் தரிக்கத்
தவிக்கும் இடைநுமது பெயரைக்
கொன்னே உருவேற்றும் வாயால்;
கொத்ததன் அங்கைகளை முத்தும். (61)
புகுவைஇத் தென்புறத்துப் பள்ளி;
புனிதர்நம் பாட்டரொடும் இருவர்
மிகுதிறல் மருத்துவர் இருந்து,
விடலை2 தன்இடது விலாப்புண்
உகுகுடல் உள்அடைத்துத் தைத்தங்
குடலைச் சுடுஞ்சுரத்தை மடக்கத்
தகுபல சிகிச்சைகள் புரிவர்,
தாழாமல் சென்றுதவி தருவாய். (62)
வாராய்இப் பக்கஅறைக் கக்காள்!
வனிதை இவளுனது மகட்குச்
சோராமல் நின்றுதுணை புரிவாள்;
தூங்காமல் நாம்இருந்திங் கிவர்கள்
கோராமல் வேண்டுவன கொடுப்போம்;
கோடை இடிக்கொடுமை நம்மைச்
சேராமல் நம்முதியர் பிழைக்கச்
செம்மற் குயிர்அளிப்பர் கடவுள். (63)
நல்லார்க்(கு) அறம்துணைய தாமேல்,
நாலைந்து நாழிகைக்குள் நம்பி
பொல்லாச் சுரம்குறைந்து, போதம்
பொலியப் புண்நோவொழியக் காண்போம்;
எல்லாம் இறைவனருள், நம்மால்
இயல்வதைச் செய்வதுநம் கடமை;
நில்லாமல் நீங்கள்இனி அறையுள்
நேரே நுழைதிர் என மறைத்தாள். (64)
தலைவனை உயிர்ப்பித்துதவத் தலைவியைப் பாட்டர் வேண்டல்
பள்ளிக் கதவைமெல்லத் திறந்தேன்;
பாட்டர் விரைந்துவெளிப் போந்தார்;
துள்ளித் தழுவிவிழி பொசிநீர்த்
துளியைத் துடைத்தயலோர் தவிசைத்
தள்ளி, இருத்தி, அரு கிருந்து
தயங்கி உரைப்பர்தழு தழுத்து
வெள்ளி எழுந்ததினி விடியும்;
விடலை உயிர்பிழைக்க முடியும்; (65)
ஆன்ற எமதுகுடி விளக்கை
அவியவி டாதுநெய்வார்த் தருள்வை
போன்று புகுந்தனை; இன் றுனக்குப்
பூவை அணிந்தவன்உன் அம்மான்
ஈன்ற மகன், எனது பேரன்
இறைவா துயிர்உதவ அகத்தே
தோன்றி உனதமுத விரலால்
தொட்டால் துடிக்கும்உயிர் துளிர்க்கும். (66)
வல்ல மருந்துனது விரலும்
வயங்கும்நின் கண்அருளும் என்று!
நல்ல மருத்துவரும் நவில்வர்;
நாவால் அவன்உயிரும் உரைக்கும்
கொல்ல நினைப்பவர்தம் கொடிய
குணமுங் கருத்தும்உன் தன்னை
சொல்ல உணர்ந்திருப்பை, அருள்வாய்
தொழுதிங் கிரப்பன்உனை நானும்1 (67)
நாணிச் சுணங்கில்இவன் இறப்பான்,
நாங்கள்எல் லோரும்உயிர் துறப்போம்;
பேணி அருளுவதுன் பெருமை,
பெண்மைப் பிறப்புரிமை அருளே;
காணி1 விரும்பிக்குடி கேடர்
காளைஎன் கான்முளையின்2 உயிரை
வீணில் அழிக்கமிக விழைவார்;
விளக்கை வளர்த்திருளை விலக்காய். (68)
அருளும் அறனும்இரு விழியாய்
அறிவு முதிர்ந்தொளிரு முகத்தில்
மருளும் துயருமலைந் திருள,
மார்பைக்கண் நீர்நனைக்க மறுகி,
வெருளு மதலைஎன அழுது
விம்மிஎன் மோவாயை வருடி3
தெருள்உன் உரைதருவை, எங்கள்
தெய்வம்நீ அன்றிஇலை என்றார். (69)
இயல்வதை முயலத் தலைவி உடன்படல்
பொங்கி எழும்துயரும், பாட்டர்
புகன்ற அவலஉரைத் துயரும்,
தங்கி நிலையாதென் நாணின்
தடையை உடைத்தெறிய எழுந்தேன்,
எங்கும் இருந்தவரை மதியேன்,
எம்மான் பெரியர்அடி வீழ்ந்தேன்,
மங்கும் உணர்வொடந்த முதியர்
மடியில் முகம்புதைத்தங் கழுதேன். (70)
நரியை அரியிரப்ப துண்டோ?
நாயேற்கும் ஆணைஅற மன்றோ?
சரியை கிரியைதவ மூன்றும்
தம்மில்இச் செம்மல்உயிர் தரிக்கப்
புரியும் துணையெனில், எம் இறையைப்
போற்றித் தவங்கிடப்பன்; அண்ணல்
அரிய உயிர்பிரிவ தாயின்
அதற்குமுன் அவியும்என் ஆவி. (71)
காலை எனதுயிரைக் காத்த
காளைஎன் தீயவுடல் தீட்டால்
மாலை உயிர்துடித்து வருந்த,
வாளா அமைந்திருக்க மாட்டேன்.
வேலை வளைந்தபுவி மீது
வெல்லும் அறம்எனுஞ்சொல் மெய்யேல்.
பாலை1 என்பாற்படுத்தி, ஏந்தல்
பல்லாண்டு வாழவரம் பெறுவேன். (72)
பெற்றார் இருவரையும் இழந்தேன்,
பீழை யொடுபழியும் உழந்தேன்.
உற்றார் எவரும்இலன், இவர்என்
ஊழை எதிர்த்தெனக்கென் உயிரை
மற்றார் அறியாமல் காலை
வழங்கி மறைந்ததற்கிம் மாலை
செற்றாங்கிச்2 செம்மல்உயிர் உண்ணத்
தினவும்3 விதிசெகுக்க4 முயல்வேன். (73)
மதனர் உடல் செகுத்த சிவனை
மறக்க அவருயிரைச் செறுக்கும்5
அதமர் உறவினள்என் றென்னை
ஆறும் விழுங்கவெறுத் திடஇன்
றுதவிக் கரைசேர்த்த உம்பல்6
உயிரைப் புரக்கப்பலி யாய்என்
சதம்இல்7 உயிர்கொடுக்கத் தாழேன்,
தாளைப் பிடித்தெமனைத் தடுப்பேன் (74)
என்ற எனைவாரி எடுத்தங்
கிறுகத் தழுவிக்கையைப் பிடித்துச்
சென்றந்தப் பள்ளியறைக் கதவைத்
திறக்க, மருத்துவரும் எழுந்தார்.
நன்று தரும்உனது வருகை,
நாங்கள்இனி இருக்க வேண்டா;
இன்றிங் கிருந்து மருந்தாய்இவ்
ஏந்தல் உயிர்தழைய இழைப்பாய். (75)
அருகிருந்து தலைவனை அருமை செய்து உயிர்ப்பிக்கத் தலைவியை மருத்துவர் வேண்டல்
கரும்பு மொழியொ டெழில் அறிவும்
கரைஇல் பொறையும் மிகஉடையாய்,
விரும்பி இவ்வேள்உனது பெயரை
விளிக்கும் பொழுது மிகும்அன்பு
தரும்பல் இனியவுரை சாற்றித்
தடவில், தளிர்க்கும் இவர்உயிரும்;
அரும்பி மலரும் முகமுறுவல்,
அசைய விடாமல்அரு கமர்வாய். (76)
வெளியில் இருப்பம்,எமக் கிவளை
விடலை விழித்துளத்தில் உணர்வு
தெளியில் தெரிக்க1 உடன் அனுப்பாய்,
தேறி விழிப்பர்இனி விரைவில்;
அளியும் நிரம்பிஅறி வுடையாய்;
அன்பை இனிமறைக்க வேண்டா;
களியி;ல் தழையும்இவர் உயிர்உன்
கருணை மழைகுறையின் முளியும்2 (77)
என்று மருத்துவப்பெண் உடனே
என்னை நிறுத்திஅவர் மூவர்
சென்று வெளியேறத், திகைத்துச்
செய்வ தறியாமல் நின்றேன்.
துன்றி3 அருகிருந்திச் செவ்வேள்
தூய உடல்தடவி அயர்வை
வென்று துயிலுணர்த்த முயல்வோம்,
விரைந்து தொடங்குவம்என் றுரைத்தாள். (78)
தெளியும் குறிகண்டு மருத்துவப்பெண் விலகல்
நானும் மருத்துவப்பெண் தானும்
நம்பிக் கிருபுறமும் மஞ்சத்
தானக் கடையில்எதிர் எதிரே
தங்கி அவர்முகத்தை நோக்கி,
வானத் துளிவிரும்பும் புள்போல்,
வருந்தி அவர்கரத்தை வருட,1
மோன நிலைகலைந்து வாயில்
முறுவல் முகிழ்ப்பதனைக் கண்டோம். (79)
அம்மா அவர்க்குணர்வு பிறந்த(து)
அருமை உரைஅவர்தம் செவியில்
நும்மால் உரைப்பதினி மூர்ச்சை
நோய்க்கு மருந்தெனமுன் கேட்டீர்;
விம்மீர், விழிப்பவர்கண் முன்னே
விழும்இ லாஉவகை காட்டீர்;
சும்மாநான் இங்கினிமேல் இருத்தல்
தூயோர் தெளிவதற்குத் தடையாம். (80)
தூரத்துச் சாளரத்தின்2 முன்னே
தொங்கு திரைமறைவில் கட்டில்
ஓரத் திருப்பன்துணை வேண்டில்
உடனே வருவன்என ஒதுங்கி,
ஈரத் தினியவுரை அமுதம்
ஈந்து மகிழ்விளைத்திவ் வேந்தல்
வாரத் தினியஉயிர்த் துணையாய்
வாழ்வீர்எனவாழ்த்தி மறைந்தாள். (81)
தலைவன் தெளியத் தொடங்கல்
கண்கள் திறந்துமுதல் எதையும்
காணாம லேபரவை யாடி,
பண்கள் மிசைவிசும்பில் அறுகாற்
பறவை திரிவதென மிதந்து,
பெண்கண் மணஅறையில் சுருங்கிப்
பிறகு புலவியினில் விரிந்து
கொண்கன்1 முகமலரில் ஆயும்
குறும்பு நிகரஅமர்த் தனவே. (82)
சொல்லும் தொடங்கி இடைமுறிவும்
தொடுத்த தொடர்மொழியும் ஆக
மெல்ல விரைவுகொள, யானும்
வெருவி மகிழ்வுமிக லானேன்.
கல்லுங் கரையஉளக் கிடையைக்
காட்டும் உரைகள்உரு வெளியாய்2
அல்லல், அறவுணர்வின் உறைவை
அடுக்கி விளக்கிவெளி வந்த. (83)
தெருளாத் தலைவனின் உருவெளிப் பேச்சு
நீரார்? எனைநகைக்க நினைத்தென்
நெஞ்சில் நிலைப்பவள்தன் தெய்வ
ஏரார் உருவெடுத்து வந்தீர்?
ஏமாறி நான்தொடுவ னென்றோ?
ஓரா துமைஅகற்றத் துணியேன்;
ஒருகால்என் உள்ளம்விட்டென் உயிரைப்
பேரா திருத்தஅருள் பெருகிப்
பெயர்ந்த பெருமாட்டி தானோ? (84)
நோற்ற குரவர்தம தன்பால்
நோதல் அறியாமல் வளர்ந்தேன்;
நேற்றுவரை மகளிர் காதல்
நினைத்தும் அறியாஎன் நெஞ்சில்
போற்றும் அறிவுநிறை அழகு
பொருவில் அணங்கொருத்தி புகுந்தாள்;
ஏற்று மணக்கமனம் துணியாள்,
எனினும் அவள்முகத்தை மறவேன். (85)
முன்னைத் தவக்குறையின் ஈண்டு
முறையே மனைக்கிழமை பூண்டு
என்னைக் கணவன்எனக் கொள்ளாள்,
எனினும் எனதுளத்தில் உள்ளாள்,
தன்னைத் தைநீர்விழவில் தாங்கித்
தருக்கும் எனதுதவக் கைகள்
மின்னைப் பழிக்கும்இடை மடவார்
வேற்றார்1 எவருடலும் தீண்டா. (86)
அன்னை தனைக்குழவிப் பருவத்
தணைத்துப் புளகம்உற்ற பின்னர்,
என்னை அடிமைகொள விரும்பாள்,
என்றும் இளமைவளர் குமரி
தன்னைத் தண்ணீரொழுக்கில் தாங்கித்
தருக்கும் எனதுதவக் கைகள்
பொன்னை2 நிகர்அழகி எனினும்
புரிந்து3 பிறள்உடலைத் தீண்டா, (87)
மண்ணில் வனப்புமிகு மடவார்
வாழ்வில் மகிழ்வழங்க வல்லார்
எண்ணில் இயக்கியவர்கள் உள்ளார்;
எனினும் எனதுரனை அழித்தாள்
பெண்ணில் பிறள்எவளும் இல்லை,
பேசா மடந்தைஇவள் ஒருத்தி,
கண்ணில் அருள்மிதக்கக் கண்டேன்,
காதற் குறிபிறிது காணேன். (88)
வானூர் மதிஇறங்கி வந்து
வாய்பேசி முத்தமிட இல்லை
ஏனும் அதில்இனிமை கொள்வோம்;
எனது மனதுகக்கும் இவள்போல்
மேனாட் டழகியரும் நமரும்
விழைந்து மிழன்றவருள்4 இல்லை,
தானாள என்உளத்தை வென்றாள்
தரணி தனில்ஒருத்தி இவளே. (89)
படரும் மகளிர்உளத் தெல்லாம்
பசையும் விழைவுளதென் றெண்ணும்
மடமை சிறுமைதரும்; மடவார்
மாண்பு தருவர்அற உறவால்
கடவுள் தனைவணங்கு பவரைக்
கட்டி அணைத்துமுத்தக் காணோம்;
கடவுள், அறிவகத்துக் காட்டக்
கண்கண்ட தெய்வம்இவள் எனக்கு. (90)
நித்தம் தொழுங்கடவுள் மக்கள்
நினைத்த தனைத்துந்தர வில்லை.
நத்தும் பொருள்களுள்அவ் அவர்க்கு
நன்மை பயப்பவற்றை நல்கும்.
எத்த இடம்தருவ தென்றும்
இறைமை அறிவொடியை யாதே.
சித்தந் திகைத்தவளை விழைந்தேன்,1
திருத்தி நெறிநிறுத்த நினைவாள். (91)
பித்தன் பிதற்றுவன்என் றெளிதில்
பேதை மதியர்எனை நினைப்பார்;
கத்திக் கழறுவது2 வேண்டா,
காமன் எனக்கரசன் ஆகான்;
சக்தி தனக்குச்சரி பாதி
தகுந்தஇடம் சிவனும் தந்தான்.
புத்தி புணர்வில்இலை, கடவுட்
போதம் பிறங்கும்அவ ளாலே. (92)
வீழ்வு சிறப்பதிரு தலையும்
வேட்கை முளைவிளைவி னாலாம்.
சூழ்வு கருதாமல் அவளைத்
தொழுதல் சுவைமிகுக்கும் எனக்கு.
வாழ்வு வழங்கும் அறக் காதல்;
வம்பர் விழையுங்கழி காமம்
தாழ்வு தரும்;அதனிற் சிறிதும்
சந்தேகம் இல்லை எனச் சொன்னார். (93)
தலைவன் தேறத் தலைவி கூறல்
அறத்தில் கனியும்உயர் காதல்,
அண்ணால்! உமதுடைமை; அந்தத்
திறத்தில்1 உரை2குறையும் எனினும்,
சிறிதும் நிறைகுறைவில் அன்பேன்.
வெறுத்து மனங்கசக்க வேண்டா;
வீணே எனைப்புகழ்தல் மிகையாம்;
பொறுத்திர் முன்பேசாத பிழையை;
போற்றி நுமதடியைப் பிடிப்பேன். (94)
உடலும் உயிரும்உம துடைமை,
ஒருவாது3 எனைக்கொளல்நும் கடமை.
தொடலும் தொழுவதுவும் போதா;
தொண்டும் உழுவலும்நும் அடியில்;
இடலும் எனக்கினிய பேறாம்;
என்றும் இனிப்பிரிய வொட்டேன்.
கடலும் சிறுகவிரி கருணைக்
கடவுள் நுமதுகழல் தொட்டேன். (95)
பெருமை நுமதுரிமை; நாணம்
பேதைஎன் பெண்மைமடத் தியல்பு;
அருமை நுமதுரிமை4 ஆதல்;
அஞ்சி அயரும்என துள்ளம்
ஒருமை எனதுமன தல்லால்
ஒத்த உரிமைபிறி தில்லேன்;
இருமை நிலையிலும்என் உயிர்நும்
எளிய உடைமைஎன எண்ணீர். (96)
தெளியும் தலைவன் கனியும், புலப்பமும்
என்றேன், எனதுகரம் பற்றி
இரண்டு விழிகளிலும் ஒற்றி,
இன்றே பிறந்தபயன் அடைந்தேன்;
இதற்கு முனம்இதயம் உடைந்தேன்;
வென்றேன் இனிஉயிரில் வெறுப்பை;
விழைந்த எனதுபிழை பொறுப்பீர்;
நன்றே கனவு - இதனை இழவேன்,
நனவை அடைந்துதுயர் உழவேன். (97)
காதற் கினியள்வரக் கருதாள்,
காணப் படும்உருவம் விருதா;1
ஓதற் கரியள்நலம் அருவம்,
உருவெளித் தோற்றம்இந்த உருவம்,
சாதற் குதவுகின்ற புண்ணைத்
தைத்த மருத்துவரைச் சபிப்பேன்;
வீதற் குரியன்எனைத் தடுப்பின்,
மிக்க துயருழக்க விடுப்பீர். (98)
நோவேன், அகல்விர்,அவள் அருளை
நோற்று மறுபிறப்பில் அடையச்
சாவேன்; இனிஇருப்பன் தனியே;
சகியேன் பிறர்உறவை இனியே.
போவீர், எனத்தன்விழி பொத்திப்
புகன்ற அவர்இதழை முத்தி,
ஏவீர் எனை, எதுவும் புரிவேன்;
ஏகேன், இனிப்பிரிவு தரியேன். (99)
தலைவனைத் தேற்றும் தலைவியின் மாற்றம்
பேதை முளிஉளத்2தில் அளி3 யைப்
பெய்து களிதழைய விளைத்து,
வாதைப் படுத்திப், பின்பு மாலை
வடித்த கணையில்கண்ணி இகுத்தீர்4;
சூதை மெய்என்றுநம்பி அணுக,
சொல்லாத சொல்லித்தொல்லை மிகுந்தீர்;
மாதை வருத்தல்ஆண்மை மாண்பா?
வண்மைப் பெருந்தகைநும் மகிழ்வா? (100)
செய்ய தவக்கரத்தி னாலே
தீண்டிஎன் மெய்மாசு கழித்தீர்;
வெய்ய விழியினொளி வீசி
விழும இருள்முழுதும் ஒழித்தீர்;
ஐயம் அகலநுமை வருடி
அணைத்து மகிழும்எனை இன்னும்
ஐயப் படுவதன்பின் அறமா?
அருளா? எனஅணைத்தங் கழுதேன் (101)
தலைவன் தெளிந்து துணிதல்
கண்ணைத் துடைத்துநுதல் நீவிக்
கதுப்பை இழுத்துமுத்தம் இட்டார்.
புண்ணைப் பொதிந்துசுற்றி இருந்த
புடைவை1 தனைத்தடவித் தொட்டார்.
விண்ணை இழிக்கவிழி களிலே
வெய்ய துளிவழிய வடித்தார்.
எண்ணை2 நிலைநிறுத்தித் தெளிந்தென்
இரண்டு கரங்களையும் பிடித்தார். (102)
தேர்ந்த தலைவனின் ஆர்வ மொழிகள்
மஞ்சத்துப் பஞ்சணையில் என்னை
மார்போ டணைத்திறுகத் தழுவி,
கஞ்ச முகத்துமுகம் சேர்த்துக்
கண்ணீரி னாற்கதுப்பைக் கழுவி,
வஞ்சி! எனக்குயிரும் இன்ப
வாழ்வும் வழங்கிஅருள் தருவாய்;
நெஞ்சில் தனிஅரசு புரிந்து
நிலைத்த கொலுவிருக்க வருவாய். (103)
நஞ்சிற் கொடியவர்கள் விடுத்த
நாகப் படைநலிய மயங்கி
எஞ்சும் எனதுயிரைத் தழைப்பித்
தின்பப் பெருவாழ்வும் ஈந்து,
தஞ்சம் அருளநினைத் தன்பாம்
சஞ்சீவி1 தந்துதவி நின்றாய்.
வஞ்சர் மனம்இடியப் பாட்டர்
மகிழ மணந்தினிது வாழ்வோம். (104)
அன்பே! எனதுயிர்ப்பெண் அழகே!
அருளின் உருஒளிரும் அறிவே!
இன்பே எனக்குதவ மலர்விட்!
டிறங்கி எழுந்தருளும் திருவே!
என்பேர் நிலைபிறப்பிங் கெதுவும்
என்னென் றறியாமல் நயந்தாய்;
நின்பேர் அருள்பெற இங்குய்த்த
நிலைத்த அறத்திறனை வியந்தேன் (105)
திங்கள் முகத்தில் மறுஇல்லாய்!
தீம்தேன் மொழிதரவும் வல்லாய்;
எங்கள் குலத்தவர்கள் எல்லாம்
இழைத்த தவப்பயன், நின் அருளை
இங்கின்று பெற்றனன்என் றியம்பி,
எழுந்து தழுவமுயன் றவரை
அங்கங் குழையஅணைத் தமர்த்தி,
அன்புண் டெனில்அசைய மாட்டீர். (106)
உளங்கலந்து காதலர் தம்முள் உரையாடல்
கிழமை முழுதும்எழு நாள்நீர்
கிடப்பின் அலால்என் உயிர்க் கணக்கும்,
உழவன் மருகன்தரு புண்ணும்
ஒன்றாய்க் கிழிபடுமென் றுணர்வீர்.
தழுவி அருகிருக்கத் தவிரேன்;
தாமிங் கமைந்தருள வேண்டும்.
வழுவில் மருத்துவர்க்கு நன்றி
வழங்கி அனுப்பநினைப் போம்நாம் (107)
என்று மொழிந்துமஞ்சத் தருகே
இருந்த மணியடிக்கத் தூரச்
சென்று திரைமறைவில் இருந்த
சிறுமி எழுந்துவரக் கண்டார்.
இன்றிங் கிருவர்சிறு பெண்டிர்
என்னைச் சிரிக்கஎண்ணங் கொண்டீர்.
வென்றி என்பங்கில்விழ விழிப்பீர்;
வேண்டேனைக் கன்னிஇவள் இழுப்பாள். (108)
நொந்தேனை வந்துகரம் பிடித்து,
நொடி1 கள் பிசி2 கள்பல தொடுத்துச்
செந்தேன் பிலிற்றுமொழி சிதறித்
திகைக்க மருட்டிச்சிறை பிடிப்பாள்.
வந்திந்த வம்பிதனை வணங்கி
வழக்கைத் திகைத்துவிடப் பாட்டர்
சொந்த அடிகளுக்கெம் தொழுகை
சொல்லி, அழைத்துவரு வாய்நீ. (109)
மற்ற மருத்துவர்க்கும் எங்கள்
மாறாத நன்றிசொலி வருத்தம்
உற்ற உறவினர்கள் உவக்க
ஊறின் றொழிந்ததென உரைப்பை
குற்றம் புரியும்இந்தக் குறும்பி
கோட்டம்3 அடங்கிப்புண்ணும் குணமாய்4
கொற்றம் பெறும்வரையும் நீஎம்
கூட இருந்துதவ வேண்டும். (110)
விரைவில் வருவைஎன வேண்ட,
வியந்து பயந்தஅந்த வனிதை
தரையில் நடவாமல் பறக்கத்,
தாமும் என்னோடுமிக நகைத்தார்.
உரையில் உவகைஉல கதனில்
உலவித் திரியுமென துள்ளம்
கரைஇல் களிக்கடலில் ஆழக்
கைதூக்கி மீண்டும்அவர் காத்தார். (111)
தலைவன் தன் வரலாறு கூறல்
போனாள் திரும்புமுனம் உனக்குப்
புகலற் குரியஉள, கேட்பை
மேனாள் நிகழ்ந்தசில செய்தி
விளைவை அறியின்எனை வேட்பை.
வானாள உன்குரவர்1 இருவர்
வயது முடியுமுனம் மாள,
தானாள நம்இருவர் தாயம்2
தன்னைஉன் மாமிவிழை கின்றாள். (112)
அண்ணர் வெறுக்க, அவர் இளையாள்
அழகொ டிளமைநலம் உடையாள்
எண்ணம் பிரிதாக, எந்தை
என்னைக் கருத்தரித்த அன்னை
வண்ண மயிலிளைய ளோடு
வளங்கள் இலங்கிலங்கை நாட்டை
நண்ண3, முன்னாளில்உடன் படித்த
நண்பர் ஒருவர்துணை உற்றார். (113)
தகவும் திறலும்பல சால்பும்
தாளாண்மையும் உடைமை யாலே
மிகவும் விரைவில்பெரும் பொருளும்
மேலோர் உறவும்உயர் வாழ்வும்
புகழும் தமதுரிமை கொண்டார்;
புதல்வன் ஒருவன்எனை உலகில்
திகழப் பலகலைகள் தேறச்
சீமைக்கும் சென்றுவரச் செய்தார். (114)
எந்தைக் கிளையள், என தத்தை,
எம்மோய்க் கிளமைமுதல் இனியள்,
சிந்தை உவக்கும்உயிர் நண்பள்,
செய்யோள் தன்தோழியொடு தமையர்
நிந்தை நயந்துபுரி அண்ணி
நீளும் பகைவெறுத்து, நீர்சூழ்
விந்தை வளத்திலங்கை சென்று
விரும்பும் மகன்ஈன்ற தறிந்தாள். (115)
ஓதம்1 உடல்பிரிக்க உயிர்தான்
ஒன்றி உணர்வுசெறிந் துவந்து,
காதல் கெழுமி2 அண்ணி மகற்குக்
கற்புக் கமழ்அறநல் துணைவி
ஈதல்தன் நட்புரிமை என்ன
எண்ணித் தவங்கிடந்தென் அத்தை
மாதர்க் கரசிஉனைப் பெற,அம்
மாமிபட் டாடையில்கண் வளர்ந்தாய்.3 (116)
கரும்பு மொழியள்என தன்னை,
கரையில் அருளுடையள் என்னைத்
திரும்பப் பழம்பெரிய நாட்டில்
சிறந்த நிலையடையக் காண
விரும்ப, விலக்குகிலர் எந்தை;
வினையும் நமைக்கூட்ட வேண்டி
அரும்பு நலன்உதவு பதவி
அளித்ததிந் நாட்டரசில் எனக்கு. (117)
என்பு குழையாஎனைத் தழுவி,
எங்கள் குலத்தலைவர் சான்றோர்
துன்பு தெரியாத பெரியார்,
தூயோர் எனதுமுது தந்தை
முன்பு வணங்கி, எங்கள் பணிவு
முகம1னொடு வழங்கி, வாழ்த்தோ
டன்பு பெறுவை; பிற கங்குன்
அத்தை மகளொருத்தி, தமியள்.2 (118)
துயரும் நிலையில்வளர் மானைச்
சுற்றித் திரியுமொரு சிறுத்தை3
அயரும் சிறுமிதனை அவள்நல்
அம்மானும் மாமியும்வந் தழைக்கப்
பெயரும் விருப்புடையர்; நாளும்
பேர விடாதுபல தடைகள்
உயரும், எனினும்இனி விரைவில்
உறுவர்என உரைப்பை என்றார். (119)
உற்றேன் நெருநல்இந்தச் சூழல்;
உன்னை அறியாதுன் அருளும்
பெற்றேன் விடியுமுன்,நம் பெரியார்
பெருமை உடன்இளைஞர் திறனும்
கற்றேன்; களிமகன்கை யால்உன்
கற்பின் மணம்கமழும் காதல்
துற்றேன்;4 உன்சிற்றவையும் இன்று
சொற்றாள் உனதருமை நன்று. (120)
ஆட்டைத் திதிபதிக்குக் கொடுத்தாள்
அடக்க முடியாத வயவு
வாட்ட, வயிறுமுப்ப, உன்பொன்
மாமி தலங்கள்தொழ நினைந்து,
வீட்டை விடுத்துவெளி யேறி,
வேண்டா மகவைக்கரு வுயிர்த்து,5
மாட்டை அடிப்பன்கைமைத் தங்கை
மகனாய் வளரவிட்டு வந்தாள். (121)
ஆண்டு சிலகழிந்து தானே
ஆண்டு வரும்நிதியை ஆள
வேண்டும் குடிக்குமகன் என்று
விலைக்குத் தான்பெற்றவனை மீள
ஈண்டு சுவிகரித்து வளர்க்கும்
எம்பி எனக்குநினை உதவத்
தூண்டு வினைதுரப்ப இன்று
சூழாது குத்தினதென் முத்தி. (122)
தலைவன் தலைவிநலம் பாராட்டல்
வானே வறுமையுற எனக்கு
மகிழ்வு மழைக்கும்விழி மடவாய்!
தானே தனைஎனக்குத் தந்து
சாகும்உயிர் தழைக்கச் செய்தீந்
தேனே! என்உள்ளமலர் உறையும்
திருவே! மனவனத்தில் உகளும்1
மானே! உயிர்குளிர ஒளிரும்
மதியே! எனதுபுது வாழ்வே! (123)
கண்ணே! களிவெறியை ஊட்டாக்
காதல் நறவில்விளை கண்டே!
பெண்ணே! பிழைக்கவைத்தென் உயிரைப்
பேணித் தழைக்கஅருள் மழைக்கும்
விண்ணே! விழியில்உறை பாவாய்!
பரிந்தெனது கையைப்
பற்றி மணப்பன்எனப் பகர்வாய். (124)
என்ன உரைத்தெனது கண்ணில்
இதய மொழிபடித்து4 மகிழ்ந்தார்.
தன்னந் தனியிருந்து சாம்பித்
தவிப்பள் தனக்குமகிழ் ஊட்டிச்
சின்னஞ் சிறியள்உளம் திளைக்கச்
செய்தீர்க் குரியள்எனச் செப்ப,
கன்னஞ் சிவக்கமுத்த மிட்டார்;
கதவு திறக்கக்கையை விட்டார். (125)
தலைமக்களைப் பாட்டர் வாழ்த்தல்
முன்னம் புகுந்தமுது பாட்டர்
முறுவல் உடன்அருகில் வந்து,
என்ன தவம்நமது முன்னோர்
இயற்ற, இவள்உனக்குன் உயிரும்,
இன்னல் ஒழித்துவகை எனக்கும்,
ஈயப் புகுந்தனள்இன் றிங்கிக்
கன்னல் மொழிக்குக்கண்ணி தந்தாய்1
காதல் மணமும்இனித் தருவாய். (126)
கேட்ட வரத்தைமுனம் கொடுத்தாய்;
கேட்கும் வரமும்இனிக் கொடுப்பாய்;
பாட்டன் விருப்பம் அறமென்றாய்;
பரிந்திச் சிறுவன்முகம் பாராய்;
வீட்டில் விளக்கெரிய மணப்பை.
வெறுப்பின் விடலைஉயி ரணைப்பை
கூட்டித் திருவருளும் இன்று
கொடுத்த மணம்இதெனக் கொள்வாம். (127)
முன்னை அறம் முடிந்த முடிச்சு;
மூர்க்கர் இதை அவிழ்க்க முயன்றால்
பின்னை அறம்அழிக்கும் அவரை;
பேரர் இருவிரும்என் கண்முன்
மன்ன மணந்துசெய்ய வேளும்
வள்ளியும் போல்இனிது வாழ்வீர்
என்னஎன் கையெடுத்தங் கெழிலார்
ஏந்தல் கையில்கொடுத்து மகிழ்ந்தார். (128)
எனக்குப் புதல்வர்இலை; எம்பி
தனயர் இருவருளும் மூத்தோன்
தனக்கு மனைவியர்கள் இருவர்
தமக்கும் வயிறடைக்கத் தன்முன்
வினைக்கு வருந்திஅவன் இறந்தான்;
மிடுக்கன் இளையன்அறம் பிறழான்,
உனக்கு முதற்குரவன், எங்கள்
உறவை வெறுத்திலங்கை சென்றான். (129)
கொழுநன் இறந்துமகன் இல்லாக்
குறையை நிரப்புவன்என் றெங்கள்
வழுவும் பழியும்அணு காத
மரபைக் கெடுக்கஇவள் மாமி
உழவன், அழகன்,அவள் இனத்தான்,
உறவு தகவெதுவும் இல்லான்
வழியில் கயவன்ஒரு மகனை
வாங்கி உரிமைசெய்து வளர்ப்பாள். (130)
பொல்லா அறுதலிகள் வளர்த்த
பொருவில் கழுதைமகன் இன்று
எல்லார் மனங்கொதிக்க இழைத்த
இழிந்த கொடியநெடும் பழியை
நல்லாள் இவள்துடைத்த நன்றி
நம்பியொடு நாங்களென்றும் மறவோம்.
பல்லார்முன் முல்லைஇவட் கணிந்தான்,
பாரோர்கள் வாழ்த்தஇனி மணப்பான்; (131)
மண்ணி1க் கிளர்மணியில் ஒளிபோல்
மடந்தை இவளுளத்தில் நீயும்,
கண்ணில் உறைபாவை போலக்
காழ்த்தஉன் காதலற உளத்தில்
பெண்ணிற் சிறந்தஇவள் தானும்,
பேராது நின்றென்றும் பிறங்கி
எண்ணில் அடங்காத இன்பம்
இருவிரும் எய்திடுவிர்என்றார். (132)
பெரிய மருத்துவர்கள் பின்னே
பெண்டிர்கள் மூவருடன் நுழைந்து,
உரிய முறையில்அவர் கையும்
உரனும் வருடிமுகம் நோக்கி,
எரியும் அனல்உடலில் இல்லை,
இனிய பழத்தினொடு பாலும்
பிரியை இவள்இருந்து தருக;
பேசா துறங்கும்வகை புரிக. (133)
நாங்கள் இனிஇருத்தல் மிகையாம்,
நாள்தோறும் வந்திவரைப் பார்ப்போம்.
நீங்கள் இனிக்கவல வேண்டா;
நீங்காது பெண்டிர்இவர் இருவர்
பாங்கில் இருந்திவர்க்கு வேண்டும்
பணிவிடை செய்துவரப் பண்ணீர்.
ஏங்கும் இளைஞருக்கிச் செய்தி
இயம்பி அகல்வம்எனச் சென்றார். (134)
சித்தி அவரை வாழ்த்தல்
சித்தி1 அணுகிஎனை முத்தி,
தெய்வம் உனக்கிவரும், உன்னை
நத்திப் புலம்பும்இவர் தமக்கும்
நல்கும்இந் நன்னாளில், நீவிர்
பத்தி யுடன்கடவுள் இன்றும்
பாட்டர்தம் வாயாலே பணிக்கும்
புத்தி மொழிபோற்றிப் பணிந்து
பூவும் மணமும்என வாழ்வீர். (135)
அத்தை மகள்தமியள், நும்பால்
அளவில் அன்புடையள் இவட்கும்
ஒத்து நிலைத்தஅன்பு தருவீர்;
ஒருமை உளமுடையள், சிறிதும்
சித்தம் திரிவிர்எனில் தரியாள்;
தீமை அணுகாமல் ஓம்பி,
நித்தன் அருள்பெறுவிர் என்றாள்;
நேச முடன்அவர்கை தொழுதார். (136)
பாலைப் பருகிஇனி உறங்காய்;
பார்க்க விரும்புபவர் நாளைக்
காலை வருவர்; இங்கு நம்பி
கட்டில் அருகிரண்டு படுக்கை
சீலை1 புதிதுவிரித் திந்தச்
சிறுமியர் இருவரும் துயில
வேலை முடித்துவெளி யேறீர்,
விரைதிர், எனப்பாட்டர் அகன்றார். (137)
வேலை முடியுமுனம் ஒருத்தி
வெள்ளி வள்ளத்திற்பாலும் கொணர்ந்தாள்.
மாலை முதற்பொழுது கழிய
வாங்கி அதைநான் கொடுக்க உண்டார்,
பாலைக் கொணர்ந்தபணிப் பெண்எம்
பாட்டர்தம் பக்கத்தில் ஒருத்தி
சீலை முன்தானை கண்ணில் ஒற்றித்
திகைத்தங் கழுதுநிற்பள் என்றாள். (138)
மாமியைத் தேட அவள் பணிப்பெண் வருதல்
வாயிற் கதவைமெல்லத் திறந்து
வடியுங்கண் ணீரோடு மாமி
ஏய புரியும்பணிப் பெண்வந்
தென்காதிற் பையக் குசுகுசுக்க
மாயம் மறைஅறிய விரும்பா
மாண்பு மிகுந்தமனச் செம்மல்,
தூய உளத்தள்உன தன்னை
துணைகொண்டு போய்வருதி, என்றார். (139)
ஏகல் இருத்தல்இவை இரண்டில்
எதுவும் துணியகிலன் நானாய்,
ஆக முடிவுமது பாட்டர்க்
கறிவித் தவராணை பெறுவன்.
போக விரும்புகிலன், எனினும்
போய்விரைவி லேதிரும்பி வருவேன்;
ஈக விடை, சிறிதும் தாழேன்,
இங்கினிது நீர்துயில வேண்டும். (140)
ஏகேன், இனிஉறங்கு வேன்என்
றியம்பி உறுதிசொலின் அல்லால்,
மீகான்நீர், என்மனதுப் படகு
மிதப்பதும் தாழுவதும் நுங்கை
ஏகாதி பத்தியத்தில் இருக்கும்;
என்றவர்தம் கையெடுத்தென் கண்ணில்
நோகாமல் ஒற்றிமுத்தி வைத்துஅ
நுடங்கி நடந்துவெளிப் போந்தேன். (141)
என்னை என்சிற்றன்னை யோடே
ஏவற் சிறுமியும்பின் தொடர,
தன்னைத் தவிரப்பிறர் அணுகாத்
தனித்த தவிசிருந்து பாட்டர்,
உன்னை உன்மாமிஉழை யாள்1வந்
துள்ளே புகுந்தழைத்த செய்தி
என்னை? அவள்இனிய மகனுக்
கேதம் இனிஎதுவும் உண்டோ? (142)
என்றென் முகம்நோக்கி எழுந்தார்
என்னோடு தன்அறைக்குள் நுழைந்தார்.
இன்றிங்கு நீவந்த பின்னே
என்ன புதுக்கொடுமை சூழ்ந்தாள்?
துன்றி உனைஅழைக்கத் துணிந்து
தூதிவளை இந்நேரம் அனுப்ப
நின்ற மருமம்அறி யாமல்
நீபோகச் சம்மதிக்க ஒல்லேன். (143)
வந்த வனிதையிடம் துருவி
வாய்கிண்டி மெய்முழுதும் அறிவோம்;
அந்தச் சிறுமியைஇங் கழைப்பை;
என்றார் அவளும்உடன் வந்தாள்.
வந்தி1 மகன்நிலைமை என்ன
மட்டில் இருப்பதென உரையாய்;
சிந்தை திகைத்தழுவ தேனோ?
செய்தி புகல்வை; எனப் பணித்தார். (144)
மாமியைக் காணாத பணிப்பெண் மறுகுதல்
பெம்மான்! நுமதுதிரு முன்னே
பேசத் துணிகிலன்,நும் அடியாள்,
எம்மான்2 உறங்கிவிழித் ததன்பின்
எழுந்து வெளிஉலவச் சென்றார்,
தெம்மாடி ஏழைபிற கவரைத்
திரும்பி அகத்துவரக் காணேன்,
அம்மாளை மாலையிற்சின் னம்மை
அங்கிருந்து வந்தபிற கறியேன். (145)
எந்நாளும் எங்கும்அவர் ஏகார்;
இன்றிரவு மாடியையும் பூட்டி
நன்னாளும் போதும் மனை விளக்கை
நாண்மலர்கள் தூவிநறும் புகையால்
சொன்னாறும்3 தோத்திரங்கள் பாடித்
துதிக்கும் வழக்கம்அதை மறந்து
இந்நேர மாகியும்தம் வீட்டில்
இல்லாமற் போனவிதம் அறியேன். (146)
கோவில் குளங்களிலும் தோட்டம்
கொல்லைப் புறங்களிலும் பார்த்தோம்.
ஏவிப் புறத்தனுப்ப உழவன்
இன்று முழுதும்வர இல்லை.
ஆவி துடிக்குதவர் தம்மை
ஆற்றோரம் சோலைகளில் தேடத்
தாவித் துருவுவர்தம் துணையைத்
தந்தருள வேண்டும்அடி தொழுதேன். (147)
பெற்றுப் பிழைத்தவர்கள் எல்லாம்
பேசாமல் போய்ஒளிந்து கொண்டார்.
உற்ற உறவினருள் நண்பர்
ஒருவரும் இல்லைஅவர்க் கூரில்.
மற்று வசைவசவு சொல்லி
மனதைக் கசக்கவைக்கும் அம்மாள்
குற்றம் நினையாமல் நடந்து
கொள்ளும் பெருமையர்சின் னம்மாள். (148)
சின்னம்மை தன்னைமனைக் கனுப்பித்
தேடுபவர் தங்களுக்கும் ஆணை
சொன்ன பிறகெழுவன் அல்லால்
சும்மா தொழுதகன்று போகேன்.
அன்னம் எனக்கவர்கள் பல்லாண்
டளித்து வளர்த்தவர்கள், அல்லல்
இன்ன வகையினதென் றெனக்கும்
எள்ளளவும் சொல்லாமற் சென்றார். (149)
என்ன வகையில்இனி அவரை
என்றெங்குக் காண்பன்என் அறியேன்.
சின்னம்மை ஆவதுடன் வந்து
செய்வன தேர்ந்தாணை செலுத்தி,
இன்ன திவர்புரிக என்ன
ஏவாமல் இங்கிருப்பின், எளியேன்
தன்னந் தனியிருந்து செய்யத்
தக்க தெதுவுமிலை என்றாள். (150)
பாட்டர் மறுமொழி
திருட்டுக் கழகனும்,உன் எசமான்
தீய கொலைக்கும்இன்று காவல்
இருட்டுச் சிறைஅறையுள் இருப்பர்;
இரவு கழிந்தபிற கிந்தத்
தெருட்டுக் குத்தேராத கயவர்
சிறையைத் திறந்துவிடச் செய்வேன்.
உருட்டுப் புரட்டுழவன் உடன்உன்
உல்லாசப் பேர்வழி1 யும் வருவான். (151)
எல்லை இலாதபல கொடுமை
இன்றிங் கிழைத்தவள்உன் அம்மாள்,
தொல்லை இனிஎதனைச் சூழ்ந்து,
துயரம் இவள்உழக்கச் செய்ய
அல்லை2ப் பயன்படுத்தக் கருதி,
அழுதுவந் திங்கிவளை அழைக்க
வல்லநீ என்றறிந்து மருட்டி
மறைந்தவள் எங்கொழிந்து போனாள். (152)
கொஞ்சும் மொழிகள் சொல வல்லாள்,
குடிலை3, அடுப்பவர்கள் தன்னைத்
தஞ்சம் அடையவைப்பள்; முடிவில்
தவிக்க அலைத்தவர்கள் சாக
நஞ்சும் தரும்மனத்தள், அஞ்சாள்,
நாணே அறிகிலள்உன் அம்மாள்,
அஞ்சும் என்நெஞ்சம்அவள் வஞ்சம்;
ஆத லினால்இவளை அனுப்பேன். (153)
எங்கள் அனைவரையும் இகழ்வாள்,
இந்தச் சிறுமிஉளம் அகழ்வாள்
பங்கில் இரக்கம்இலை எனக்கு;
பாரில் அவளிருப்பள் ஆகில்
எங்கும் துழவிஅவள் தன்னை
இரவே இழுத்துவரச் செய்வேன்.
கங்குல் கழியுமுனம் வருவாள்;
காணா விடின்இழவு தருவாள். (154)
சாடித் துருவிவிடி1 வதன்முன்
தரணி மிசைஇருப்பின் அவளைத்
தேடிப் பிடித்துவரத் தக்க
திறலும் அறிவும்உடை யவரை
நாடித் தரும்படிக்குச் செய்வேன்;
நானும் இவளும்வர மாட்டோம்;
வாடி அழுவதனை விடுத்து
வழிவரு பவர்க்குரை என்றார். (155)
பாட்டரிடம் சித்தி முன்நிகழ்வு கூறல்
பேசாமல் கேட்டுநின்ற சிற்றாய்
பெரியார் தமைவணங்கி, பாவி
கூசாமல் என்மகளை என்முன்
கொடிய வசைகள்சொலிக் குமைத்தாள்.
ஏசாமல் வேசைஅவள் இழைத்த
எண்ணற்ற கைதவங்கள்2 எல்லாம்
வாசம கோசரமாய்3 விரித்தேன்.
மடிந்து மனம்இடிந்து நின்றாள். (156)
பூசி மெழுக4வழி இன்றிப்
புள்ளி விவரமொடு புரைகள்5
பாசி படருவது போலப்
படிறு6 நிறைமனத்தள் பதற
ஊசி நுழைய இடம் இன்றி
ஒவ்வொன்றும் சான்றுடனே உரைத்தேன்.
ஏசி7 மகிழமுடி யாமல்
ஏங்கி உளம்உடைந்தங் கிருந்தாள். (157)
நாணும் நலனும்நுழைந் தறியா
நச்சு மனத்தள்,நவை பறைவேன்1
வேணும் துணைபெறவும் ஒட்டேன்;
பெருமை அழியச்சிறை புகுத
வேணும் எனநினைத்துத், தலைமேல்
மிகுந்த வினைப்பயனின் வெள்ளம்
சாணும் முழமுங்கரு தாமல்
சாகத் துணிந்திருக்க வேண்டும். (158)
தேரில் சிறைஅலது தூக்கு
திட்டம்2 கிடைக்கும்எனக் கண்டாள்;
பாரில் இனித்தனக்கு வாழ்வுப்
பற்றறுக்க நற்றுணிவு கொண்டாள்.
ஊரில் பெரியதனக் காரர்,
உறவின் முறையினருள் ஒருவர்
சேரில் அவருடன்சென் றிரவே
தெளிவு வெளிப்படுத்தி வருவேன். (159)
மாடிக் கதவைமுதல் திறக்க
வல்ல கருவிகளும் ஆளும்
தேடி என்னோடுவரச் செய்க;
சிறுமி மருமானின் அறையுள்
ஓடி உறங்கவைத்துத் தானும்
உறங்கி, விடிந்தெழுந்து நம்மைக்
கூடி நிகழ்ச்சிகளை நானே
கூறத் தெரிவதுநன் றென்றாள் (160)
பாட்டர் உடன்எழுந்தென் கையைப்
பற்றிஉன் அம்மைசொல்வ துண்மை,
வீட்டில்உன் அத்தானைத் தனியே
விட்டுநாம் போவதனை விரும்பாய்.
கோட்ட மனத்தள்3 உன தத்தை
கொடிய பழிஅலது குற்றம்
சூட்டி உனைக்கெடுக்கச் செய்யும்
சூழ்ச்சி எனக்கடுக்கத்1 துணிவேன். (161)
தலைவி துயிலாத தலைவனைக் கழறல்2
என்றென் முகத்தைஅவர் நோக்க,
எப்படியும் தங்கிவிட விரும்பி
ஒன்றும் உரையாமல் நானும்
ஓடி நடந்தறையுள் நுழைந்தேன்.
கன்று பிரிந்தபசுப் போலக்
கண்கலங்கி அத்தானும் கிடந்தார்.
சென்றென் முகத்தைஅவர் மார்பில்
செறித்துச் சிரித்திதுநல் உறக்கம். (162)
இன்றும்மை நம்பிவெளி இறங்கி
இருந்து விடியின்எனைக் கெடுப்பீர்.
நன்று மருத்துவரும் நம்மை
நாளை நகைப்பதொடு போமோ?
வென்ற சுரம்உறக்கம் இன்றி
மீளில், எனதுநிலை என்னாம்?
என்று கலங்கும்எனை அணைத்தே
இரக்கம் இலாதென்னைப் பழிப்பாய். (163)
தலைவன் மறுமொழி
உறங்க விரும்பிவிழி மூடில்
உன்உருவம் தோன்றிஎனை இகழும்;
கறங்கும்3 உளத்தில்உனை அமர்த்தக்
கண்கள் திறப்பின்அழும் காண.
பிறங்குன்4 முகம்என்அகம் பொறித்தாய்;
பேர்த்தழிக்க உன்னாலும் கூடா.
அறங்கள் பிறர்க்குரைப்ப தெளிதாம்;
அருகில் இருந்துறங்க வைப்பாய். (164)
ஏதும் வினவவிரும் பேன்நான்,
என்னருகில் நீயும்இனி உறங்கில்
போதும், உறக்கம்வரும், நோயும்
போயொழியும், மீளாது; வீணே
கோது1 கருதாமல் கருணை
கூர்ந்தெனது கட்டில்அரு கமளி
மீது படுப்பை,இரு வேமும்
விடியும் வரைது யில்வம் என்றார். (165)
நள்ளிரவில், தலைவி பாட்டர் வாயுரையால் மாமியின் சாவுணர்தல்
நீரில் கயல்உறங்கும் நெடிய
நிலத்துக் கழுது2றங்கும், நீர்சூழ்
பாரில் அரவமொடு தொழிலும்
பயில்பவர் அற்றொடுங்கும் பானாள்.3
ஊரில் உயிரினமும் பிறவும்
உறங்கும் இடைஎனது செவியில்
மாரில்4 துணுக்குறஎன் பாட்டர்
மந்த நடைஅதிரல்5 கேட்டேன். (166)
பைய நகர்ந்தறையின் கதவுப்
பக்கத்துக் காதைவைத்துக் கேட்டேன்.
செய்ய உளம்தளர்ந்து முதியர்
திவளும்6 குரலில்இது மெய்யா?
வெய்ய கொடியவள்தற் கொலையை
விரும்பி விழவில்இன்று விரைந்து
செய்யத் துணிவதற்கு நேர்ந்த
சீர்கேடு யாதென்று தெரியேன். (167)
நாணால் உயிர்துறக்க வல்ல
நல்லாள் இலள், அவள்முன் யாரும்
காணா திழைத்தகொடுங் குற்றம்
கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டம்
மாணாத தூக்குவரற் கஞ்சி
மற்றோர் அறியாமல் தானே
பேணா உயிரைவிடத் துணிந்தாள்;
பிணத்தை எரிப்பதற்கு முயல்வோம். (168)
மதுவை விழவில்மித மிஞ்சி
மடுத்து மதிமயங்கி மடவோன்,
புதுவன் நெருநல்1 இந்த ஊரில்
புகுந்த ஒருவனைமுன் பகைமை
எதுவும் இலாமல்இனம் அறியா
தெல்லோர்முன் மாலைநடுத் தெருவில்
கதுமெனக் குத்தினன்,அக் குற்றம்
கருதாக் களியின்2விளை வாகும். (169)
கொள்ளிக்குப் பிள்ளைஇல்லை என்ற
குறையும் நிறையவிலை கொடுத்துப்
பள்ளிக் கொதுங்காத பயலைப்
பார்த்துப் பொறுக்கினவள்; அவளைத்
தள்ளிச் சிறையில்அவன் தனிப்பில்,
சாவுக்கும் உதவாமல் தொலைவான்.
தெள்ளிப் புழுதிஅவள் வாயில்
திணித்துக் கெடுத்தவன்அவ் உழவன். (170)
காலை விடிந்தவுடன் அவள்தன்
களிமகன் விடுதலை பெறுவான்,
சேலைப் பழிக்கும்விழிச் சிறுமி
சிந்தை அருட்கொடையிற் பெரியள்,
மாலை முதல்அவனைச் சிறையில்
வைத்ததற்கு மாமிதுயர்க் கழுவாள்,
வேலை எனக்கிடுவள், அவனை
விட்டொழிக்கச் செய்க எனத் தொழுவாள். (171)
தான்அக் களிமகனை வெறுத்தும்,
தன்காதல் அத்தானைக் குத்திப்
போன பொல்லாங்கை1 அவன் தனக்குப்
புரிந்த உதவிஎனப் புகல்வாள்.
ஈனர் அவர்கொடுமை இரிய
இன்பம் இவளுறுதல் காண
மானம்2 பொறாமல்தன துயிரை
மாய்க்கத் துணிந்தனள்அம் மறத்தி. (172)
விடிந்தஉடன் பிணத்தைத் தகனம்
விரைந்து செய,அவள்தன் விருப்பால்
முடிந்த சுவிகார மூடன்
மூட்டும் நெருப்பிலிட்டு முடித்து,
மடிந்த கொடியள் கருமாதி
வசையின்றி நடந்தபின், அவள்தான்
கடிந்த அழகியைஎன் பேரன்
கைப்பிடிக்கக் காணுவன்என் றெழுந்தார். (173)
அயர்வால் தலைவி துயிலல்
செத்தாள், கொடுமைபல செய்தாள்
திறத்தும் பிறந்தசிறி தவலம்
மத்தால் உடைதயிரும் வானில்
மதிமுன் இரிஇருளும் போல,
அத்தான் உயிர்பிழைத்த மகிழ்வும்
அவர்அறக் காதல்தரு மகிழ்வும்
வித்தார மாய்ப்பெருகும் உளத்தில்
வேரூன்ற மாட்டாமல் வீய. (174)
காலையில் காட்சியினில் அரும்பிக்
கழியும் பகற்பொழுதில் போதாய்
மாலை மலர்ந்தஉளக் காதல்
மாடுழக்க வாடுமலர்3 நிமிர்ந்து
வேலைத் திறம்உடையன் விரகால்1
மீண்டும் மிகமணத்தல் போல,
ஆலைக் கரும்பெனஅன் றத்தான்
அவலம்2 அரைக்கப்பயன் படவே. (175)
உவப்பும் உளம்உளையும் துயரும்
ஓங்கிக் கரைகடந்த களிப்பும்
நிவப்ப, உணர்வுபல தொடர்ந்தென்
நெஞ்சை நிலைகுலைத்து மோத,
அவப்பல் நினைவலைக்கத் தளர்ந்த
அகத்தின் உரன்அழித்தங் கிரவின்
தவப்பல் அமைதிஎனை அயர்த்தச்
சயன மிசைஅமர்ந்து துயின்றேன். (176)
தலைவி கனவு
தந்தை மறந்தமுகங் கண்டேன்,
தழையும் உவகையுடன் கனவில்
வந்தென் நுதல்தடவி வாழ்த்தி,
வரன்என் மருகன்உனை வரிப்பன்,
சொந்தன் உன்மாமன்மகன், அன்பில்
தூயோன் தன்தந்தையினும் சான்றோன்
சிந்தை மகிழஅறத் துணையாய்ச்
சிறப்பும் பெறுவை, எனச் சென்றார். (177)
அன்னை, அமுதொழுகு முகத்தள்
அணுகி முகம்அணைத்துன் மாமி
என்னைக் கெடுத்தவள்இன் றிரவில்
என்தங்கை யால்உயிரும் இழந்தாள்,
உன்னை எனதருமை மருகன்
உழுவல் உடன்மணப்பன், உவப்பை.
பின்னை3 நீ, கண்ணன்அவன், என்றும்
பேராத காதலுடன் வாழ்வீர். (178)
என்ன, மகிழ்ந்தெனது நுதலில்
இட்டாள்சிந் தூரப்பொட்டும், எழிலார்
அன்னம்என நடந்து மறைந்தாள்.
அத்தான்தன் வெண்பரிவிட் டிறங்கி,
தன்னந் தனியிருத்தல் மறமா?
தவிக்கும் எனைத்தணத்தல் அறமா?
கன்னங் குழையமுத்தம் இடுவேன்.
கட்டி அணைப்பின்கையை விடுவேன். (179)
துயிலுணர்ந்து தலைவி தன் கனவுக்கு நாணுதல்
என்றென் இருகரமும் பிடித்தார்;
இசைந்து தழுவவிழைந் தென்கை
சென்றந்தச் செம்மல்துயில் மஞ்சச்
சிறுகட் கொசுவலைவெண் திரையை
நன்று தடவ,விழித் தெழுந்து
நான்நாணி ஏமாறி நகைத்து,
நின்ற நிலைப்படி1 மத் தங்கென்
நிலையை விளக்கொளியில் கண்டேன். (180)
சேவல் சிறகடித்துக் கூவ,
சினகர2ச் சங்கினங்கள் சிலம்ப,3
வாவல்4 இருளிடங்கள் தேடி
வானில் விரைந்திரிய, ஊரில்
கூவல்5 தொறுஞ் சிரல்கள்6 குதிக்க,
குருவி குலவிக்குது கலிக்க,
காவல் மறவர்பணி ஓய்ந்து
கக்கத்துக் கம்பிடுக்கி மீண்டார். (181)
வெள்ளை மலரினங்கள் குவிய,
விரிந்து பலநிறஒண் பூக்கள்
கள்ளை உகுக்க,மரந் தோறும்
களித்தெழு புட்கள்கல கலக்க
தள்ளை1ப் பசுத்தொழுவில் கன்றைத்
தான்ஊட்ட அம்மாஎன் றழைக்க,
நொள்ளை2க் குடிஞைமரப் பொந்தில்
நுழையப் புலரி3விளர்த்4 ததுவே. (182)
தலைவன் கனவு காணல்
மஞ்சத்தில் துஞ்சுபவர், கைகள்
மார்பில் மடித்துமலர் முகத்தில்
நெஞ்சம் நிறைந்தபெரு நேயம்
நிருத்தம்இட, மரைஒண் வாயில்
கொஞ்சும் அமுதொழு குதலை
குலவத்தன் அன்னையொடும் கனவில்
கெஞ்சு குரலில்உளம் குழையக்
கிளவி5 சிலமொழியக் கேட்டேன். (183)
நன்றி உணர்வுதுணை யாக
நான்நுமது நண்பு சிறப்புறவு
துன்று மதினி6 மகள் காதல்
தொடர்பின்றிச் சொன்மறுக்கத் துணியாள்
நின்ற துணையில்அவள் நிலையில்
நேர்மை இறந்தவள்மெய் விருப்பை
வென்று மகிழும்வெறி எனக்கு
விளையும் எனநினைப்ப தேனோ. (184)
தம்மைத் தொழுதுமகிழ் உள்ளம்,
தாமென்றும் பேணிமகிழ் தூயள்
செம்மைத்7 திருவுடையள், நுமது
சிந்தை நிறைக்கும்அன்பும் உடையள்.
இம்மை இவள்விரும்பும் இன்பம்
எதனையும் எய்துவிப்ப தல்லால்,
வெம்மை8 என்நன்மையெனும் விழைவு
விளைய இடம்பெறவும் விடுமா? (185)
கன்னல்1 மொழிஇவள்தன் காதல்
கனியாமல் கன்னவைத்தென் அலட்டால்
இன்னல்2 இழைத்திருப்பன் என்னில்
எந்நாளும் நும்மகன்என் றென்னை
முன்னல்3 எனக்கும்அரி தாகும்;
மூரிப் பகட்டை4ப் பெற்றம்5 ஈனும்
என்னல்6, நுமதுமகன் பிழையான்;
ஏமாறி7 நும்மருகி அல்லள். (186)
கண்ட பொழுதவளைத் தங்கள்
காதல் மருகிஎன அறியேன்.
அண்டத்8 தமியள்நிலைக் கஞ்சி
அகன்று பகல்முழுதும் அயர்ந்தேன்.
கொண்ட உளநோயின் கொடுமை
குறைய அவள்உறவும் அன்பும்
விண்ட9 சின் னத்தைதுணை கொண்டு,
மீறும்என் நோய்மருந்தைக் கண்டேன். (187)
வெள்ளத் தலைவிலக்கிக் கரையில்
விடுத்த சிறுசெயலுக் கென்னைக்
கொள்ளக் குறைஇரக்கும் சிறுபுன்
குற்றம் நுமதுமகன் புரியான்;
தள்ளற் கரியமறக் கூற்றம்
தன்வாயில் என்உயிரைப் பிடுங்கி
உள்ளம் உகந்துடைமை கொண்டாள்;
உழுவல் அவளுரிமை உவப்பேன். (188)
அப்பாவின் நன்மதிப்பும் தங்கள்
அன்பும் உரிமைகொண்ட அத்தை
இப்பால் எனக்குத்துணை ஈய
இறைவன் அருள்இரந்திங் கீன்றோள்
தப்பாத காதலறம் தூண்டத்
தன்னை எனக்களித்து மகிழின்,
உப்பாதல்1 என்கடமை அன்றோ?
உள்ளம் அவள்உடைமை என்றும். (189)
என்னின் எனக்கினியள், இறைவன்
என்னுயிரைப் பெண்ணுருகம் ஆக்கிப்
பொன்னின் சிலைபுனைந்து புகுத்திப்
பொருவில் மயில்இயலும் பொருத்தி
மின்னின் இடைநுடங்க நடந்தென்
வெற்றுடல்தன் மெய்விருப்புக் கிணங்க
பின்னின் றியக்கவிடின், எம்முள்
பேதுறுவர்2 யாவரெனப் பேசீர். (190)
காதல் மருகியொடு நேரில்
கலந்தவள் உள்ளநிலை காண்பீர்;
ஓதில் உறவும்உளத் தன்பும்
ஒத்தெங்கள் நன்மைதனை விரும்பும்
கோதில்3 குணத்தர்எங்கள் பாட்டர்,
கோதை இவள்அருமைச் சிற்றாய்
தீதில் உளத்திவரை வினவித்
தேர்வீர்நும் சேய்4செயலும் தெளிவீர். (191)
என்று நகைத்துக்கரம் கூப்பி,
இரண்டு விழிகளையும் குறும்பு
நின்று மறையச் சிறிதச்சம்
நிழலத்5 திறந்துதுயில் உணர்ந்தார்;6.
பொன்றும் இருள்புலரப்7 பொழில்கள்
புள்ஒலிக்கக் கள்ளுகுக்கும் பொழுதில்
சென்று திரைவிலக்கி விழிப்பார்
செய்யமலர்க் கைபிடித்துச் சிரித்து. (192)
தலைமக்கள் உளங்கலந்துவத்தல்
வெள்ளம் விழுங்கவெறுத் திடத்தாம்
விரைந்து கரைவிடுத்தங் ககன்றீர்
உள்ளம் பறித்துவப்பள் ஒருத்தி
உமதத்தை மகள்,என்றென் மாமி
தள்ள முடியாத சான்று
தந்தும் பழிஅகற்றிக் கள்ளி
வள்ளல் உமக்குமண மாலை
மன்றில்இட வைப்பன்என மகிழ்ந்தாள். (193)